உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

இதயத்தைத் தந்திடு அண்ணா

பகுதி 5 · 5 / 13

ஒப்பில்லா வரிகள் உரைத்திடும் பனுவல்

மனோன்மணியும் எனினும் - நம்

மனத்தில் பதித்தவர் அண்ணாவன்றோ!

“மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்”

அரசியல் பண்பினைப் போதிக்கும் அழகே!

“மறப்போம் - மன்னிப்போம்”

மாற்றார் ஏசல் தாங்கிடும் மாண்பே! .

எவர் கற்றுத் தந்தார் இதனை?

சுவர் வைத்துச் சித்திரம் எழுதுதல் போல்

நயமிகு பண்புடன் அரசியல் நடத்தல்

நன்றென்றார் அண்ணா -

அதை மறந்து

நாலைந்து பேர் குதித்திட்டார் என்றால்

அவர் கண்டு சிரித்திட்டார் அண்ணா!

அனைவரையும் ஓர் அன்னை பெற்றெடுக்க

வயிறு தாங்காக் காரணத்தால்

தனித்தனித் தாய் ஈன்றெடுத்த தம்பிகளே! என அழைத்துக்

கனிச் சுவையாய்க் கற்கண்டாய்த் தேன் பாகாய் அன்பு காட்டிப்

பனிமலர் வீழ் தும்பியதாய்த் தழுவிக் கொண்டார்.

சொல்ல வல்லார் சேதுப் பிள்ளைதனைச்

சோமசுந்தர பாரதியைச் சொற் போரில்

சொக்க வைத்தார் - பாவம்; சிக்க வைத்தார்!

நீதிக் கட்சியென்று நெடியமதில் சுவருக்குள்ளே - பணச்

சாதிக்குக் கட்சியாய் இருத்தலாகாதெனும்

கொள்கையாலே - அதனை

வீதிக்குக் கொண்டு வந்தார்!