உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

அணையா விளக்கு அண்ணா

பகுதி 13 · 13 / 13

முடிவுகளை எடுத்துவந்தேன்

இரு சாராருக்கும் உறவு முடிச்சுகளைப் போட்டு வந்தேன்

இறுதிக் கட்டம் என்னைக் கலக்காமலே முடிவெடுத்து

எதிர் எதிராய் நின்றுவிட ஏதேதோ ஆகிவிட்டது!

ஏடுகளில் மட்டுமே அதைப் படித்து இதயம் நொந்தேன் -

மனித நேய உணர்வா, மத வெறிப் பூசலா

எப்பக்கம் நிற்பது என்ற கேள்விக்கு விடை காண;

அணிவகுப்போம் வா என்று அழைத்தது;

அன்புச் சகோதரி சோனியாவின் அரசியல் பாசறை!

அதனால்;

மத நல்லிணக்கம் விரும்பிப் போற்றி

மனித நேயம் மதிக்கின்ற இடத்திலேயே இருந்து விட்டேன் -

மதச் சார்பற்ற அரசொன்று மத்தியிலும் மாநிலத்திலும்

அமைவதற்கு

மக்களைத் திரட்டுவோம்

வாரீர் வாரீர் என்று அழைக்கின்றேன்.

மன்றத்தில் திரண்டிருக்கும் பெருமக்காள்

பெரியார், அண்ணா கனவுகளில் பெரும் பகுதி

நிறைவேற்றம் எனினும்

தடுமாற்றமின்றி தமிழ் மொழியையும்

மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கிட உரத்த குரல் கொடுப்போம்!

போராட்டத்துக்காக கோரிக்கை எழுப்பாமல்

கோரிக்கைக்காகப் போராடிட நல்வழித் தேர்ந்தெடுப்போம்!

எதிர்கால இந்தியா வலிமை பெற

வளம் பெற வலியுறுத்துவோம்!

மாநில சுயாட்சி;

மத்தியிலே கூட்டாட்சி!