திருவாளர் தேசீயம்பிள்ளை
வாசிப்புப் பகுதி 6 · 6 / 7
போ! போ! என் முன் நில்லாதே!
—காந்தியின் கோபம் எல்லைமீறிவிட்டது.
அப்போது ஒரு ஆள் வேகமாக ஓடிவந்து எமனின் காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னான்.
எமன் “ஆ!” என்று அலறிவிட்டான்.
“என்ன? என்ன?” என்று கேட்டார் காந்தி!
இதோ இந்த தேசீயம் பிள்ளை, ஸ்ரீரங்கத்தில் ஸ்வாமி ரங்கநாதரைத் தீயில் போட்டுவிட்டு இங்கு ஓடிவந்துவிட்டானும்!—எமன் கூச்சல் போட்டான்.
“ஆ! ரங்கநாதரைத் தீயில் போட்டானு? விபரமாகச் சொல்லுங்கள்! விபரமாகச் சொல்லுங்கள்!”—காந்தி பதை பதைக்கக் கேட்டார்.
ஆமாம்! இவன் செய்த அக்கிரமங்கள் பொறுக்கமாட்டாமல் ரங்கநாதர் தனக்குத்தானே பற்றி எரிந்துவிட்டாராம்! அந்தத் தீ விபத்துக்குக் காரணம் இந்தத் தேசீயம் பிள்ளைதான் என்று கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாம். அங்கேயிருந்தால் ஆபத்து என்று இங்கே ஓடிவந்திருக்கிறான்!—என்றவாறு எமன் தேசீயம் பிள்ளையை நோக்கித் தன் கதாயுதத்தை ஓங்கினான்.
தேசீயம் பிள்ளை, காந்தியின் கால்களைப் பிடித்துக் கொண்டு அய்யோ! அய்யா! அய்யா! என்னைக் காப்பாற்றுங்கள்! என்று கண்ணீர் வடித்தார்.
எழுந்திரு! எழுந்திரு! என் கால்களைத் தொடாதே! உன் கையிலுள்ள ரத்தக்கறை என் கால்களில் ஒட்டிக் கொள்ளப் போகிறது! என்றவாறு கைகளை உதறிவிட்டு காந்தி எழுந்தார்.
ஆண்டவனின் கோபத்துக்கு ஆளாகி, அவருக்கே உடம்பு எரிச்சலே உண்டாக்கிவிட்டு தீ விபத்துக்குக் காரணமாகிவிட்ட பரம பாதகனாகிய உனக்கு நாகத்திலும் இடமில்லை! எங்கும் இடமில்லை! உன்னை எப்படி மன்னிக்கமுடியும்! எமதர்ம ராஜனே! தயவு செய்து இவனை அழைத்துப் போங்கள்! கொள்வாய்ப் பிசாசு போன்ற இவன் முகத்தைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை. என் இஷ்ட தெய்வமான ரங்கநாதரையே தீயில் வேகவைத்த அநியாய ஆட்சிக்காரனைப் பார்ப்பது மகாபாபம்!
உடனே இழுத்துச் செல்லுங்கள்!
—காந்தி எமனிடம் இந்த வேண்டுகோளை வெளியிட்டவாறு நந்தனை அழைத்துக்கொண்டு வேகமாக உள்ளே போய்விட்டார். தேசீயம் பிள்ளை எமனையே பார்த்துக்கொண்டு நின்றார்.
எமன் “ம் நட! நட!” என்றான். எருமைமாடு, தேசீயம் பிள்ளையின் முதுகில் ஒரு முட்டு முட்டித் தள்ளியது.
எப்பாடி! என்றவாறு தேசீயம் பிள்ளை படிக்கட்டுகளில் உருண்டார்.
உருளுகிறீர்! உருளுகிறீர்! பல படிக்கட்டுகளில் உருளுகிறீர்—உருண்டு கொண்டேயிருக்கிறீர்!—எமன், அவர் உருளுவதைப் பார்த்துக் கலகலவென சிரிக்கிறான்!
அவர் உருண்ட முதல் படி கோவைப் படி—அந்தப் படியிலேயே சரியான அடி!
சமாளித்து எழப்பார்த்தார்—அடுத்த படி ஆம்பூர் படி. அதில் மிகவும் பலத்த அடி!
குடந்தை படியிலும் மோசமான இடி!
ஒரு கயிற்றைப் பிடித்து நிமிர்ந்தார்! எழ முடியவில்லை. மீண்டும் உருளுகிறார்—உருண்டுகொண்டேயிருக்கிறார்!
உருண்டு கொண்டிருக்கும் தேசீயம் பிள்ளையின் மூக்கு சப்பையாகப் போகும் அளவுக்குப் பலமான இடி கொடுக்கிறது, மதுரைப்படி!
அம்மாவோ! வலி தாங்க முடியவில்லையே! என்று கதறுகிறார். வாயை மூடுவதற்குள் உடுமலைப் படியில் உருளுகிறீர். திறந்திருந்த வாயில் உதட்டுக்கு முன் நீட்டிக் கொண்டிருந்த இரண்டொரு பற்கள் கீழே விழுகின்றன.
பணப்பெட்டியொன்றில் கையை ஊன்றி ஆகா! தப்பினேன். கோபிப்படி—என்று பெருமூச்சு விடுகிறார். அடுத்தது பாசிப்படி! பெரிய வழுக்கல்! விழுந்தார்—விழுந்தார்—விருதுநகர் படியில்!
தலையிலிருந்து ரத்தம் குபுகுபுவெனக் கிளப்பிற்று......கால் முறிந்தது! உடம்பெல்லாம் ஊமைக் காயங்கள்!
திருச்சிப் படியில் உருண்டவாறு—அந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தார். நெஞ்சில் முட்டியது தஞ்சைப் படி!
பிரக்ஞை தவறிவிட்டது. கைகால்கள் செயலிழந்துவிட்டன. இருதயம் நின்றுவிடும் போல் தோன்றியது.
—மிக்க கஷ்டப்பட்டுக் கண்களைத் திறக்க முயற்சி செய்தார். விழித்துப் பார்த்தார். பலகணி வழியாக ‘உதய சூரியன்’ ஒளிக் கரங்களே நீட்டினான். “கண்டதெல்லாம் கனவு” என முணுமுணுத்துக் கொண்டார். “கனவு பலித்துவிடுமோ?” என்று சந்தேகம் வேறு; சுற்றும் முற்றும் பார்த்தார்.
அவரது மனைவி காலைக் காப்பியுடன் எதிரே வந்து நின்றாள்.
என்ன ஒரு மாதிரியிருக்கிறார்கள். முகமெல்லாம் மாறியிருக்கிறது! ஏதோ பீதி அடைந்தது போல் தெரிகிறதே? என்று கேட்ட தன் மனைவியின் கையைப் பிடித்துக் கட்டிலில் உட்கார வைத்தவாறு, காப்பியை வாங்கிச் சுடச்சுட அருந்தினார்.
சூடான காப்பி அளித்த சுறுசுறுப்புக்குப்பின் ஆண்டவனே! நான் கண்டதெல்லாம் கனவாகவே முடிய வேண்டும்! எதுவும் நடந்துவிடக் கூடாது என்னப்பனே! என்று அங்கு மாட்டப்பட்டிருந்த பிள்ளையார் படத்தைப் பார்த்துக் கரங்கூப்பித் தொழுதார். வேலைக்காரச் சிறுமி அன்றைய தினசரிப் பத்திரிகைகளுடன் ஓடிவந்தாள். தேசீயம் பிள்ளை அவசர அவசரமாக அப்பத்திரிகைகளைப் பிரித்துப் பார்த்தார்.
அய்யோ!—அறியாமலே அலறிவிட்டார்.
என்ன? என்ன? யாராவது செத்துவிட்டார்களா?—அவரது மனைவி ஆவலோடு கேட்டாள்.
இல்ல! கோவை, மதுரை, விருதை, எல்லா இடங்களிலும் காங்கிரஸ் படுதோல்வி! படுதோல்வி! வெட்கக்கேடு! வெட்கக்கேடு!! என்று நாத்தழுதழுக்கப் புலம்பினார் தேசீயம் பிள்ளை.
நல்லாத்தோற்றுப் போகணும்! செம்மையா அடி வாங்கணும் உங்களது காங்கிரஸ்! என்று மகிழ்ச்சிபொங்கக் கூறினாள் மனைவி.
ஏண்டி உனக்குப் பொறாமை? ஏன் தோற்க வேண்டும் காங்கிரஸ்? சொல்லடி, சொல்லு!
உங்க காங்கிரஸ் ஆட்சியிலே படி அரிசி என்னவிலை? காய்கறிக்குக்கூட கிராக்கி வந்த காலம் எப்போதாவது உண்டா! அரையணா செலவிலே ஏழை பாழைகளுக்கு உற்சாகம் தருகிற வெற்றிலைப் பாக்குக்குக்கூடப் பஞ்சம் வந்துவிட்டதே, பாவிகள் ஆட்சியில்! நோயாளிகளுக்குப் பழம் கிடைக்கவில்லை! கிடைத்தாலும் ஒன்றுக்கு மூன்று விலை! எல்லாவற்றுக்கும் வரியைப் போட்டுத் தீட்டி விட்டார்கள்!
