உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
திருவாளர் தேசீயம்பிள்ளை/வாசிப்புப் பகுதி 4
நாடகங்கள்

திருவாளர் தேசீயம்பிள்ளை

வாசிப்புப் பகுதி 4 · 4 / 7

ஆமாம்—அதே நிறந்தான் வரியின் நிறமும்!

சரி—வரியினால் என்ன நன்மை?

மக்கள் பெருக்கம் குறையும்; நாட்டில் ஜன நெருக்கம் தேய்ந்து கலகலப்பாக இருக்கும்!

அப்படிப்பட்ட வரியை எமலோகத்திலும் அமுலுக்குக் கொண்டுவந்தால்......?

இங்கும் நெருக்கடி குறைய வழி ஏற்படும்?

உங்கள் ராச்சியத்தில் வரிபோடுவதில் வல்லவர்கள் யார்?

நானேதான்! நான்தான் இங்கு வந்துவிட்டேனே?

குறிப்பாக எந்தெந்தப் பொருள்கள்மீது வரி போடலாம்?

அழுகும் பொருள்களின் மீது வரி போடுவது காலஞ்சிறந்தது!

எங்கள் நாட்டில் அழுகும் பொருள்கள் என்ன? (யோசித்து) ஓ! பிணங்கள்! பிணங்கள்! வரிபோடலாம்!

உங்கள் நாட்டு அழுகும் பொருள்களான பிணங்களுக்கு வரிபோடுகிறேன் என்கிறீர்களே; அதில் எதிர்ப்பு ஒன்றும் ஏற்படாதே?

எதிர்ப்பா? வரிபோட்டால் எதிர்ப்புக்கூட ஏற்படுமா? எமதர்மன் ராச்சியத்தில் எதிர்ப்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?

என்ன தண்டனை?

உடனடியாக அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்; அதோடு முடியாது, தண்டனை; பூலோகத்தில் மீண்டும் பிறந்தாக வேண்டும். அதுமட்டுமல்ல; அவர்கள் தேர்தலில் அபேட்சகர்களாக நின்று பணம் கொடுத்து ஓட்டு வாங்கித் தங்கள் தோல்வியைக் காப்பாற்றிக் கொண்டாக வேண்டும்!

சரி; எங்கள் நாட்டில் போட்டியில்லாமல் சிலபேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களே; அவர்கள் எல்லாம் தங்கள் தண்டனை பெறுதவர்களா?

அவர்கள் கட்டவேண்டிய காணிக்கையை இங்கேயே கட்டிவிட்டார்கள்!

தாங்கள் குறிப்பிடும் அபேட்சகர்கள் காங்கிரஸ் அபேட்சகர்களா? அல்லது வேறு கட்சியா? அல்லது சுயேச்சையா?

சுயேச்சைகளைப்பற்றி ஏனய்யா இங்கு பேசுகிறீர்? அந்த சுயேச்சைகளுக்குத்தான் குடி, சொரணை, நன்றி, விசுவாசம் எதுவுமே கிடையாதே!

அய்யய்யோ.........எல்லா சுயேச்சைகளுமா அப்படி? இல்லை! இல்லை! ஏதோ... ஒன்றிரண்டு... கும்பகோணம் போலிருந்தால்...

போகட்டும். பிண வரிக்குப் பிறகு எந்த வரி போடலாம்? அந்த யோசனையையும் சொல்லும்!

எங்கள் தேசத்தில் போடாமல் இருக்கிற வரிகளை மட்டுமே விரல்விட்டுச் சொல்லமுடியும். போட்டிருக்கிற வரிகளின் பட்டியலில் ஞாபகப்படுத்திக் கூறுவது மிகவும் சிரமம்!

அப்படி வரி போடப்படாத பொருள்கள் என்னென்ன?

அத்திப் பூ! குதிரைக் கொம்பு! சேவல் முட்டை! இதுபாதி பொருள்களுக்கு எங்கள் நாட்டில் வரி விலக்குச் செய்யப்பட்டிருக்கிறது.

சபாஷ்! அவைகளுக்கும் சேர்த்து நான் இங்கே வரிபோட்டுவிடுகிறேன், தேசீயம் பிள்ளை! மிகவும் நன்றி! இன்றைய நமது பேட்டி எமலோகத்தின் முன்னேற்றத் திட்டங்களுக்குப் பயன்பட்டதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். ஒன்று கேட்க மறந்துவிட்டேனே; உங்கள் ராச்சியத்தில் “ஐந்தாண்டுத் திட்டம்” என்ற ஒரு பெரிய மந்திரவாதி இருக்கிறாராமே; அவர் மிகவும் கெட்டிக்காரர்தானா? அவரை இங்கு அழைத்து வரலாமென்று பொதுவாகவே ஒரு அபிப்ராயம் உலவுகிறது—அழைத்துவரத் தகுதி உடையவர்தானா?

அவர் இன்னும் இங்கு வரவில்லையா? எனக்கு முன்பே இங்கு வந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன்...!

இல்லை! இல்லை! உம்மைக் கேட்டுக்கொண்டுதான் அழைத்து வரலாமென்று எண்ணம்.

பெரிய மந்திரவாதிதான்! பெயரைக் கேட்டத்தான் பயமாயிருக்குமே தவிர, ஆளைப் பார்த்தே மானால் தேவாங்குமாதிரி இளைத்துப் போயிருப்பார்! அவருக்கு யானைப் பசி வியாதி வேறு!

ஆயிரக்கணக்கில்—நூற்றுக்கணக்கில் எதையும் சாப்பிடுவது இல்லை. எல்லாம் கோடிக்கணக்கில்தான் வயிற்றில் போட்டு அடைப்பார். அவர் எங்கள் ராச்சியத்தில் ஆஸ்தான மந்திரவாதியாக இருப்பதால் ஊழல் என்னும் தொத்து வியாதி எங்கும் பரவுகிறதே தவிர, பயன் ஒன்றும் கிடையாது. தயவு செய்து அவரை இங்கு அழைத்துக்கொள்ளுமாறு நான் பலத்த சிபாரிசு செய்கிறேன்!

ஊழல் வியாதிக்காரரா? அடடே இதுவரை தெரியாமல் போனதே! வரியினால் ஜன நெருக்கடியைக் குறைப்பதைக் காட்டிலும் ஊழல் வியாதியினால் கணிசமான அளவுக்கு ஜன நெருக்கடியைக் குறைக்கலாமே...! பலே! பலே! நாளைக்கே நான் அவருக்கு ஆள் அனுப்புகிறேன்!

அனுப்புங்கள்! ஒருவர் வந்தாலும் மற்றபடி ஊரைப் பார்த்துக்கொள்ள அவர் குடும்பத்தில் வரிசையாக குழந்தைகள் இருக்கிறார்கள். இரண்டாவது, மூன்றாவது என்று ஐந்தாண்டுத் திட்டக் குட்டி மாயவிகள் ஏராளமாக இருக்கிறார்கள்!

இன்றைய நமது பேட்டி இனிது முடியட்டும்—உமக்கு ஏதாவது தேவைகளிருந்தால் தெரிவிக்கலாம்.

தேவை யொன்றும் பிரமாதமில்லை. என்னை இந்த உல்லாச மண்டபத்திலிருந்து விடுவிக்க வேண்டும். அடுத்தபடியாக நான் மகாத்மா காந்தியைச் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் தர வேண்டும்!

அவசியம் காந்தியைப் பார்த்தாகவேண்டுமா? அவர் சொர்க்கமெனும் பாதாளச் சிறையில் அல்லவா கிடக்கிறார்? அந்த மூன்றாம் வகுப்புக் கைதியை நாகலோகத்து முதல் வகுப்புக் கைதியாகிய நீர் சந்திப்பது இயலாத காரியமாயிற்றே!

எப்படியோ கிருபை செய்ய வேண்டும்—காந்தி மகானை நான் பார்த்தால் தான் ஆவல் தீரும்!

சரி; ஏற்பாடு செய்கிறேன்!—புறப்படும் என்னோடு