உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
திருவாளர் தேசீயம்பிள்ளை/வாசிப்புப் பகுதி 3
நாடகங்கள்

திருவாளர் தேசீயம்பிள்ளை

வாசிப்புப் பகுதி 3 · 3 / 7

என்ன தேசீயம்பிள்ளை! உபசரிப்புக்கள் எல்லாம் சரிவர நடந்ததல்லவா?—எமன் கேட்டான்.

ஆகா! நன்றாக நடந்தது. உபசரிப்பின் உச்ச கட்டமே ஆகாஷவாணியின் பிரவேசம்தான்! ஆகா! ஆகா! வர்ணிக்கவே முடியாது!—தேசீயம்பிள்ளை உற்சாகத்தோடு பதில் கூறினார்.

உம்மோடு நீண்டநேரம் பேட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தும் நிறைவேற இயலாது போய்விட்டது. குறுகிய காலத்திலேயே நமது பேட்டி முடியும்!—எனக் கூறிய எமன், தளபதியைப் பார்த்து, நீர் உடனே சென்று இன்று நமது சபை கூடுவதற்கு வசதியில்லை; ஏனெனில் “வரி”யைப்பற்றிய விளக்கம் தெரியாமல் கூடிப் பயனில்லை—ஆகவே, நாளைக் காலையில்தான் சபை கூடும் என்று அறிவித்துவிடும்—என ஆணையிட்டான்.

தளபதியும் உடனடியாக சிரசாசனம் செய்து வணக்கம் தெரிவித்துவிட்டு அகன்றான்.

எமன், தேசீயம்பிள்ளை பேட்டி துவங்குகிறது.

உமது தந்தையின் பெயர் என்ன?

இது தெரியாதா? ஹியூம் என்ற பிரசித்திபெற்ற ஆங்கிலேயப் பிரபுதான் என் தந்தை!

ஆங்கிலேயரின் மகனா நீ? பிறகு எப்படி உனக்குத் தேசீயம் பிள்ளை என்று பெயர் வந்தது?

மகாத்மா காந்தி என்னை எடுத்து வளர்த்தார். அவர் வைத்த பெயர் தேசீயம் பிள்ளை!

உங்கள் நாட்டில் கீரிப்பிள்ளை என்பது யார்?

அது ஒரு பிராணி! பாம்புக்கு விரோதி!

நீரும் பிள்ளைதானே; நீர் யாருக்கு விரோதி!

ஹி ஹி ஹி!

தென்னம்பிள்ளை கூட உங்கள் ராச்சியத்தில் உண்டல்லவா?

ஆமாம்; அதுதான் பூலோகக் கற்பகவிருட்சம்!

ஒரு பிள்ளை பிராணி; இன்னொரு பிள்ளை, மரம்! சரி; போகட்டும்—அணில்பிள்ளை என்பது என்ன?

அதுவா? அதுதான் ராமருக்காகப் பாலம் கட்டிய ஜந்து.

ஓ! உங்க நாட்டிலே அணில்கூட பாலம் கட்டும்! அரசாங்கம் கட்டாதோ?

ஹி ஹி ஹி!

இருக்கட்டும்! கிளிப்பிள்ளை என்றால் என்ன?

அதுவா; அது சொன்னதையே சொல்லும் ஒரு பறவை!

என்ன சொல்லும்—ஆகட்டும்; பார்க்கலாம்! ஆகட்டும்; பார்க்கலாம்!—என்று தானே?

ஹி ஹி ஹி!

தேசீயம் பிள்ளை என்கிறீரே; நீர் இந்த நான்கு பிள்ளைகளைவிட எந்த விதத்தில் உயர்ந்தவர்?

நான் உயர்திணை; அவைகள் அஃறிணைப் பிராணிகள்! வெறும் உயிர்கள்! பகுத்தறிவு இல்லாத ஜந்துக்கள்!

பகுத்தறிவு என்றால் என்ன?

சிக்கலான கேள்வி! பூலோகத்திலே அந்த கழகத்துக்காரர்கள் என்னைப் பார்த்துக் கேட்கும் கேள்வியைத் தாங்களும் கேட்கிறீர்கள்—செத்தும் விடவில்லையே எனக்குச் சங்கடம்?

செத்துவிட்டமா? யார் சொன்னது அப்படி? பொய் சொல்லாதீர்! வெறும் பார்வையாளராகத்தான் இந்த நாட்டுக்கு வந்திருக்கிறீர். இந்த நாட்டு பிரஜையாக உம்மை யாரும் அங்கீகரிக்கவில்லை! உம்முடைய நடவடிக்கைகளையும் பூர்வோத்திரத்தையும் பார்த்துதான் உம்மை இந்நாட்டு பிரஜையாக்குகிற விவகத்தைச் சபையிலே கொண்டுவர வேண்டும்! அதிருக்கட்டும்; முதலில் வரியைப் பற்றிய விளக்கத்தைச் சொல்லும்!

‘வரி’ என்றால் எங்கள் ராச்சியத்தில் காங்கிரஸ் என்று அர்த்தம்!

காங்கிரஸ் என்றால்?

தியாகம் என்று அர்த்தம்!

தியாகம் என்றால்?

பதவி, பர்மிட், லைசென்ஸ் இப்படிப் பல அர்த்தங்கள்!

‘வரி’ என்பது கருப்பு நிறமா? சிவப்பு நிறமா? அதன் உண்மை நிறமென்ன?

வரிக்கு ஒரு நிறமா? இரு நிறமா? அது பஞ்ச வர்ணங் கொண்டதல்லவா?

பஞ்சம் என்றால் தரித்திரம் என்பார்களே?