சாக்ரடீஸ்
காட்சி 3 · 3 / 5
வேண்டாம் நண்பனே, வேண்டாம் ...! நான் எங்கே போகிறேன்?நீதிமன்றத்திற்குத்தானே! கொலைக்களத்திற்கு அல்லவே!....என்னைப் போகவிடு! கருத்திலே தெளிவும் கொள்கையிலே வலிவும் இருக்கும்வரை விசாரணைக்கும் வழக்கிற்கும் விவேகிகள் பயப்படத் தேவையில்லை. போகிறேன். அறிவுப்பாதை காட்டுவோரை அழிவுப்பாதைக்கு விரட்டும் அநியாயக்காரர்களை நேரடியாகச் சந்தித்துப் போர் தொடுக்கப் போகிறேன்.
(சிப்பாய், சாக்ரடீசை இழுத்துச் செல்கிறான்.)
நீதிமன்றம் (ஐநூறு பேர் கொண்ட ஏதெனிய நீதிமன்றம் கூடியிருக்கிறது. மரத்தினால் செய்யப்பட்ட பெஞ்சுகளில் நீதிபதிகள் அமர்ந்திருக்கிறார்கள். ஒரு சில பலகைகள் பாயினால் மூடப்பட்டிருக்கின்றன, நீதிபதிகளும் பொது மக்களும் இடையிலே அமைக்கப்பட்டுள்ள சிறுசிறு கம்புகள் பிரிக்கின்றன. மன்றத்தின் வலது புறத்திலே நீதி மன்றத் தலைவரின் ஆசனம் இருக்கிறது. அதன் பக்கத்திலே ஒரு ஆசனம். அதில்தான் இரண்டு கட்சிக்காரர்களும் பேச வேண்டியபோது வந்து பேச வேண்டும்.
இடதுபுறத்தில் தனித்தனியே உள்ள இரண்டு ஆசனங்களில் கட்சிக்காரர்களும் — அவர்களின் சாட்சிகளும் காட்சி தருகிறார்கள். 'Hedge Log' என்ற பெட்டியிலேயுள்ள முத்திரை உடைக்கப்பட்டு, குற்றப்பத்திரிகைகள் கொட்டப்படுகின்றன. குற்றப் பத்திரிகைகளைக் குமாஸ்தா படிக்கிறான்.)
“பித்தன்ஸ்பேட்டைச் சேர்ந்த மெலிடயசின் குமாரன் மெலிடயஸ், அலோபிசில் உள்ள சோபரன்னிஸ்கோவின் குமாரன் சாக்ரடஸ் மீது கீழ்க்கண்டவிதமாகக் குற்றம் சாட்டுகிறான். இந்த நாடும் இந்த அரசாங்கமும் ஒத்துக் கொண்ட கடவுள்களை சாக்ரடஸ் ஒத்துக்கொள்வதில்லை. இளைஞர்களை உபதேசம் செய்து கெடுக்க முயலுகிறான். கெடுத்தும் வருகிறான். அவனுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்.”
(அனிடஸ், லைகன் இருவரும் மெலிடசைப் போலவே சாக்ரடஸ் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.)
சாக்ரடஸ்!....நாட்டில் நடமாடக்கூடாத ஓர் ஆத்மா!..... ஜனநாயக அரசாங்கத்தைக் குறை கூறும் அந்த ஜந்து, உடல் முழுவதும் விஷங்கொண்டது!........ கேட்டார்ப் பிணிக்கும் சொற்களால்—கேளாரும் வேட்ப மொழியும் வார்த்தைகளால்—சேடுமலியும் கருத்துக்களை அள்ளி வழங்கி அரசாங்கத்திற்கு விரோதமாக, சட்டத்திற்கு விரோதமாக இளைஞர்களைத் தூண்டிவிடும் இழிகுணக்கிழவன்!
(சாக்ரடஸ் சிரிக்கிறான், கலகலவென்று.)
என்ன சிரிப்பு? என்ன காரணம்?
ஒன்றுமில்லை, தலைவ!....... ஆத்திரத்திலே அனிடஸ் — தன்னை மறந்து என்னைப் பார்த்துக் கிழவன் எனக் கேலி புரிகிறார். அதை நினைத்தேன்—சிரித்தேன்! கடல்நுரை போல் நரை விழுந்துவிட்ட தலை, எனக்கும்—அனிடசுக்கும்!....இல்லையா, சபையோர்களே!....என்ன அனிடஸ், உண்மைதானே?
சாக்ரடீஸ்!....வழக்கும் விசாரணையும் உங்கள் இருவரின் தலையைப் பற்றி அல்ல! ...அதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்,
மிகவும் நன்றி, மெலிடஸ்!....ஆனால் ஒன்று!....எண்சாண் உடம்பிற்குத் தலையே பிரதானம் போல்....இந்த வழக்கிற்கும் தலையே பிரதானம்! என் தலையிலேயிருந்து சுடர் விட்டுக் கிளம்பும் அறிவு—அதை அழிக்க உன் தலையிலேயிருந்து புறப்படும் அர்த்தமற்றக் கற்பனைகள்-அனிடசின் தலையிலேயிருந்து பீறிட்டெழும் அரசியல் ஆணவம்—இந்த மூன்றுக்குமிடையே நடைபெறும் மும்முனைப் போராட்டம்—அதன் விளைவுதான் மெலிடஸ், இந்த வழக்கு!
சாக்ரடீஸ்! உம்மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களுக்கு நீர் சொல்லும் சமாதானமென்ன?
என் சமாதானங்களைக் கேட்டு இளகாத சட்டம் கூட இரக்கம் காட்டலாம்—ஆனால், இந்தச் சபை எனக்காக இரங்குமா?
பார்த்தீர்களா, கட்டத்தையும் சபையையும் அவமதிக்கிறான்! இப்படித்தான் இளைஞர்களையெல்லாம் கெடுத்தான்!
இளைஞர்களை ஒரு கிழவன், எப்படியப்பா கெடுக்க முடியும் ?....நானென்ன, வாலிபர்க்கு வலை வீசும் விலை மாதா ?.... பருவ விருந்தளிக்கும் பாவையா ?
மாதரிடம் இல்லாத மயக்குமொழி....வாலிபர்க்கு வலை வீசும் வனிதையரும் பெற்றிடாத வசீகரச் சொல் அலங்காரம்—வார்த்தை ஜாலம்—அடுக்குத் தொடர்—இப்படிப்பல மாயங்கள் கற்றவர் நீர்!........
மந்திரவாதி என்றுகூடச் சொல்வாய் !........அன்புள்ள இளைஞனே!....இளைஞர்களை நான் செடுக்கிறேனா? இல்லை அவர்களாக வந்து கெடுகிறார்களா ?
நீரே வலியச் சென்று கெடுக்கிறீர்!........சந்தை கூடும் இடங்களிலே, சந்து முனைகளிலே, சாலையோரங்களிலே, நடுத்தெருக்களிலே, நாலுபேர் சேருகிற மர நிழல்களிலே உமது பிரசங்கம் நடைபெறாத நேரமே கிடையாது!
ஏதென்சு நகரத்திலே நான் ஒருவன்தான் இளைஞர்களைக் கெடுக்கிறேன்....இல்லையா?
ஆமாம்.
நீ கெடுக்கவில்லை?
இல்லை!
அனிடஸ்?
இல்லை!
