சாக்ரடீஸ்
காட்சி 2 · 2 / 5
இப்படி விண்ணைப் பற்றியும் மண்ணைப் பற்றியும் பேசிக்கொண்டு, உம்மை நம்பி வந்த பெண்ணை நட்டாற்றில் விட்டுவிடும்....(தனக்குத்தானே கோபமாக) அடி, எக்ஸேந்திபி உனக்கு ஏண்டி இந்த வம்பு !....
எப்படியாவது கெட்டுத் தொலை! .... ஒழிந்து போ! .... இந்த தரித்திரம் பிடித்த வீட்டைவிடச் சுடுகாடு எவ்வளவோ மேல் !....இந்தத் தர்க்கவாதியைக் கட்டிக்கொண்டு அழுவதைவிடக் கழுத்தில் ஒரு சுருக்குக் கயிற்றைக் கட்டிக்கொண்டு சாகலாம் ! சாகலாம் ! .... சாகலாம் ! ....
(பேரிரைச்சல் போட்டபடி உள்ளே போகிறாள். அவள் போனதும் சாக்ரடீஸ் சிரித்துக் கொண்டே, மற்றவர்களைப் பார்த்து....)
அப்பாடா, இடி இடித்து ஓய்ந்தது... மின்னல் வரும்போதே தெரியும், இப்படி இடி இடிக்கும் என்று!....இளைஞர்களே!.... இலட்சியவாதிகளுக்கு இப்படி எத்தனையோ இடையூறுகள்!... வீட்டிலே இதுபோல்! .... நாட்டிலோ, கேட்கத் தரமில்லை ! அரசியல்வாதி அனிடஸ் தன் அக்கிரமங்களைச் சுட்டிக் காட்டும் சூழ்நிலை எதுவுமே முளைக்கக் கூடாது எனக் கருதுகிறான். கற்பனை உலகத்தைச் சிருஷ்டித்துக் களிப்படையும் மெலிடஸ்; கற்களிலே, உலோகங்களிலே சிலைகளை வடித்துக் காட்டிச் சிறப்படையும் லைகன்—இவர்களெல்லாம் எனது அறிவுப் பிரச்சாரத்தால் அஸ்திவாரமே ஆட்டங் கொடுக்கிறதென ஆத்திரப்படுகிறார்கள்........
கிரேக்கத்தின் கீர்த்தி, புவனமறியாததல்ல ! அதற்காக இங்கு விழுந்திருக்கும் கீறல்களை மறைத்திட முயல்வது, புண்ணுக்குப் புனுகு தடவும் வேலையைப் போன்றது ! ....... அதனால்தான் தோழர்களே ! சிந்திக்கக் கற்றுக்கொள்ளுங்கள் எனச் சிரந்தாழ்த்தி உங்களை அழைக்கிறேன். அறிவு ! அகிலத்தின் எந்த மூலையிலிருந்தாலும் அதைத் தேடிப் பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன்!.... “உன்னையே நீ அறிவாய்!”
இந்த உபதேசத்தின் உண்மையை உணர்வதற்காக என் உயிரினுமினியவர்களே! உங்களை எல்லாம் அழைக்கிறேன்....
(அப்போது எக்ஸேந்திபி ஒரு பாத்திரத்திலே தண்ணீரைக் கொண்டுவந்து, சாக்ரடீசின் தலையில் கொட்டுகிறாள்)
ஆ ! என்ன இது ? என்ன இது ?....
பதறாதே கிரிட்டோ ! .... ஒன்றுமில்லை !.... முதலில் மின்னல் கண்டாய்; பிறகு இடி இடித்தது, மழையும் பெய்கிறது..... அவ்வளவுதான் !.....
(இளைஞர்களும் கிரிட்டோவும் சிரிக்கிறார்கள். எக்ஸேந்திபி கோபத்தோடு உள்ளே போகிறாள்.)
*
(அனிடஸ், மெலிடஸ், லைகன் மூவரும் ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.)
குமுறும் எரிமலை! கொந்தளிக்கும் கடல்! இவைகளை விடப் பயங்கரமானவன் சாக்ரடீஸ்!.....அறிவாயுதமாம்..... அனைத்துலகும் அடிபணியும் அஸ்திரமாம்!.....அந்த ஆயுதம் கிரேக்கத்தில் தயாராகுமானால், நாம் தலைதூக்கவே முடியாது மெலிடஸ்! என்ன சொல்கிறாய், லைகன்?.....
நான் கல்லுக்குக் கடவுள் உருவம் தரும் சிற்பி!..... ஒரு காலத்திலே இந்த சாக்ரடீசும் என்னைப்போலச் சிற்பிதான்! இப்போதோ அவன் சிந்தனைச் சிற்பியாக மாறிவிட்டான்....பரவாயில்லை. கல்லைக் கடவுளாக்கும், நானும் கற்பனை மூட்டைகளுக்குத் தெய்வீக மெருகு தரும் கவிஞனாம் மெலிடசும், அரசியல் நிபுணனாம் நீயும் ஒன்றுசேர்ந்து விட்ட பிறகு.... சாக்ரடீஸ்—சமுத்திரத்துத் துரும்புதானே; அனிடஸ்.....!
சபாஷ் லைகன், சபாஷ்.....! பொதுமக்கள் கழுதைகளாயிருந்தால்தான் நாம் தூக்கி வைக்கும் பொய்மூட்டைகளைச் சுமப்பார்கள்! குருடர்களாய் இருந்தால்தான் நாம் காட்டுகிற வழியிலே நடப்பார்கள்! நாம் கீறிய கோட்டைத் தாண்டாத கிரேக்க மக்களுக்கு அந்தக் கிழவன் அறிவுக்கண் வழங்குவதற்குள் அவனை நாம் அழித்துவிட வேண்டும்........
(மூவரும் ஒரு முடிவோடு புறப்படுகிறார்கள்.)
*
(சந்தை வெளியிலே சாக்ரடீஸ் பேசிக்கொண்டிருக்கிறான்.)
சந்தையிலே பொருள் வாங்கும்....விந்தை மனிதர்காள்! அங்கெல்லாம் கிடைக்காத அரும்பொருள், நானொன்று வைத்திருக்கிறேன். விலை மதிக்கவொண்ணா வைரம்! ஆராய்ச்சி என்னும் ஆழ்கடலில் குளித்தெடுக்கும் ஒளி முத்து! அங்காடிக் கடையிலே அகப்படாத பொருள்! அறிவு! அறிவு! இந்த அதிமதுரப் பொருளை வாங்க வாரீர்! வாரீர்!
(கிரேக்கத்துச் சிப்பாய் வருகிறான்.)
நிறுத்து உன் பிர சங்கத்தை!........
நான் நிறுத்தினாலும் அதைத் தொடர்ந்து நடத்த என் தோழர்கள் பலர் இருக்கிறார்களே!
தெகிடுதத்தம் பேசாதே! நீ வாலிபர்களைக் கெடுக்கிறாய்; நடுத்தெருவில் பைத்தியம்போல் புலம்புகிறாய்!
உன்னை, என்னிடம் அனுப்பியவர்களிடம் போய்ச்சொல்.... ஆடு மேய்ந்து அழிந்துவிடும் அருகம்புல் அல்ல, புத்துலகு சமைப்போரின் போதனை என்பதை! கருத்தொளி காட்டுக் குதிரையல்ல தம்பி, அதிகாரக் கடிவாளமிட்டதும் அடங்கி ஒடுங்கிவிட!....
அதிகப்பிரசங்கியாரே! உமது பேச்சை நாளை நீதிமன்றம் கேட்கட்டும்! வாரும் என்னோடு, இப்போது!
(இழுக்கிறான், சாக்ரடீசை)
இது என்ன அக்கிரமம்! எங்கு இழுத்துச் செல்கிறாய், தள்ளாத வயதில்....எங்கள் அறிவுத் தங்கத்தை — விடு வீரனே, விடு!....
