உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 4 · 4 / 38

சரி யண்ணா!

சாத்தனரே சொல்லுங்கள், கண்ணகி கதையை...

[சாத்தனார் அங்குள்ள புலிக்குட்டியைத் தடவிக் கொடுத்தவாறு கதையைத் துவங்குகிறார்...]

[இளங்கோவடிகள் எழுதத் தொடங்குகிறார்.]

[புலிக் கொடி பறக்கிறது. சாத்தனரின் குரலுடன் காட்சி மாறுகிறது....

பூம்புகார்ப் பட்டினக் காட்சிகள் துவங்குகின்றன.]

காவிரி யாறும், கடலும் முத்தமிட்டுக் கொள்ளும் இடத்தில் அமைந்துள்ள அழகுத் திருநகராம் பூம்புகார் பட்டினம்! புலிக் கொடியின்கீழ் ஆட்சி நடத்தும் சோழப் பேரரசின் தனிப்பெருந் திலகராம்!...

[சாத்தனார் குரலுடன் பூம்புகார்க் காட்சிகள்]

காவிரியாறும் கடலும் முத்தமிட்டுக் கொள்ளும் இடத்தில் அமைந்துள்ள அழகுத் திருநகராம் பூம்புகார்ப் பட்டினம்! புலிக் கொடியின்கீழ் ஆட்சி நடத்தும் சோழப் பேரரசின் தனிப்பெருந் தலைநகரம்—ஆங்கே ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர விழா பெருமை வாய்ந்த திருவிழா!

கடற்கோளுக்கு முன், கடாரம் வரை பரந்து கிடந்த சோழ மண்டலத்து மூதாதையொருவன் - இந்திரன் என்னும் பழந்தமிழன் - அவன் நினைவாக நடைபெறும் எழுச்சி விழா!

அவ் விழாவில் நகர மாந்தரும் வெளிநாட்டு வணிகப் பெருமக்களும் பங்கு கொண்டு ஆடிப்பாடி மகிழ்வர்...

பட்டினப் பாக்கம், மருவூர்ப் பாக்கம், நாளங்காடி எனப் பிரிக்கப்பட்டுள்ள பூம்புகாரின் முப்பகுதிகளிலும் மகிழ்ச்சிக் கூத்து!... கரிகால் சோழனுக்கு அவந்தி மன்னன் பரிசாக அளித்த தோரண வாயில்!...

வச்சிர நாட்டு மன்னன் காணிக்கையாகத் தந்த முத்துப் பந்தல்! மகத தேசத்து வேந்தன் கப்பமாக அளித்த பட்டிமண்டபம்! எங்கெங்கும் இன்பப் பெருவெள்ளம்! வீதிகளில் பூரண கும்பம்! பொற் பாவை! பாவை விளக்கு!—எங்கும் விழாக் கோலம்! தெருவெல்லாம் தமிழ் முழக்கம்!

“ஞாயிறு போற்றுதும்........ “திங்களைப் போற்றுதும்........... “மாமழை போற்றுதும்........

[சிலப்பதிகாரப் பாடலும், மகளிர் ஆட்டமும்]

[சாத்தனரின் குரல் தொடர்கிறது]

பூரிப்பு மலிந்த அந்த நன்னாளில் புகார்ப் பட்டினத்துக் கடற்கரையின் வெண் மணல் திட்டின் மீது தன்னந்தனியே நின்று, அலைகடலில் ஆவலோடு எதிர்நோக்குகிறாள்; ...மழை நிகர் கொடை வள்ளல் மாநாய்கன் திருச்செல்வி ஈகைவான் கொடியன்னாள் இணையற்ற பேரழகி...போதிலார் திருவினாள் ......

மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெருங் குணத்துக் காதலாள்—பெயர் மன்னும் கண்ணகி யென்பாள் மன்னே!

[கண்ணகி நிற்கின்ற காட்சி! அவள் கடல் மீது விழியோட்டுகிறாள். கப்பல். வருங் காட்சி! கண்ணகி முகத்தில் உற்சாகம். வந்த கப்பல் சிறிது தொலைவில் நிற்கிறது...கப்பலில் இருந்தோர் சிறுசிறு படகுகளில் ஏறி, கரைப்பக்கம் வருகின்றனர். அவர்களில் கிரேக்கர், ரோமானியர் முதலிய வெளிநாட்டினரும் இருக்கின்றனர்.

கோவலனும் அவனுடன் ஒரு கிரேக்கத்துக் கிழவனும் வருகின்றார்கள், சிறிய படகொன்றில் ஏறிக்கொண்டு!

படகு வருவதைக் கண்டு கண்ணகி துடிப்புடன் படகு நோக்கிக் கடலில் நடக்கிறாள்; அலைகளைப் பொருட்படுத்தாமல்!

கோவலனும் படகில் இருப்புக் கொள்ளாமல் தவிக்கிறான்!

யார் அந்தப் பெண்? இவ்வளவு துணிவோடு கடலில் சதிராடுகிறாள்?

அவள்தான் என் வாழ்க்கைத் துணைவி; கண்ணகி!

ஆகா...உன் துணைவி! தமிழ் நாட்டு முத்துக்களைப் போலவே தமிழ்நாட்டுப் பெண்களும் அழகிகள் தான்! ஆகா! எங்கள் கிரேக்க நாடு இதுவரை இப்படியொரு அழகியைப் படைக்கவே இல்லை!

[கண்ணகி கடலில் மூழ்கி மூழ்கிப் படகிடம் வருகிறாள். கோவலனும், துடிப்போடு படகிலிருந்து குதித்துக் கண்ணகியிடம் வருகிறான். இருவரும் அலைகளால் தழுவப்பட்டுத் தாங்களும் தழுவிக் கொள்கிறார்கள்.]

கண்ணகி!

எத்தனை நாளத்தான் எண்ணியிருந்தீர்கள்; என்னையிப்படி தனியே தவிக்கவிட!

தனிமை எனக்கு மாத்திரம் இனிமையாகவா இருந்தது! தங்கமே...இந்தா... உனக்காகக் கிரேக்கத்தில்வாங்கிவந்த பரிசு!

[தந்தத்தால் ஆன ஒரு அழகிய பொருளைத் தருகிறான் ]

தமிழ்நாட்டு யானைத் தந்தம் கிரேக்கக் கலைஞர்கள் கைபட்டு எவ்வளவு நேர்த்தியாக மாறி இருக்கிறது, அத்தான்!

தமிழகத்து மயில் தோகைகள் ஆடையாக உடுத்திக்கொண்டு, கலாப நடையிலும், கட்டழகிகள் ஏராளம், கிரேக்கத்தில்! தமிழ்நாட்டு முத்துக்களை வைத்திருப்பவர்கள் தான் கிரேக்க, ரோமானிய, எகிப்து தேசங்களில் பெருமைக் குரியவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.

அப்படியா?

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை