சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்
காட்சி 36 · 36 / 38
அயல் நாட்டார் இகழ்ந்துரைக்க...
உன் கொடுங்கோல் அளித்த அவசரத் தீர்ப்புக்கு ஆளாகிக் கொலையுண்ட கோவலன் மனைவி கண்ணகி நான் என்பதையும் அறிந்திடுக அரசே, அறிந்திடுக!.
கோவலன் மனைவி!!! சிலம்பு திருடிய கள்வனின் மனைவி!
போதும்! யாகாவாராயினும் நாகாக்க மன்னு! நாகாக்க! யார் கள்வன்? என் கணவனு கள்வன்? இல்லை! அவரைக் கள்வனென்று குற்றம் சாட்டிய கயவர்களே கள்வர்கள்!
ஆத்திரத்தில் அறிவுக் கண்ணை மூடி விடாதே கண்ணகி! கையும் களவுமாகப் பிடிபட்டான் உன் கணவன்! கள்வனைத் தமிழகத்து நீதி கொல்லாமல் விட்டது என்பது உனக்குத் தெரியுமல்லவா?
நீதியின் இலக்கணம் உரைக்கும் நெடுஞ்செழியப் பாண்டியனே! உன்னுடைய நாட்டில் எதற்குப் பெயர் நீதி?
நல்லான் வகுத்ததோ நீதி? அல்ல! அல்ல! வல்லான் வகுத்ததே இங்கு நீதி! அதனால் தான் என் வாழ்க்கருவூலத்தைச் சாவுப் படுகுழியில் கொட்டிவிட்டீர்! கொற்றவனே! குடைநிழலில் குஞ்சரம் ஊர்பவனே!
கொலு மண்டபத்தில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு, கோயில் மண்டபத்தோடு முடிவானேன்?
குற்றம் சாற்றப் பெற்றவரின் மறுப்புகளுக்கு மதிப்புத் தராமல், கொலை வாளின் வேலை அவ்வளவு அவசரமாக நடைபெறுவானேன்?
இதற்குப் பெயரா நீதி?
இதற்குப் பெயரா நேர்மை?
இதற்குப் பெயரா நியாயம்?
இதற்குப் பெயரா அரசு?
உனக்குப் பெயரா அறங்காக்கும் மன்னன்?
கண்ணகி! உன் கணவன் கையிலேயிருந்தது அரசி கோப்பெருந் தேவியின் சிலம்பு!
இல்லை! கோப்பெருந் தேவியின் சிலம்பில்லை—கோவலன் தேவியாம் என்னுடைய சிலம்பு!
நம்பமுடியாது என்னால்!
நீ யார் நம்புவதற்கு? உன்னை யார் நம்பச் சொல்கிறார்கள்? உன் மீது வழக்குரைக்க வந்தவள் நான்! குற்றவாளி நீ! அதனால் தீர்ப்பளிக்கும் உரிமை உன் கையில் இல்லை! இதோ இருக்கிறார்கள்—பெருங்கேண்மைப் பெரியோர்கள்! அவர்களே
இப்போது நீதிபதிகள்! அவர்கள் உரைக்கட்டும்—நல்ல தீர்ப்பு! ஆண்டோர்களே! அறிவு மிகுந்த சான்றோர்களே! அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படைகொண்டவன் பாண்டியன் என்பதற்காக நீதியின் பாதையை வளைக்காமல்... ஆரியப்படை கடந்தான்... அவனி யெல்லாம் புகழ்பெற்றான்... என்ற கீர்த்தித் திரையால் அவன் செய்த குற்றத்தை மறைத்து விடாமல்... தாய்மேல் ஆணையாகத்-தமிழ்மேல் ஆணையாகத்-தாயகத்து மக்கள்மேல் ஆணையாகத் தீர்ப்புக் கூறுவீர்!
தீர்ப்புக் கூறுவீர்!
கோப்பெருந் தேவியின் சிலம்பைக் கோவலன் திருடினான் என்பது குற்றச்சாட்டு!
அதற்கு மரண தண்டனை! அது ஆராயாமல் அளித்த தீர்ப்பு... அதற்கு மன்னன் பொறுப்பு... என்பது என்னுடைய வழக்கு!
வழக்கிற்கு ஆதாரம்?
இதோ, இந்தச் சிலம்பு! இதற்கு இணயான மற்றொரு சிலம்பைத்தான் என் மணவாளர் விற்க வந்தார்... மாபாவிகள் அவரைக் கொன்று குவித்து விட்டார்கள்!
அப்படியானால் தேவி அணிந்திருக்கும் சிலம்பு...?
அவைகளில் ஒன்று என்னுடையது... அதற்கு அடையாளம் வேண்டுமா? ஆயிரம் கேள்வி எனக் கேட்டு உன்னைக் குற்றமற்றவனாய் ஆக்கிக்கொள்ளத் துடிக்கிறாயே; நீதி மன்றத்தின் தூய்மையை அழித்த பாண்டியனே!...இப்படி ஒரு கேள்வி நேருக்கு நேர் என் அத்தானைக் கேட்டிருந்தால், நீதி வழுவா நெடுஞ்செழியன் என்ற பெயர் உனக்கு நிலைபெற்றிருக்கும்!
என் அத்தான் உயிரும் தங்கியிருக்கும்!
பெண்ணே! தேவி அணிந்திருப்பதில் ஒரு சிலம்பு உன்னுடையது என்பதை மெய்ப்பித்துக் காட்டுவாயா?
மெய்ப்பித்து என்ன பயன்? இறந்த என் கணவரை எழுப்பித் தருவீர்களா?
வெட்டுண்ட தலையினை ஒட்டித் தருவீரோ? முடியாது உங்களால்...முடியாது உங்களால்! ஆனால் ஒன்று...உயிர் போனதால் தொங்கி விட்ட என் அத்தானின் தலைபோல உங்கள் தலைகளையும் தொங்க வைக்கிறேன்...உங்கள் மானம் போனதால்... உங்கள் நேர்மை போனதால்... உங்கள் நீதி அழிந்ததால் .... இதோ, உங்கள் தலைகளையும் தரைநோக்கித் தொங்க வைக்கிறேன்...
மதுரைப் பாண்டியா! உனது மனைவியின் பழைய சிலம்பிலே உள்ள பரல்கள் முத்துக்களா; மாணிக்கங்களா?
முத்துக்கள்! கொற்கை முத்துக்கள்!
என் சிலம்பிலே உள்ளவை மாணிக்கப் பரல்கள்!
