உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒரே முத்தம்/காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 28
நாடகங்கள்

ஒரே முத்தம்

காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 28 · 28 / 33

ஏன் நிறுத்தவேண்டும்? குமரி! நீயும் வீணாய் சாகாதே!

புரட்சியின் தலைவி, மகாராஜா! இதுவும் ஒருவகையில் ராஜத்துரோகம்.

ராஜத்துரோகம்! மகாராஜாவுக்குத் தன் மகனிடத்திலிருந்த மாறாத அன்பு உள்ளத்தை அறுத்தெறிந்துவிட்டு, ஆளப்பிறந்தவருக்குத் துரோகி என்ற பட்டம் சூட்டி, தூக்கு மேடையில் நிறுத்திவிட்டு, இன்பபுரியின் நீதியையே கொலை செய்யத் துணிந்தீரே! அது கலப்பில்லாத ராஜபக்தி!-நான் செய்வது ராஜத்துரோகம். அப்படித்தானே?

குமரி! கொலைக்களத்தில் கூக்குரலிட உன்னை யாரும் கூப்பிடவில்லை. அரசர் பெருமானுக்குத் தெரியாத நீதியை எடுத்துரைக்க உன்னை யாரும் அழைக்கவில்லை.

யாரும் என்னை அழைக்கவேண்டியதில்லை. இது நான் ராஜகுடும்பத்திற்குச் செய்யவேண்டிய கடமை! நாட்டுக்குச் செய்யவேண்டிய வேலை! இளவரசருக்காகச் செய்யவேண்டிய தியாகம்.

காமவெறிக்காகச் செய்யவேண்டிய சாகசம் என்று கூறு, பொருத்தமாயிருக்கும். (அரசிடம்) மகாராஜா! நாம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் பயங்கரமானது குமரி ஏதோ முன்னேற்பாட்டோடு வந்திருக்கிறாள். தாமதித்தால் புரட்சி நடக்கும். உடனே மாளிகைக்குப் புறப்படுங்கள்.

(கொலையாளிகளிடம்) உம். நடக்கட்டும். (மரளி கையை நோக்கித் திரும்பல்)

அரசே! கொஞ்சம் பொறுங்கள். இளவரசர் நிரபராதி என்பதை நிரூபிக்கிறேன்.

அவன் ஒரு நீசன் என்பதைப் பொன்னியின் காதலும், ஒரு துரோகி என்பதை விபீஷணரிடமிருந்த கடிதங்களும், நிரூபித்துவிட்டன.

மகன் என்ற வாஞ்சைகூட இவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட்டதே.

நான் நீதி தவறாதவன்.

ஆனால் அவசரக்காரர்.

உம். நடக்கட்டும்.

("நிறுத்துங்கள்" என்ற ஒலியுடன் சித்ராவின் பிரவேசம்)

சித்ரா! இங்கே வந்தாய்?

கணவனுக்குத் துரோகம் செய்ய, நாட்டுக்கு நன்மை செய்ய!

சித்ரா!

அன்பாக அழைக்கவேண்டாம். நான் உங்கள் எதிரி. இந்தச் சதி வேலைகள் உங்கள் சுயநலத்தின் அளவோடு இருந்தால்-சித்ரா உங்களுக்குப் பகையாக வந்திருக்க மாட்டாள். உங்கள் பயங்கர எண்ணத்திற்குப் பட்டத்து இளவரசர் பலியாவது, அதை நான் அனுமதிப்பது, நாட்டுக்குச் செய்யும் பாவமல்லவா?

என்ன? என்ன?

ஒன்றுமில்லை மகாராஜா! ஏதோ மாயாஜாலம். என் மனைவியையும் மயக்கிவிட்டார்கள்.

என்னை யாரும் மயக்கவில்லை. நிதானத்தோடுதான் பேசுகிறேன். இளவரசர் நிரபராதி!

எப்படி?

இன்பபுரியைக் கைப்பற்ற என் கணவர் எழுதிய சதிக் கடிதங்கள். (அவரிடம் நீட்டி) இவைகளை முன்பு ஒருமுறை இளவரசர் கைப்பற்றி, மீண்டும் இழந்தார். அவைகளே இந்தக் கடிதங்கள்.

(மகாவீரர் வாங்கிப் படித்தல்)

அரசே! என்னவோ மாயம் நடக்கிறது. நீங்கள் நம்பாதீர்கள்.

(படித்து முடித்து) நான் நம்புவதா? விபீஷணரே! பயப்படாதீர். நீதி தவறி நடக்கமாட்டேன். நீர் செய்த உதவிக்குத் தகுந்த பரிசு அளிக்கப் போகிறேன்.

(மகிழ்ந்து) பரிசு எனக்குப் பெரிதல்ல. நாடுதான் பெரிது.

அப்படிச் சொல்லாதீர். இது நான் தரும் பரிசல்ல. இந்நாட்டுச் சட்டம் தரும் பரிசு.

சட்டமா?

இளவரசன் ஸ்தானத்தை உமக்கு அளிக்கப் போகிறேன்.

(இளித்தபடி) இளவரசர் ஸ்தானமா?

ஆம். இந்த ஸ்தானம். (தூக்குமேடையைக் காட்ட, விபீஷணன் திகைக்கிறான்)

திகைக்காதீர்! மாணிக்கக் கோட்டை காவலன், மாதவன் எழுதிய கடிதம் பாரும். “மன்னனைச் சாய்த்து மணி முடியை விபீஷணர் தலையில் வைக்காத வரையில், மாதவன் தூங்கமாட்டான்.” இதோ படையெடுக்கத் தயாரித்த படம். விபீஷணரே! நல்ல முயற்சிகள்.

இவை பொய்க் கடிதங்கள் மகாராஜா!

இல்லை. இளவரசர், யாளித்தத்தர், பொன்னி, மூவரையும் சூழ்ச்சியாக வரவழைத்துத் துணில் கட்டி, ஒருவரைக் கொல்வதாக ஒருவருக்கு பயங்காட்டி, தயாரித்த, உங்கள் கடிதங்கள்தான் பொய்!

இதெல்லாம் என்ன மாயை?

துரோகி! பாம்பைப்போல் நெளிந்து, என் பரம்பரையைப் பாழாக்கப் பார்த்தாய். நாளை உனக்கும், உன் கூட்டாளிகள் மாதவன், எல்லப்பன், மற்றவர்களுக்கும் விசாரணை. புத்தா! என்னை மன்னித்துவிடு.

[தழுவிக் கொள்கிறார்]

மக்கள் உங்களை மன்னிப்பார்கள்.

இளவரசர் வாழ்க! மகாராஜா வாழ்க!

சித்ரா! நாட்டுக்காக நீ செய்த தியாகத்தை, இன்பபுரி உள்ளளவும் மறக்காது.

தியாகம்! இல்லை, இளவரசன்மேல் உள்ள மோகம். சண்டாளி செய்த சதிக்குப்பெயர் தியாகம். ஆசை நாயகனுக்காகச் சொந்த நாயகனைக் காட்டிக்கொடுத்த சூனியக்காரியின் சூழ்ச்சிக்குப்பெயர் தியாகம்!

[சித்ராவின் கண்களில் நீர்]

உம். இந்த விபீஷணனுக்கு விலங்கிடுங்கள்!