உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

நச்சுக்கோப்பை

காட்சி 1 · 1 / 18

நச்சுக்கோப்பை

நாடகம்

மு. கருணாநிதி

நந்தவனம்

ஏகாம்பரம் நிலாவைப் பற்றிப் பாடுதல்.

சாந்தா கண்ணைப் பொத்தல்.

(பாட்டு : வானில்)

என்ன,நிலவின் அழகிலே உள்ளத்தைப் பறி கொடுத்து விட்டாப் போலிருக்கிறதே !

ஆமாம், நீ இல்லையே என்ற காரணத்தால் தான்!

உங்களுக்கு மட்டும் இந்தப் பேச்சில்லா விட்டால்....?

உன்னிடமிருந்து தப்பித்துவிட முடியாது. ஏன்? அப்படித்தானே!

என்னைத்தான் உங்கள் பேச்சால் ஏமாற்ற முடியும்.

ஏன், இன்னும் எத்தனை பேரை ஏமாற்ற வேண்டும்?

சற்று எங்க அப்பாவை ஏமாற்றிப் பாருங்களேன், பார்க்கலாம்.

நாம் இருவரும் இங்கு தனியாக இருப்பது உங்க அப்பாவை ஏமாற்றிய பலன்தானே!

ஆமாம், நேற்று அப்பா ஏதாவது தங்களைக் கேட்டாரா?

இல்லையே. ஆனால், நம் விஷயத்தில் சற்று முன் ஜாக்கிரதையாகவே இருந்து வருகிறார்.

உங்களுடைய வெள்ளை வேஷ்டியும், சட்டையும் அவரது கண்ணை உறுத்துகின்றன.

'கந்தையானாலும் கசக்கிக் கட்டு' என்பதை அவரிடம் கூறுவதுதானே, சாந்தா! ஐயோ மூளையே!

அந்த மூளையைச் சூளையில்தான் வைக்க வேண்டும்!

தந்தையைத் தூற்றலாமா?

தகுந்ததைப் பேசினால்தானே போற்றலாம்!

நீயும் உன் அண்ணன் பழனியப்பனும் உன் தந்தைக்கு நேர் மாறாகப் பிறந்தீர்களே, அதுதான் ஆச்சர்யம்!

ஆமாம், உங்கப்பா இளமையில் இம்மாதிரி காதல் பாடம் படித்தாரா?

சாந்தா! உண்மை. அப்பா படிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அவரது முன்னோர்கள் காதலின் தன்மையை உணர்ந்திருந்தனர். 'காதலுக்கும் கடவுளுக்கும் வேறுபாடில்லை; அவை காலத்தால் அழிவதுமில்லை' என்ற உண்மை உணர்ந்து அவர்கள் வாழ்வு நடத்தினர். கடலிலே எழும் அலைபோன்றது காதல்! அதன் கொந்தளிப்பிலே சிக்கியவர் எவரும் தப்புவது இல்லை! காதல் ஆணையும் பெண்ணையும் ஒன்றாகிக் காட்டும் ஒரு வசீகரமான வானவில் ! பாலும் சர்க்கரையும் சேர்ந்து உண்டான சுவையை எப்படிப் பிரிக்க முடியாதோ அதே போல்தான் காதலையும் நெஞ்சையும் பிரிக்க முடியாது!

அதுவும் உண்மைக் காதலாய் இருந்தால்தான், சாந்தா!

தாங்கள் எதையோ மறைத்துப் பேசுகிறீர்கள்.

இல்லை, சாந்தா! உன் உறுதியை நிலைநாட்டவே நினைப்பூட்டுகிறேன்.

அன்பே! எனது உறுதி ஞாபகத்தை மூட்டத்தக்க அவ்வளவு நிலையற்றதென்ற எண்ணமா தங்களுக்கு?

இல்லை சாந்தா, நீ காதலைப்பற்றிப் பேச்சை எடுத்ததும் எனது எண்ணம் எங்கேயோ போய்விட்டது. வேறொன்றுமில்லை. ஏன் சாந்தா இப்படிச் சந்தேகப்படுகிறாய்?

ஆண்களின் பேச்சை நம்பி விடுவது அவ்வளவு சுலபமான காரியமா?

என்னவோ பார்ப்போமே. இன்னும் சிறிது நாள் தானே இருக்கிறது. இந்த ஏழை ஏகாம்பரத்திற்கு இந்தக் கனி கிடைக்கிறதா இல்லையா என்பது கூடிய விரைவில் தெரிந்து விடுகிறது.

கனி, தானே வந்தடையும். காதல் வஞ்சகமற்றது; எவ்விடத்தும் சமத்துவம் பாராட்டக் கூடியது. உயர்வு தாழ்வு அதனிடம் இல்லை. வீரத்திற்கும்,தியாகத்திற்கும் காதலே பிறப்பிடமென்பதை நிரூபிக்க நான் தயாராய் இருக்கிறேன்.

உன் தந்தையின் நினைப்பு எப்படியோ...?

பணத்தைத்தானே அவர் மனம் நாடும். என்னை உங்களுக்கு மனைவியாக்க ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்.

உன் அண்ணன் பழனியப்பன்...?

அண்ணாவைப் பற்றித்தான் கவலையே இல்லையே. எனக்காகத்தான் உயிரையும் கொடுக்கச் சம்மதிப்பாரே

சாந்தா! இதுமாதிரி அண்ணன் கிடைக்க வேண்டுமே, அதுதான் ஆச்சர்யம்!