உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
காகிதப்பூ/காட்சி 15
நாடகங்கள்

காகிதப்பூ

காட்சி 15 · 15 / 23

(திரை)

சொர்க்கம்

(திரவியம் பிள்ளை மகாத்மா காந்திக்கு மாலை போடுதல்.)

கா:— நிறுத்து! நிறுத்து! போடாதே மாலையை!

(தடுக்கிறார்)

திர:— ஏன் ஐயனே தடுக்கிறீர்கள்?

கா:— காங்கிரசைக் கலைத்துவிட்டு வந்து எனக்கு மாலை போடுங்கள் என்று அப்போதே சொன்னேன்; அதைச் செய்யாமல் மாலை மட்டும் போட்டு என்னை மயக்கப்பார்க்கிறாயா? மாலையா இது? நன்றாகப் பாருங்கள். எலும்புத்தூள்களைப் பொறுக்கி அரும்பு மாலையென எனக்குப் போட வந்து விட்டீர்களா? நிரபராதிகளின் இரத்தத்திலே தோய்ந்த வெள்ளை மலர்கள எடுத்து ரோஜா மலரெனத் தொடுத்துான் கழுத்திலே தொங்க விடப் புறப்பட்டீர்களா? இதோ என்னை ராஜஉடை ராஜ போகங்களோடு வாழவைத்து என் மன நிம்மதியைக் குலைத்து என்ன இந்தச் சிறைச் சாலையில் சித்திரவதைசெய்து கொண்டிருக்கிருனே எமன்.

இந்த எமனை விடக் கொடியவர்கள் நீங்கள். என் முன்னே நில்லாதீர்கள். போய்விடுங்கள்!

திர:— அப்படி என்ன அபச்சாரம் செய்தோம் தங்களுக்கு?

திர:— ஐயனே!

கா:— அடப்பாவிகளே! நான் நவகாளிப் பயணத்தின் போது ஊன்றிக் கொண்டு நடந்த அருமை மிகு கைத்தடி மோஸஸ் கதையிலே வருவதைப் போல் பாம்பாக மாறிப் பாட்டாளி மக்களைக் கடித்துக் கொல்கிறதாம்! என் இடுப்பிலே இருந்து எடுப்பாகத் தொடங்கிக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு கெடிகாரம் உங்களால் பத்திர படுத்தப் பட்டிருக்கும் என்று எதிர் பார்த்தேன். அந்தக் கெடிகாரத்தை கள்ள மார்க்கெட் காரர்களுக்கு உரிமையாக்கி நேரம் பார்த்துக் கொள்ளையடிக்கச் சொல்லி விட்டீர்களாம்.

என் காலணி பட்டு சின்னஞ்சிறு ஜீவன் கூடச் செத்து விடக் கூடாதென்று நான் ஏங்குவேன். இப்போது அந்தக் காலணியை நீங்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஆள் மாட்டிக் கொண்டு ஆயிரக் கணக்கான மக்களை அடக்கி—மிதித்து—துவைத்து—சேறாக்குகிறீர்களாம்!

(திரவியம் பிள்ளை மெளனம்)

கா:— எல்லாமே தொலையட்டும். என் மூச்சுப்போன்றதும் என் இருதயம் போன்றதுமான என் அன்புக் குழந்தையாம் “ஹரிஜன நலம்” என்ற செல்வத்தையாவது ஒழுங்காகப் பாதுகாத்திருக்கிறீர்களா? என் இன்பக் குழந்தை, சவலைப் பிள்ளை போல் அல்லவா காட்சி தருகிறது? சளி ஒழுகும் முக்கு! பருக்கை உதிரும் வாய்! தள்ளிய வயிறு. கும்பிப்போன கை, கால்கள் எழுபது வயதுக்கிழங்கள் வடுவது போன்ற இழுப்பு மூச்சு; இவ்வண்ணம் தள்ளாடித் தள்ளாடித் தடுமாறும் நிலையில் அல்லவா நான் பெற்ற மாணிக்கத்தை நடுத் தெருவில் சாக்கடையோரத்தில் புழுதி மேட்டில் நீர்க்கதியாக விட்டு விட்டீர்கள்.

இந்த லட்சணத்தில் உன் அழுக்கேறிய கைகளால் எனக்கு மாலை வேறா போட வந்து விட்டாய்? போ! போ! என் முன் நில்லாதே!

(திரவியம் பிள்ளை கீழே விழுதல்)

(திரை)

திரவியம் பிள்ளை வீடு.

(திரவியம் பிள்ளை படுக்கையிலிருந்து அலறி அடித்துக் கொண்டு விழுகிறார்...)

திரவி:— ஆ... ஹா!... ஹா!... மகாத்மா!... மகாத்மா...

(வீறிட்டு அலறும் ஒலி கேட்டுத்... தசாவதாரம் வாரிச்சுருட்டிக் கொண்டு தூக்கத்தில் ஓடிவருதல்...)

தசா:— எஜமான்... எஜமான் என்னங்க...

திரவி:— எமலோகம்... ரத்தபானம்... ஆகாசவாணி... மகாத்மா காந்தி... மகாத்மா காந்தி... எல்லாரையும் பாத்தேன்...

தசா:— கனவு கண்டீங்களா?...

திரவி:— தசாவதாரம்! பயங்கரமான கனவு... பயங்கரமான கனவு.

தசா:— அய்யா!... கனவிலயாவது மந்திரி ஆகிற மாதிரி கண்டீங்களா?

திரவி:— கனவிலே கூடக் காணலியே... முழிச்சிகிட்டு இருந்தா காளிகாதேவி விரட்டுரா!... தூங்கினா காந்தி மகாத்மா விரட்டுராரு!... தசாவதாரம்... ஒரே குழப்பமா இருக்கு... இந்தக் குழப்பத்துக் கெல்லாம் காரணம்...

தசா:— எனக்குத் தெரியுங்க காரணம்!... அந்தக் கண்ணன் உங்க கைக்கு அகப்பட மாட்டேங்கிறானேன்னு கவலைப்பட்டு... கவலைப்பட்டு ஏதேதோ பயங்கரக் கனவெல்லாம் காணுறீங்க...

திரவி:— உண்மை! நீ சொல்வது உண்மை!... அந்தக் கண்ணன் என் பக்கம் வந்தா தான் எனக்கு மனம் நிம்மதியா இருக்கும்.

தசா:— பயப்படாதிங்க... பணத்தைக்கண்டதும் பயல் மயங்கிட்டான்... 250ஆ...

திரவி:— 250!... 500 கொடுத்தேன்...

தசா:— (தயங்கி... பிறகு) அவுங்க அம்மா கிட்ட பாதி கொடுத்திட்டேன்...

திரவி:— ஓகோ...

தசா:— பொழுது விடிஞ்சதும் விடியாததுமா இங்க வர்ரேன்னு சொல்லியிருக்கான்...