உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 56 · 56 / 61

என்ன விஷயம்?

வேதாளம் சாமியார் வேஷத்தில் அலைகிறான்.

அதற்கென்ன இப்போது?

என்னுடைய காதலி முத்தாயியை ஏமாற்றி ஏதோ என்னமோ தெரியவில்லை; அவன் அழைத்துக்கொண்டு எங்கேயோ போகிறான்.

ஆ!—

அவனுடைய ஆஸ்ரமத்துக்குத்தான் போயிருப்பான். என்னோடு வா! காட்டுகிறேன் — தயவு செய்து நீ முத்தாயியைப் பார்த்துக்கொள். நான் உடனே போய், இந்த ஊரிலுள்ள பாதுகாப்பு வீரர்களை அழைத்து வருகிறேன்.

முதலில் முத்தாயி இருக்குமிடத்தை காட்டும்!

வா வா!—

[இருவரும் ஓடுகிறார்கள்]

★

[வேதாளம் இருப்பிடம்

வெற்றிவேலனும்—முத்தாயியும்!—முத்தாயி பொங்கிவரும் எரிமலையின் முன்னே தவித்துக் கொண்டிருக்கிறாள்.

என்ன விழிக்கிறாய்? நீ எங்கு சென்றாலும் நான் விடமாட்டேன். வானம்பாடியாக நீ பறந்தால் உன்னை வட்டமிடும் பருந்தாக மாறுவேன். புள்ளிமானை மாறித் துள்ளினால் புலியாகச் சீறிடுவேன். நீ கடைசியில் பிணமானாலும் கூட உன் சரீரத்தைத் தொட்டெரிக்கும் சந்தனக் கட்டையாக மாறுவேன் நான்.

இன்பமே! இணங்கிவிடு. வசந்தத்திலே புஷ்பிக்கும் வாசப்பூது மலரே! வந்துவிடு என்னிடம். வண்ணத் தாமரையே! வண்ணஜாலப் பூங்கொத்தே! என் வலிமை மிக்க தோள்களிலே உன்னை வாரி எடுத்துக் கொள்வேன்—பாய்ந்துவிடு என்மேல் பைங்கிளியே!

பாவி! என்னைவிட்டு விடு!

கையிலே கிடைத்த கனி - கண்ணியில் அகப்பட்ட பறவை - கபோதிகள் கூட விடமாட்டார்கள். முத்தாயி - உன்னிடம் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருப்பது - மலரைக் கசக்கி முகர்ந்தால் மணம் இருக்காது என்ற காரணத்திற்காகத்தான் - எச்சரிக்கிறேன்: பொறுமையை சோதிக்காதே!

ஓ!—

(முத்தாயி வெற்றிவேலனை அறைந்து விடுகிறாள்.)

(கனல் பறக்க) உம்! ஊமையாகி விடு!—உருத்தெரியாமல் ஆக்கிவிடுவேன்.

முத்தாயி அவனிடம் சிக்கிக் கொண்டாள். விடுவித்துக் கொள்ளமுடியாதபடி அகப்பட்டுக் கொண்டாள். அய்யோ அய்யோ என்று அலறுகிறாள். அப்போது முத்தன் கூரையின் வழியாக உள்ளே குதிக்கிறான். தளபதி திடுக்கிடுகிறான்.

முத்தாயி ‘அத்தான்’ என ஓடி அவனைக் கட்டிக்கொள்கிறாள். வெற்றிவேலன், முத்தனை வெறிக்கப் பார்க்கிறான்.

முத்தா! வீணே சாகாதே! நீ யார் என்பதை நிதானித்துக்கொள்.

நான்—உன் தான்தோன்றித் தனத்தின் தர்பாரிலே, சர்வாதிகார சயாமண்டபத்திலே, சிக்கிச் சீரழிந்த வீரன்—ஆனால் இன்று அந்த வீரனே வரவில்லை. நான் சிந்திய ரத்தத்திற்கு—நான் அனுபவித்த சித்ரவதைகளுக்கு, உனக்குப் பரிசளிக்க வந்திருக்கிறேன். பெண் வேட்டையாடும் பித்தனே! மதுவும் மங்கையர் சுகமும்—உங்கள் மகுடத்தின் நிழலிலே மறைந்துகிடக்கலாம்! ஆனால்—அந்த மகுடத்தைத் தூளாக்கிப்போடும் புரட்சி சக்தி பொங்கி எழுந்து விடும் என்பதை உணர முடியாத மதோன்மத்தர்கள் நீங்கள்!