இரத்தக் கண்ணீர்
காட்சி 2 · 2 / 61
ஊர் மக்களில் ஒரு பெரியவர்,
“என்ன வேதாளம்! எனக்கு ஏதாவது அஞ்சல் உண்டா?”
“அஞ்சல் ஒன்றுமில்லை—ஐந்து வராகன் கொண்ட ஒரு சிறு முடிச்சு வந்திருக்கிறது.”
“அப்படியா! மிகச் சந்தோஷம்” பெரியவர் அந்த முடிச்சைப் பெற்றுக்கொள்கிறார்.
“அதிர்ஷ்டம்தான்! உம் வேதாளத்துக்கு ஒன்றும் கிடையாதா?”
“உமக்கில்லாமலா! இந்தாரும்!”
பெரியவர் முடிச்சை அவிழ்த்து ஒரு பொன் நாணயத்தை எடுத்து வேதாளத்தின் கையில் கொடுக்கிறார். வேதாளத்தின் அகலமான வாய் ஒரு புன்னகையைக் கொட்டுகிறது. மற்றவர்களுக்கு வந்திருக்கும் ஓலைகளைக் கொடுத்து எல்லோரையும் அனுப்பிவிடுகிறான். பிறகு, “அப்பாடா!”
என்று பெரிய கொட்டாவி விட்டபடி தன் எதிரே கிடக்கும் சிறு, சிறு முடிச்சுகளை எடுத்து உற்றுப் பார்க்கிறான். அவன் உதடுகள் முணுமுணுக்கின்றன.
மாய்காநாத ஸ்வாமிகள்!
மாய்காநாத ஸ்வாமிகள்!
மாய்காநாத ஸ்வாமிகள்!
ஆம். ஒவ்வொரு முடிச்சிலும் எழுதப்பட்டிருக்கிற பெயரைத்தான் அவன் அப்படிப் படிக்கிறான். அதைக் கவனித்த முத்தன், வேதாளத்தைப் பார்த்து,
மாய்காநாத ஸ்வாமிகளுக்கு சரியான வேட்டைதான் போலிருக்கிறது!
எல்லாம் பக்தர்கள் அனுப்பும் காணிக்கைகள்!
காணிக்கையா! ஆமாம் ஆமாம்! உழைக்காமல் கிடைக்கிற ஊதியத்திற்கு அப்படியும் ஒரு பெயர் உண்டு.
ஆரம்பித்துவிட்டாதே முத்தா உன் அதி மேதாவித்தனமான பிரசங்கத்தை!
நான் சாமியாரைச் சொன்னால் தங்களுக்கேன் கோபம் வருகிறது.
ஏ முத்தா! இது அஞ்சல் மனை! பலரும் வருமிடம் போகுமிடம்! நீ இப்படி உளறுவது எனக்கு ஆபத்து. இது மாதிரி எதுவும் வருமென்று தெரிந்துதான் உனக்கு என் வீட்டில் ஒரு அறையை வாடகைக்குத் தர அவ்வளவு தயங்கினேன்.
சரி...சரி...வாயை மூடிக்கொண்டேன்.
ஏன், உட்கார்ந்திருக்கிறாய்ப்; அரண்மனைக்குப் போகவில்லையா குதிரை தேய்க்க?
உம்—இதோ போகிறேன். ஏன் நான் உட்கார்ந்திருந்தால் இன்னும் ஏதாவது பேசிவிடுவேன் என்று பயமா?
இல்லை! ஊதியம் வாங்குகிற இடத்தில் ஒழுங்காக வேலை பார்க்க வேண்டாமா!—அதற்குச் சொன்னேன். நீ நல்லபிள்ளை—எப்படியாவது கெட்டுப்போ—எனக்கென்ன, நான் மடத்துக்குப் புறப்படுகிறேன். எனக்கு என் கடமை பெரியது!—சாமியாரை மட்டும் ஒன்றும் சொல்லாதே—அவர் உன் போல சத்திரத்துப் பேர்வழியல்ல. ஜகம் புகழும் மகான்.
பொன் முடிச்சுக்களையும்—அஞ்சல் ஓலைகள் கொண்ட அடுக்கையும் எடுத்துக் கொண்டு வேதாளம் எழுகிறான்.
★
