இரத்தக் கண்ணீர்
காட்சி 1 · 1 / 61
இரத்தக் கண்ணீர்
நாடகம்
மு. கருணாநிதி
[பழுதூர்
ஊரைச்சுற்றி யோடிடும் ஆறு. அதன் கரைகளைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆற்றின் ஓரங்களிலே கவனிப்பாரற்றுக் கிடக்கும் கனிகுலுங்கும் சோலைகள். அவைகளை விட்டு ஊருக்குள் நுழைந்தால் அழகிழந்து போன அகலமான வீதிகள். வீதிகளின் பள்ளங்களில் தேங்கிக் கிடக்கும் அழுக்கு நீர். அதிலே புரளும் பன்றிக்குட்டிகள். அவைகளுடன் கல் வெறிந்து விளையாடும் சிறுவர்கள். பெரும் பெரும் வீடுகள். உயர்ந்த கோபுரத்தையுடைய ஓர் ஆலயம்.
ஆலயத்திற்கு அருகாமையிலே பெரியதோர் மடாலயம். ஊருக்கு நடுவே உப்பரிகைகள் கொண்ட பலமான அரண்மனை. அரண்மனையை அடுத்து சிறிதும் பொருத்தமான சோபையிழந்த தெருக்கள். தெருக்களிலே குதிரைபூட்டிய பல்லக்கு வடிவமான வண்டிகள் போவதும் வருவதுமாயிருக்கின்றன. காய்கறிக் கூடைகளை தலையில் சுமந்து கூவியவண்ணம் வியாபாரம் செய்திடும் வயதான ஆடவர்-பெண்டிர். கோயிலுக்கு எதிரேயுள்ள திருக்குளத்திலே நீந்தி விளையாடும் வாலிபர்கள்; தாமரையெனும் முகமுடைய மங்கையர்கள்.
“ஏ நாய்க்குட்டிப் பயலே! எங்கே போய்விட்டாய்! சீக்கிரம் வாடா!”
“இதோ வந்துவிட்டேன்” என்று ஒரு குரல் கேட்டது. ஆஜானுபாகுவான ஒரு முரட்டு ஆள் உள்ளே இருந்து வருகிறான். மரியாதையுடன் நிற்கிறான். அவன் கையிலே ஒரு வேல் கம்பு இருக்கிறது, அதில் சிறிய மணிகள் கட்டப்பட்டிருக்கின்றன.
அவன் பணிவுடன் கேட்கிறான்,
“அடியேன் என்ன செய்யவேண்டும்?”
“அதையும் சொல்லவேண்டுமோ! ஓலைகளை எடுத்துப் பையிலே போடு!”
ஓலைகள் பையிலே போடப்பட்டுக் கட்டப்படுகின்றன.
“பையின் கழுத்திலே முத்திரையைப் போடு!”
வேங்கைச் சின்னமிட்ட முத்திரை போடப்படுகிறது.
“உம்—தூக்கிக்கொண்டு ஓடு!”
அவன் பையைத் தூக்கிக்கொண்டு புறப்படுகிறான்.
“அடே! நாய்க்குட்டி!...பத்திரம்! நூறு ஓலைகள்—ஐம்பது பொன்கள்! இருட்டுவதற்குள் மாயனூர் போய் விட வேண்டும். இல்லாவிட்டால் வழியிலே எவனாவது திருடன் சுருட்டிவிட்டுப் போகிறான்.”
“சரி! உத்திரவுப்படி ஓடுகிறேன்”
“உம்! ஓடு!...ஆமாம்...குதிரை தயாராகிவிட்டதா!...ஏ...முத்தா!...முடிந்ததா வேலை?”
“முடிந்துவிட்டது! குதிரை தயார்!” என்று கூறியபடி முத்தன் வருகிறான். முத்தன்தான் முதலில் குதிரை தேய்த்துக்கொண்டிருந்த வாலிபன். தேய்த்த களைப்பில் தெருத் திண்ணையிலேயே அமர்ந்து பெருமூச்சுவிடுகிறான். ஓலை நிரப்பிய பையை முதுகில் போட்டுக்கொண்டு, மணி யோசை எழுப்புகின்ற வேல் கம்பை கையில் பிடித்தபடி அந்த முரட்டு மனிதன் குதிரையில் ஏறி உட்காருகிறான். குதிரை பறக்கத் துவங்குகிறது. குதிரை போடும் பக்கம் கண்கள் செலுத்தியபடி இருக்கிறான் முத்தன்.
ஊர் மக்கள் நாலைந்து பேர் அஞ்சல் மனையில் நுழைகிறார்கள்.
அவர்கள் முத்தனைப் பார்த்து,
“முத்தா! அஞ்சல் மணியார் இருக்கிறாரா?” என வினவுகிறார்கள்.
“அதோ உட்கார்ந்திருக்கிறாரே! தெரியவில்லை” என்று உள்ளே கையைக் காட்டுகிறான் முத்தன்.
