உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 94
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 94 · 94 / 104

இவ்வாறு,

வாழை மரங்களையும் வைரம் பாய்ந்த தேக்குகளாக்கி கோழைகட்கும் முதுகெலும்பு வழங்குகின்ற உரையை சோழன் நற்கிள்ளிச் சொல்லி முடித்தவுடன்

புழுக்கள் கூடப் புலியாக உருவெடுத்துப் பகை அழுக்கைப் போக்குதற்குப் படையெடுத்த காட்சி என்னே!

[Full-page illustration; no printed body text.]

ஆமூர் வீதியிலே, அணிவகுத்துச் செல்கின்ற படை நடுவே மணிமுடியாய் நற்கிள்ளி, தலைமையேற்க அவன் தேர் அருகே சாத்தந்தை ஒரு தேரில் வீற்றிருக்க நமனையஞ்சாப் படை திரண்டு வருதல் கண்டு நற்கண்ணை, பொற்கொடியின் தோள்மீது முகம் புதைத்து, உளம்புகுந்தோன் திருவுருவைக் கண்ட களிப்பும், களம்புகுந்திடுகின்றான் அவன் என்ற தவிப்பும், அகத்தில் தோன்றி ஆட்டிப் படைத்திட முகத்தில் மலர்ச்சி காட்டிட முயன்று; “நலமுடனே திரும்புக நம் நாட்டுப்படைகள்”, என்று குலக்கொடியாள் கண் கலங்க வாழ்த்தி நின்றாள்!

“அதோபார்! சாத்தந்தை” என்று குதித்து அவள் தோழி பொற்கொடி அருகிலோர் தேரினைக் காட்டியதுதான் தாமதம்; கண்ணிமைப்போதில் காற்றையும் தோற்கடித்துப் பாய்ந்து பறந்து கவிஞரின் தேர்முன்னே போய் நற்கண்ணை நின்றாள்! தன்னியல்பாய் புரிந்துகொண்ட புலவர்பிரான் இறங்கி வந்து; “கவிப்பாவாய்! உனக்குக் கவலையேதும் தேவையில்லை பகை எதிர்த்து வெற்றி வாகை சூடிக்கொண்டு நகை முழக்கி வந்திடுவான் நற்கிள்ளி!”

என்றுரைத்தார்!

“உண்மையில் வெற்றி உறுதி என்கின்றீரா? என் உயிரையே உம்முடன் அனுப்புகிறேன்” என்றாள்!

“ஒரு சொல்லில் உன் இதயத்தில் நீ உருவாக்கி வைத்துள்ள சிற்பத்தைக் காட்டிவிட்டாய்” என்றார் புலவர்!

நாணத்தால் குனிந்த தலை நிமிராமல் நற்கண்ணை; “நம்நாட்டு வெற்றிக்கு உங்கள் வாழ்த்துத் தேவை”, என்றாள்!

“நாட்டோரின் வெற்றிக்கு மட்டுமல்ல; நற்கிள்ளியிடம் நீ கொடுத்த பாட்டோலை வெற்றிக்கும் பாடுபடுவேன்”, என்றார்!

கைமலரை, அவர் கால்மலரில் வைத்துத் தொழுது, “கரந்தைப் போர் வெல்க!” என்றாள்!

அதிலென்ன ஐயமென்று சாத்தந்தை அப்போதே கவிதை யாத்தார்!

*

*

“ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆவே; யார்கொல் அளியர் தாமே ஆர்; நார்ச் செறியத் தொடுத்த கண்ணிக் கவிகை மள்ளன் கைப்பட்டோரே;”

*

(புறநானூறு : பாடல் : 81 பாடியவர் : சாத்தந்தையார் பாடப்பட்டோன் : சோழன் போரவைக்கோ பெருநற்கிள்ளி)

புலவர் பெருமானின் உறுதிமிகு பாடல் கேட்டுப் புன்னகையைத் தவழவிட்டாள் அந்தப் பூங்கொடியாள்!

அப்போது,

“படை முகத்தில் பாட்டென்ன பாவலரே?” என்று - இள நகையை முகத்தில் தேக்கி இளவல் கிள்ளி வந்தவுடன் - “இந்த முல்லைக்கொடி; போரினில் உனக்குத் தொல்லை வருமோ எனக் கவல்கிறாள்” என்றார்!

“தொல்லை ஒரு வேளை வந்தாலும் வரலாம் - அதனால் ஓடிவிடலாம் என்ற அறிவுரையா?” என்றான்!

நற்கிள்ளியின் கேலியும் கோபமும் கண்டு நற்கண்ணை, படபடத்துப் போனள் எனினும்; நயமாய்ச் சொன்னள் -

“ஏறு தழுவி வென்றவர்க்கு மாலை சூடும் தமிழ்நிலத்தில் - போரில் ஓடி நடுங்குகின்ற ஆடவரை ஒரு பெண்ணும் ஏற்கமாட்டாள்!”

அதற்கு வெடுக்கென்று பதில் சொல்ல விரைந்தான் கிள்ளி! அதற்குள், “விளையாட்டு போதும்!” என்று புலவர்பிரான் தடுத்துவிட்டு,

“நற்கிள்ளி வீரம்பற்றி நானறிய மாட்டேனோ? - இதோ; நற்கண்ணைக்கு நான் சொன்ன பாடலின் பொருளேக்கேள்!” என்றார்!

“ஆத்திரமாலே துடியுள்ள சோழ இளவல் அணிவகுத்து நடத்துகின்ற போர்ப்படையோ; ஆர்த்தெழுந்து கிளப்புகின்ற ஒலியாலே, அலைகடல் எழினையும் வெல்லுமாம்! அவன் களிறுகள் களத்திலிடு முழக்கமோ எனில்

கார்கால இடியோசைதான்! இந்நிலையில் அவன் கையினில் பகைவர் சிக்கிவிடின்? அந்தோ; அந்தப் பரிதாபத்துக்குரியோர் யாரோ?”

புலவரின் புகழ்ச்சியுரை பிடிக்காமல் அவன் தலைகுனிந்தான்! பூரிப்புப் பெருமிதத்தால் நற்கண்ணை தலைநிமிர்ந்தாள்!

அதற்குள் ஒரு குரல் :-