உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 84
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 84 · 84 / 104

கிளையொன்றில் பெருந் தேன்கூடு கண்டேன். கிட்டாதோ தேன் துளிகள் என்று முற்றாக முடமான ஒருவன் அடிமரத்தின் வேரின் மேல் அமர்ந்து அகங்கையில் தேன் சொட்டுமென்று ஆவலாய் முகம் வைத்துக்கொண்டு அந்தோ; வெறுங்கையைச் சுவைத்துக் கொண்டிருந்தான்! அவன் நிலைதான் என் நிலையோ கண்ணா? ‘ஆம்’ என்று நீ சொல்லிவிட்டால் பெண் நான் அந்த முடவன் போல் செயல்படத்தான் வேண்டும்; உன் அருகில் வரமுடியாமல் ஏங்கத்தான் வேண்டும்!

எட்டாத பழமெனினும் எனக்கு நீ கிட்டிடுவாய் என்று - தவம் கட்டாயம் இருக்கத்தான் வேண்டும்; உன் கரம்தனில் ஒருநாள் தவழத்தான் வேண்டும்! அதை நினைத்தாலே - கனவில் வந்து நீ எனை அணைத்தாலே; நெஞ்சம் இனிக்கிறது - உன்பால் தஞ்சம் புகத் துடிக்கிறது!

செய் தவம் பலிக்கவில்லை யெனில் - என் சிந்தை கவர்ந்திட்ட சிங்கம் நீ; என் மெய் தழுவிக் கிடக்கின்ற கற்பனையில் மிதந்திடுவேன்; அதை எண்ணி மகிழும்போது என் நெஞ்சம் இனிக்கிறது - உன்பால் தஞ்சம் புகத் துடிக்கிறது!

*

“குறுந்தாட் கூதளி ஆடிய நெடுவரைப் பெருந்தேன் கண்ட இருக்கை முடவன், உட்கைச் சிறுகுடை கோலிக் கீழ்இருந்து, சுட்டுபு நக்கி யாங்குக் காதலர் நல்கார் நயவார் ஆயினும், பல்கால் காண்டலும், உள்ளத்துக்கு இனிதே!”

*

(குறுந்தொகை - பாடல் : 60 பாடியவர் : பரணர்)

பொருள் விளக்கம் :

குறுந்தாள் இருக்கை முடவன் = குறுகிய கால்கள் கொண்டு நடக்கவும் நிற்கவும் முடியாமல் ஓரிடத்திலேயே இருக்கின்ற முடவன். கூதளி ஆடிய நெடுவரை = கூதளங் கொடி யாடு கின்ற மலைப்பகுதியில். உட்கைச் சிறுகுடை கோலிக்கீழ் இருந்து = உள்ளங்கையை உண்கலம் போலக் குவித்துக்கொண்டு. சுட்டுபு நக்கியாங்கு = (தேனடையைச்) சுட்டிக்காட்டியவாறே வெறுங்கையைச் சுவைப்பது போல. நல்கார் = விரும்பாதார். நயவார் = அன்பு செலுத்திடார்.

பல்கால் காண்டல் = பல முறையும் காண்பது.

*

மணித்தேரில் சென்ற மகன்!

இசைப்பாடல் இராகம் : பீம்ப்ளாஸ் தாளம் : திஸிர ஆதி

(எடுப்பு)

மணித்தேரில் சென்ற அவள் மகன் இன்னும் திரும்பவில்லை மாற்றாரை விரட்டாமல் திரும்பி வர அவன் விரும்பவில்லை அதனால்தான் ஆயிரம் பேர் அவ்வூர் வீரர் வந்த பின்னும் அவர் இல்லமெல்லாம் ஆரவாரம் எழுந்த பின்னும் மணித்தேரில் சென்ற அவள் மகன் இன்னும் திரும்பவில்லை.

(தொடுப்பு 1)

விழுப்புண்பட்ட வீரர் பலர் இல்லம் வந்தனர் வேம்பின் இலை கொண்டு புண்களை ஆற்றிட வீட்டு முகப்பில் கொப்புகளைக் கொணர்ந்து வேல்விழித் துணைவியர் செருகி வைத்தனர்.

மணித்தேரில் சென்ற அவள் மகன் இன்னும் திரும்பவில்லை மாற்றாரை விரட்டாமல் திரும்பி வர அவன் விரும்பவில்லை.

(தொடுப்பு 2)

காயமுற்றோர்க்கு ஆறுதலாய்க் காஞ்சிப் பண்பாடினர் கடுகை நெய்யிட்டுப் புகைத்துக் காற்றிலே கலந்தனர். ‘கல்’ என்ற ஒலியுடனே மனைகள் தோறும் களம் சென்று திரும்பியோரின் களைப்பினைப் போக்கினர்.

மணித்தேரில் சென்ற அவள் மகன் இன்னும் திரும்பவில்லை மாற்றாரை விரட்டாமல் திரும்பி வர அவன் விரும்பவில்லை.

(தொடுப்பு 3)

கொடுத்த பணி முடித்திடாமல் வருதல் - அவன் கொண்ட கொள்கை குன்ற வைக்கும் என்பதால் கிடைத்தவரை வெற்றியென எண்ணி - அப் படைத்தலைவன் நிறைவு கொள்ளவில்லை!

[Full-page illustration; no printed body text.]

பாசமிகு அன்னையினைப் பார்ப்பதற்கு பறந்தோடி வருகின்ற நினைவும் வரவில்லை! மற்றவர்கள் வந்துவிட்டார் - அவர் மனையில் உற்றவர்கள் மனமகிழ்வு பெற்று விட்டார்!

மணித்தேரில் சென்ற அவள் மகன் இன்னும் திரும்பவில்லை மாற்றாரை விரட்டாமல் திரும்பி வர அவன் விரும்பவில்லை.

(தொகையறா)

தமிழகத்துத் தாய்க் குலத்து வீர மங்கை தன் புதல்வன் காலந் தாழ்ந்து வருவதற்குக் கலங்கிடாமல் தடந்தோளால் பகை சாய்த்த பின்பே - என் தங்கமகன், தாய் முகத்தைக் காண்பதற்கு வருவான் என்றாள்! அதனால்தான் ஆயிரம் பேர் அவ்வூர் வீரர் வந்த பின்னும் அவர் இல்லமெல்லாம் ஆரவாரம் எழுந்த பின்னும் மணித்தேரில் சென்ற அவள் மகன் இன்னும் திரும்பவில்லை மாற்றாரை விரட்டாமல் திரும்பி வர அவன் விரும்பவில்லை.

*

“வேம்புசினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும் நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும் எல்லா மனையும் கல்லென் றவ்வே வெந்து உடன்று எறிவான் கொல்லோ நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே!”

*