சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 6 · 6 / 104
சேரன் வீசும் வாளின் பயனாய் செக்கர் வான்போல் சிவந்தது நிலமும்!
ஈட்டியின் பாய்ச்சல் கண்டு இமை கொட்டியவன் கோழை எனும் இலக்கணத்தை இருவருமே இதயத்தில் பதித்தவர்தான் என்றாலும் சேற்றில் சிக்கிய களிறெனவே - இறுதியில் சேரமான் இரும்பொறை சிக்கிவிட்டான்!
ஆற்றல் முழுதும் காட்டி நின்றான்; ஆயினும் சோழன் முன்னே அவன் தோற்று நின்றான்!
திருப்போர்ப் புறமெனும் சமர்க் களத்தில் திண்தோள் சேரன் தோற்றவுடன் - அடடா; அவனைச் சோழமன்னன் குடவாயிற்கோட்டச் சிறைதனில் அடைத்தான்.
உறைவிட்டெழுந்த உடைவாள் பட்டு உயிர்விட்டுப் போரில் புகழ் சேர்க்க முடியாமல் சிறைப்பட்டு வாழும் நிலை வந்ததே என்று சிந்தை அணு ஒவ்வொன்றும் நோக வாடினான் சேரன்.
தாகம் ஒருநாள் அவன் நாவை உலர்த்த - சிறைக் காவல் வீரனை அருகே அழைத்து - தண்ணீர் விரைவில் கொணர்க என்றான் - சற்றுத் தாமதமாகக் குவளையில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததினாலே - நெருப்பை மொண்டு தகித்தது சேரனின் நெஞ்சம்!
பண்டு வாழ்ந்த குலப் பெருமையெலாம் துண்டுபட்டுப் போனதெனத் துவண்டுவிட்டான்!
ஏடொன்று எழுதிவைத்து எதிர்காலத் தமிழகமே - அதனைப் பாடென்று விட்டுச் சென்றான்!
“பிள்ளையொன்று இறந்து பிறப்பினும் - சதைப் பிண்டமொன்று பிறந்து தொலைக்கினும் மூப்பு கொண்டு மடிந்திடினும் முடிவிலொரு நோய் கண்டு முடிந்திடினும் போரில் கலந்து விழுப்புண்பெற்று - மானமிகு வீரர் என மாண்டிடாத பழி துடைப்பதற்காக வாள் கொண்டு உடலில் கீறி - வான்புகழ்; வாழ்வில் சேர்த்தபின்பே உடலடக்கம் செய்திடும் மானமரபே அடலேறுகள் மலிந்திடும் தமிழர் மரபு!
அந்தப் பண்பாட்டு மரபு வழி வந்துதித்த நானோ - மனப் புண்பட்டு பகையரசின் சிறைப்பட்டு நாய்போல தண்ணீர்க்கும் காத்திருக்கலானேன் - இனி உண்ணீர் என்று பன்னீர் தந்து உபசரித்தபோதும் - தகுதியன்று இனி உயிர்வாழ்தல் - அதனாலே தமிழ்த்தாயே! என் மானங்காக்க உன் மடிதனிலே விழுகின்றேன்; தாங்கிக் கொள்க!”
இப்படி ஏழடிப் புறப்பாடல் ஒன்றை எழுதிவிட்டு - சிங்க ஏறுபோல் சேரமன்னன் பெயரைப் புகழில் நட்டான்!
எப்படிப்பட்டோர் இருந்தார் மறைந்தார் என்பது - அவரவர் எச்சத்தாற் காணப்படும் என்பதற்கொப்ப
சேரமான் கணைக்கால் இரும்பொறை வீரவாளினை ஓலையாய்க் கொண்டு தீட்டிய புறப்பாடலை நீட்டுகின்றேன் உம்மிடையே -
படித்துப்பாரீர்! - உணர்ச்சியால் துடித்துப் போவீர்!
*
\* “குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும், ஆள்அன்று என்று வாளின் தப்பார்; தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம், மதுகை இன்றி, வயிற்றுத் தீத்தணியத் தாம் இரந்து உண்ணும் அளவை ஈன்மரோ, இவ் உலகத்தானே.”
(புறநானூறு : பாடல்: 74 பாடியவர் : சேரமான் கணைக்கால் இரும்பொறை)
பொருள் விளக்கம் :
ஊன்தடி = சதைப்பிண்டம். ஆள்அன்று என்று வாளின் தப்பார் = ஆளல்ல என்று கருதாமல் வாளால் வெட்டிடத் தவறமாட்டார். ஞமலி = நாய். கேளல் கேளிர் = பகைவர். மதுகை = மனவலிமை
*
துணை நின்றாள் தோழி!
தளிர் என்றால் கொழுந்தன்றோ! தடம் என்றால் வழியன்றோ! அஃதேபோல் தலைவன் என்று துணைவனையும் தலைவி என்று துணைவியையும் - பழந் தமிழ் நூல்கள் குறிப்பது வழக்கமன்றோ!
களவு வழியில் தலைவன் தலைவியின் இன்பக் காதல் அரும்பிடும் போதெல்லாம் - தக்க உளவுகள் கூறிஅதனை மலர்ந்திடச் செய்வர் உயிர்த் தோழனும் தோழியும் என்று; உரைத்திடும் இலக்கியம் தமிழனுக்குண்டு - தலை நரைத்திடு கிழவரும் நன்றாய் அதனைச் சுவைப்பதுமுண்டு!
ஐங்குறு நூறு எனும் பைந்தமிழ்ப்பனுவலில் நெய்தல், மருதம், குறிஞ்சி, முல்லையிலும் - மழை பெய்தல் பொய்த்த பாலையிலும் - பிணைந்த காதலர் எய்திடும் இன்ப நிகழ்ச்சிகளை - மாலையில் கொய்திடும் மலர்களென வழங்குவர் புலவர்!
ஓரம்போகியார் எனும் ஒரு கவிஞர், காரம்போகாக் கடுகெனத் தருவார் மருதப்பாடல்! குறிஞ்சி நிலத்தில் கூவுகின்ற - காதல் குயிலினத்தின் குன்றா அன்பைக் கவிக்கோமான் கபிலர் என்பார் - இப் புவிக்கோர் விருந்தாய்ப் படைத்திடுவார்! ஆயனார் வாழும் முல்லை நிலத்தில் ஆவிநிகர்க் காதலர் ஆடி மகிழ்வதை பேயனார் எனும் கவிக்கோ - தமிழர் பெருமைக்கோர் சான்றாகப் பேசிடுவார்!
Full-page colour illustration. No printed caption is visible on the source page.
The illustration is preserved as a separate physical-page record and no literary identity is inferred from the image alone.
அம்மூவனார் எனும் புலவரோ அலை தழுவும் நெய்தல் நிலத்தில் - காதல் கலைபயில்வோர் களித்திடும் காட்சி கவினுற வரைந்திடுவார்!
பாலை நிலத்திலும் - காதல் பண்பாடிடும் பறவைகள் உண்டென்று - அவர்தம் பிரிவின் வேதனை உரைத்திடுவார்; பரிவுடனே ஓதலாந்தையார் எனும் புலவர்!
