உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 5
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 5 · 5 / 104

மயிர் நீப்பின் வாழாத கவரிமான் போல் மானம் வரின் உயிர்நீப்பர் எனும் குறளுக்கு; தயிர் கடைந்தால் தலைகாட்டும் வெண்ணெய் போன்று தமிழ்ச்சங்க காலத்து வீரன் வாழ்வே உண்மைச் சான்று.

தவழ்ந்து வரும் தன் மகவை முத்தமிடுவதற்கும் குனிந்திடாமல் தலைக்குமேலே தூக்கச் சொல்லிக் கொஞ்சுகின்ற தன்மானத் தமிழ்ச்சிங்கம் அவன்!

தாமரை மொட்டிரண்டை ஏந்தி வரும் தன் பட்டத்து ராணியையும் நெளியாமல் நிமிர்ந்து நின்றே நெஞ்சகத்தில் அணைத்துக் கொள்வான்.

நிலம் நோக்கும் வழக்கமின்றி நேர்ப் பார்வை செலுத்தித்தான் நிலவு முகத்தரசி நெற்றியிலே இதழ் பதிப்பான்.

படுத்திருக்கும்போதும் பஞ்சணையில் வினாக்குறிபோல் வளைய மாட்டான் வில்லில் தொடுத்திருக்கும் கணையைப்போல் கால்நீட்டித் துயில் கொள்வான்!

“வளையாத முதுகெலும்பு பெற்றவனோ? வணக்கம் எனும் பொருள் விளையாத வயற்காடோ அவன் இதயம்?” என வியந்து, வாய் பிளந்து மூக்கின்மேல் விரல் வைத்து - அவனை வாழ்த்தியவர் பலருண்டு!

“இரும்பொறை” மரபில் வந்த இணையிலா வீரனவன். இரும்பொத்த கணையமரம் போல கால் படைத்த சேரனவன்;

- அதனாலே

முழுப்பக்க ஓவியம்

இந்த physical scan முழுப்பக்க ஓவியமாகும். `மானங்காத்த மறவன்!` பகுதியின் வாசிப்பு ஒழுங்கில் scan 25 மற்றும் scan 27 இடையே உள்ள இந்த ஓவியம் தனி physical-page record ஆகப் பாதுகாக்கப்படுகிறது.

சேரமான் கணைக்கால் இரும்பொறை யென்னும் செந்தமிழ்ப் பெயருடன் செங்கோல் ஏந்தினான்.

தொண்டித் துறைமுகம் அவன் ஆட்சித் தலைநகர் - அதனை “டிண்டிஸ்” என்று யவனர்கள் அழைத்தனர்!

மூவன் என்னும் முடியுடை வேந்தனை வீழ்த்தி - அவன் முகவாய் நொறுக்கிப் பற்களைப் பெயர்த்து - தனது கோட்டை வாயிற் கதவின் பெரிய பூட்டின் மீது பொருத்தி வைத்தான் என்று “களவழி நாற்பது” பாடிய பொய்கையார் எனும்புலவர்

- அவனது

களப்புகழ் பலபடக் கூறிக் களித்திடுவாரே!

தமிழரிடை ஒற்றுமை என்பது அத்திப்பூ - ஆடிப்பிறை

- அதனாலே

தமக்கிடையே போர் தொடுத்து தமிழ் இனம் பிளவுபட்ட சேதி

கூறும்

வரலாற்று ஏடுகளின் வரிகளாக ஆகிவிட்டார் - தமிழர் வாளாற்றல் காட்டுதற்கு வரிந்து கட்டி இனத்துக்குள்

இரண்டுபட்டார்!

செங்கணான் எனும் சோழன், செருமுனையில் சிறுத்தை போன்றான்! எங்கணும் வெற்றி கண்டு புகழ்வானில் பறக்க விட்டான் புலிக் கொடியை!

அது கேட்டுச் சேரமன்னன் ஆர்த்தெழுந்தான்! அணி தேர்ப்புரவி ஆட்பெரும்படை அவன் ஆணை கேட்டுப் பின்தொடர,

“மங்குமோ எந்தன் வீரம்? என் மாவலித் தோளின் முன்னே தங்குமோ சோழன் பெற்ற வெற்றி” யென்று கணைக்கால் இரும்பொறை கர்ச்சித்து கங்குல் கிழித்தெழும் ஒளியாக எதிர்ப்பட்டான்!

முரசுகள் போலே மத்தகம் படைத்த முரட்டு யானைகள் மோதிடவே அரசுத் தேர்களின் அச்சாணி கழன்று ஆயிரம் சுக்கல்கள் ஆயினவே!

குளத்து நீரில் செத்து மிதக்கும் குறுங்கெண்டை மீன் போலே குதிரைகள் குளம்படி குருதிச் சேற்றில் அழுந்தி பதிந்தனவே!

கட்கம் ஏந்திய காலாட் படையினில் காயம் ஒருசிலர் முதுகில் பட்டிடவே வெட்கம் துரத்த - அவர்கள் வீழ்ந்து மடிந்தனரே!

உறுதி முழக்கமும் குருதிப் புனலும் இறுதிப் பயணமும் எங்கும் நிறைந்த களம்! பொருதிடும் இருவரில் வெல்வது யாரென அறுதியிட முடியாமல் அமைந்த களம்!

ஆளுக்கொரு மின்னலை எடுத்து வாளுக்குப் பதிலாக வீசினரோ - எனச் சோழன் சுழற்றும் வாள்பட்டுச் சூரர் தலைகள் ஆயிரம் உருளும்!