சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 28 · 28 / 104
\* “பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின் செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சி, உயவொடு வருந்தும்மனனே! இனியே புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான், முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே! உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு மான் உளை அன்ன குடுமித் தோல் மிசைக் கிடந்த புல் அண லோனே.”
*
(புறநானூறு பாடல் : 310 பாடியவர் : பொன்முடியார்)
பொருள் விளக்கம் :
மடுப்ப = உண்ணுமாறு செய்ய. செறாஅது = செல்லமாகக் கோபித்து. உயவொடு = கவலையுடன். மனனே = மனமே. களிறட்டு ஆனான் = களிறுகளைக் கொன்றவனானான். உரவோர் = மூத்தோர் (தந்தை). உன்னி = கவனித்தல். மான் உளை அன்ன குடுமி = குதிரை மயிர் போன்ற அடர்த்தியான குடுமி. தோல் = கேடயம். புல் = புல்லிய. அணலோன் = தாடியுடையவன்.
*
புரிந்துகொண்டான்; பிரிந்துசென்றார்!
இருவீணை, தலைகீழாய் இருத்தல் போன்று இடைக்குக் கீழ் இன்பபோதை ஊட்டுக்கின்ற உருவத்தாள்! இணையாகக் குலுங்குகின்ற இளநீரைக் கெட்டியாக இறுக்கிப்போடும் கச்சையணிந்த கன்னிப் பருவத்தாள்! கன்றுக் குட்டியொன்றைத் தாம்பில் பிணைத்து என்றும்போல் இசைபாடிக் குதித்து மகிழ்ந்து, குன்றுக்கு அருகேயுள்ள தோட்டத்தை நெருங்கிடவே; குறுக்கிட்டான் எதிரே; குறுஞ்சிரிப்புக் காளையொருவன்! ஆம்பற்கொடி போன்று அவள் கையில் பிடித்திருந்த தாம்புக் கயிறுதனை ஒருகையால் பற்றிக்கொண்டு “சாம்பல் நிறக் கன்றுக்குட்டி நலந்தானா?
அதனை உயிராக ஓம்புகின்ற என்னுயிரே; நீயும் நலந்தானா?” எனக்கேட்டான் துள்ளிப் பாய்ந்திட்டாள் அத்துடியிடையாள் - “நீ அள்ளிப்பருக நான் என்ன அருவி நீரா? வழியில் போகும் என்னிடம் எதற்காக வீண்வம்பு? என் விழியின் அனல்கண்டு விலகிப்போ; இல்லையேல் என்மொழியும் கனலாகும்” என எச்சரித்த இளமங்கைக்கு நேர்நின்று, “ஏந்திழையே! எதற்காக நான் விலகிப்போகவேண்டும்? பிடிக்க வருவோரைப் பின்காலால் உதைத்து; வாலால் அடித்துப் பிடிபடாமல் ஓடுகின்ற பெண்எருமைக் கன்றைப்போல்; எனை இடித்துத் தள்ளிவிட்டு இங்கிருந்து நீ ஓடிவிடு!
உரையாட இஷ்டந்தான் உனக்கும்! ஊர்வாயை மூடமுடியாதே என அஞ்சுகின்றாய்! முதலில் உன் வாயை என் உதடுகளால் மூடட்டுமா? ஓகோ! பதிலில்லை எனில் ஒப்புதலுக்கு அடையாளமோ?” என்றான். “என்ன துணிவிருந்தால்; எனை வழிமடக்கி இன்னல் விளைத்திடுவாய்? என் தாய்க்குச்
சேதி தெரிந்தால் இந்நேரம் ஓடிவந்து வீதியிலே கன்றை வளைப்போர் மீது சினம்பொங்க வேகமாய்ப் பாய்ந்து முட்டும் பசுவைப் போல் விரட்டியடிப்பாள் உனை!” என்றாள்; அவன் சிரித்தான்! “உன் தாயே வரட்டும்; அல்லால் இந்த ஊரே வரட்டும்! ஊராளும் உன் தந்தை கூட உருவிய வாளுடன் வரட்டும்! யாருக்கும் நான் அஞ்சத்தேவையில்லை; இந்தச் சின்ன எழில் தேருக்கு நான்தான் சாரதியென நீ சொல்லிவிட்டால்!”
என்றான். அவளோ; உடல் குலுக்கி, முகம் சுளித்து, அவனை நோக்கி ஆர்ப்பாட்டம் பலபுரிந்து எதிர்ப்பு காட்டி “அய்யா; நீ பெருமழை பொழியும்போதும் அறியாமல் அசையாமல் நிற்கின்ற காளைமாடென ஆகிவிட்டாய்! ஏட்டிக்குப் போட்டியாக ஏதேதோ சொல்லி காட்டிவிட்டாய் உன்காதல் எண்ணத்தை!”
எனக்கடு மொழியுரைப்பவள்போல் நடித்தவாறு “எள்ளளவும் வெட்கமின்றிப் போனவனே!” என இழித்துரைத்து பட்டென்று பதிலாய்ப் படபடவெனப் பொறிந்தாள் எனினும் பட்டுப்போல் மென்சொற்களாலே ஒன்று கேட்டாள்; “நாளை நான் கறவைக் கலமுடனே பசுமேயும் இடத்துக்குச் செல்லுகிறேன் காளைநீ அப்போதும் அங்கேயும் வருவாயோ?”
என்பதுதான் அக்கேள்வி! புரிந்து கொண்டான் அவள் உள்ளம்; பின்னர் பிரிந்து சென்றார் புன்னகை புரிந்தவாறே!
*
\* “பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம் எம் தாம்பின் ஒருதலைப்பற்றினை, ஈங்கு எம்மை முன்னே நின்றங்கே விலக்கிய எல்லா! நீ என்னையே முற்றும்? விடு; விடெனன்; தொழிஇய செல்வார்த் துமித்து, எதிர்மண்டும் கடுவை நாகுபோல் நோக்கித், தொழுவையில் நீங்கிச், சினவுவாய் மற்று.”
Illustration
Full-page colour illustration. No source-visible literary text or printed page number is visible on this scan.
நீ நீங்கு; கன்று சேர்ந்தார்கண் கதஈற்றாச் சென்றாங்கு, வன்கண்ணள் ஆய்வரல் ஓம்பு யாய் வருக ஒன்றோ; பிறர் வருக; மற்றுநின் கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான், நீ அருளி நல்கப் பெறின். நின்னையான் சொல்லினவும் பேணாய்; நினைஇக் கனைபெயல் ஏற்றின் தலைசாய்த்து, எனையதூஉம் மாறு எதிர்கூறி, மயக்கப் படுகுவாய்!- கலத்தொடு யாஞ் செல்வுழி நாடிப், புலத்தும் வருவையால் - நாணிலி! நீ”
*
(கலித்தொகை : பாடல் : 116 (முல்லைக் கலி) பாடியவர் : சோழன் நல்லுருத்திரன்)
பொருள் விளக்கம் :
பாங்கு = அருகில். பாட்டங்கால் = தோட்டத்தினில். முற்றாய் = தடுத்திடாதே. தொடீஇய = தொட்டிட. துமித்து = கெடுத்து. மண்டும் = விரைந்தோடும். கடு = மிகவும். வயம் = வலிமை. நாகு = பெண் எருமை. கதஈற்று ஆ = கோபங் கொண்ட தாய்ப்பசு. கனைபெயல்ஏறு = மிகுதியான மழை பெய்யும்போதும் நிற்கும் காளை.
*
மயங்கா மார்புடை மறவன் நீயே!
தென்புலத்துக் கடலோரம் தீமை விளைவித்தோரை; வென்றடக்கிய வீரவாளுக்குடையோன்
வடபுலத்து வடுகமன்னர் படையொடுக்கி வாகை மாலைதனைத் தோளில் சுமந்தோன்
இளஞ்சேட் சென்னியெனும் பெயருக்குரியோன் வளமிகு சோழமன்னன் திறன்மிகு வலிமையினை
ஊன்பொதிப் பசுங்குடையார் எனும் ஒரு புலவர் மீன்துள்ளும் அருவிநடைத் தமிழால் தந்தார்!
நெய்தலங்கானல் சோழன் எனும் பிறந்த ஊர்ப் பெருமையுடன் நெடிய புகழ் செருப்பாழியும் பாமூளூரும் வென்ற சோழன் எனும் அடைமொழியும்,
இரு கருத்துக்கு இடமேயின்றி; இற்றைப்புலவர்கள் இளஞ்சேட் சென்னியினையே குறிக்குமென்பர்!
புறப்பாடல் தமிழ்ப்புலவர் இயற்றும்போதே புராணக் காதைகளும் புழக்கத்தில் உண்டு போலும்!
அதனாலே அற்புதமாய் உவமையொன்றை அரும்புலவர் பசுங்குடையார் அன்றைக்கே எழுதியுள்ளார்.
