உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 27
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 27 · 27 / 104

பொருள் விளக்கம் :

புலவரை இறந்த = பாடுவோரின் அறிவின் எல்லையைக் கடந்த. நிலவரை = பூமியின் ஆழம். புரிசை = மதில். ஞாயில் = கோட்டையின் உச்சியில் உள்ள ஏவறை. மிளை = காவற்காடு. குறும்பு = சிறிய அரண். ஆடுகொள = வெற்றிகொள்ள.

*

நடுக்கத்தில் கண்ட நயம்!

வெல்லம்போல் பரத்தையின் உடலைச் சுவைத்து; இல்லம் ஒன்றிருப்பதையும்; அங்கே தனக்காகக் கள்ளமிலாப் பெண்டொருத்தி கண்ணீர் உகுத்துக் கவலை மிகக் கொண்டிளைத்துத் தேய்வதையும்; எண்ணிப்பார்த்திடவே இமைப்பொழுது நேரமின்றி கண்ணிக்குள் அகப்பட்ட பறவைபோல் காளையவன் கலவியின்பக் கலையனைத்தும் கண்டு கண்டு; காமத்துப்பால் பருகிக்கிடந்தான் மொண்டு மொண்டு!

இன்பத்துப்பாலுக்கென இன்னும் சில குறள் எழுத இனியொரு முறை வள்ளுவனும் பிறந்து வரவேண்டுமென; இனிதினிதாய்ப் புதிது புதிதாய் இருவரும் புதையல் தோண்டி எடுத்தனர்! ஈருடல் ஓருடலாய் இணைந்து புரண்டனர்; இதழால் நனைந்து; பிணைந்து உருண்டனர்!

தெவிட்டியதோ தேன்? அல்லால்; தெளிந்ததுவோ இதயவான்? தேரேறிச் சென்றுவிட்டான் தன் தேவியினைத் தேற்றி வாழ!

இழந்துவிட்ட பொருளொன்று வலியவந்து; இருகையில் ஏறிக்கொண்ட விந்தைபோல, மறந்துவிட்டான் என்றிருந்த மணவாளன் மீண்டும் திறந்துவிட்ட கூண்டுக்கிளிபோல திரும்பி வந்ததாலே; பறந்துவிட்டதடி கவலையென்று தோழியின் தோள் பற்றிப் பத்தினியாள் மகிழ்ச்சியினால் விழுந்திடாமல் சாய்ந்து நின்றாள்!

தலைவியின் வீடு சேர்ந்த தலைவனை மீண்டும் காணத் தவித்திட்ட பரத்தையோ; தந்திரமொன்று செய்தாள்! தலைவியின் தோழியினை வீட்டுக்கழைத்துத் தலைவனுடன் ஒட்டியுறவாடித் தான் வாழ்ந்தபோது;

Illustration

Full-page colour illustration. No source-visible literary text or printed page number is visible on this scan.

நடந்த கதையொன்றைச் சொல்லி அந்த நகைச்சுவைத் துணுக்காகத் தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்! “தோழி நீயொன்று அறிவாயா? தோகையெனது தோள்தொத்திக் காளையவன் சுகித்திருந்தபோது; கொக்கின் மூக்கைப்போல் நீண்டிருக்கும் குளத்து ஆம்பல் மலர் குலுங்கும் ஊரான்; கோபத்தில் ஒருநாள் கோதையென் மீது பாய்ந்து கூந்தல்தனைப் பற்றியிழுத்ததோடமையாமல்; கைவளையலையும் கழற்றுதற்கு முனைந்து; கடுகடுத்த முகத்துடனே குதித்தோடி வந்தான்!

ஆத்திரம் கொள்ளாதே தலைவா! பொறுத்திடுக! அமைதி நீ கொள்ளாவிடில்; இக்கணமே இச்செய்தியினை; உன் அருமைமிகு மனைவிக்கு அறிவிப்பேன் என நான் உரைத்ததுதான் தாமதம்; உடன் என்ன ஆனான் தலைவன் என்று; உன்னிடம் சொல்வதற்கே இயலாமல் நான் ஒருத்தி மட்டும் தனியாகச் சிரிக்கின்றேன் ஓயாமல்!”

என்றாள்! “அப்படியென்னதான் நடந்தது? அதை நானறியச் செப்புக பெண்ணே” யென்றாள், செந்தாழம்பூத் தோழி! “ஆநிரை கவர்வதற்கு வில்லேந்திப் போர்புரிந்து ஆர்த்தெழுந்த பகைவர்களை வென்றுகாட்டி, மானமுரசு கொட்டி வாழுகின்ற நமது மன்னன் மலையமானின் அத்தாணி மண்டபத்தில்; வேற்று நாட்டினின்றும் பரிசில்பெற வந்துள்ள - இசைக் கூத்தர்கள் கொட்டுகின்ற மத்தளத்தில் அவர்தம் கைவிரல்கள் பட்டு ‘மார்ச்சனை’ வைத்தபக்கம் அதிர்வது போல் அவன் உடல் முழுதும் நடுங்கியது கண்டேன்” என்றாள்!

இச் செய்தியினைத் தோழி சென்று அவன் இல்லத்தரசியின் காதில் போட்டுவிட்டால்; “சிச்சீ! இவரும் ஒரு மனிதரா?” என அவன் துணைவி வெறுப்பாளென்றும்

காய்ச்சிய பால்மீண்டும் காராம் பசுவின் மடி புகுந்தது போல்; கைவிட்டுச் சென்ற தலைவன்; துணைவியைக் கைவிட்டுத் தன் கட்டிலறை நாடி ஓடி வருவான் என்றும்; கணக்கிட்டுக் கொண்டிருந்தாள் அக்கலையழகி; அவள் கனவு பலித்ததா இல்லையா என்பது பற்றி; நற்றிணையில் பாடல் இயற்றிய பரணராம் நற்கவிஞர் சொல்லவேயில்லை; பிறகு நமக்கேன் கவலை? எனினும்; “மனைவிக்கு உரைத்திடவா?”

எனக் கேட்டவுடன் மத்தளத்தைக் கொட்டி முழக்குகையில் - அதன் ‘மார்ச்சனை’ வைத்த பக்கம் அதிர்வது போல் மாவீரன் நடுக்கமுற்றான் என்பதில்தான் என்ன நயம்!

என்ன நயம்!

*

\* “உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்ளுகிர் மாரிக்கொக்கின் கூரலகு அன்ன குண்டுநீ ராம்பல் கண்துறை யூரன் தேங்கம ழைம்பால் பற்றி யென் வயின் வான்கோல் எல்வளை வௌவிய பூசல் சினவிய முகத்துச் சினவாது சென்றுநின் மனையோட்கு உரைப்பல் என்றலின் முனையூர்ப் பல்லா நெடுநிரை வில்லின் ஒய்யும் தேர்வண் மலையன் முந்தைப் பேரிசைப் புலம்பிரி வயிரியர் நலம்புரி முழவின் மண்ணார் கண்ணின் அதிரும் நன்னர் ஆளன் நடுங்கஞர் நிலையே.”

*

(நற்றிணை : பாடல் : 100 பாடியவர் : பரணர்)

பொருள் விளக்கம் :

வள்ளுகிர் மாரி = பெரிய நகம் கொண்ட பறவையினம். தேம் கமழ் ஐம்பால் = நெய் மணக்கும் கூந்தல். எல்வளை = ஒளியுடைய வளையல். ஒய்யும் = இழுத்து வரும். முந்தை = முன். புலம்பிரி = வேற்று நாட்டு. வயிரியர் = கூத்தர். மண் ஆர் கண் = மார்ச்சனை எனும் கரிய சாந்து வைத்த பக்கம்.

*

ஒரு தாயின் தாலாட்டு!

பகைவெல்லச் சென்றிருக்கும் கணவனது பனைவைர நெஞ்சத்தின் வீரத்தை நினைத்தவாறு பகல்முழுதும் குடும்பத்துப் பணிமுடித்துச் சற்றுப் படுத்துறக்கம் கொள்வதற்குச் செல்லும் முன்னர் பாசமுடன் மகனைக் கூவியழைத்துக், “கண்ணா! பாலமுதம் இதோ பருகிட வாடா;” என்பேன்! “வரமாட்டேன் போ” என்று நிலாவெள்ளி ஒளியினிலே வட்டமிட்டு விளையாட ஓடிடுவான் எதிர்வீட்டுப் பிள்ளையுடன்!

வந்துவிடும் எனக்குக் கோபம் — கோலொன்றை எடுத்தோங்கி “வரமாட்டேன் என்றா சொன்னாய்? இதோ வந்துவிட்டேன்” எனத் துரத்திடுவேன்; அடிக்கமாட்டேன்! ஆனாலும் என் தூயமகன் அஞ்சி நடுங்கிப் பதுங்கிடுவான்! கோலுக்கே இந்தப் பயம் கொள்கின்ற பிள்ளாய்; நீ — நாளை வேலுக்குப் போர்முனையில் என்ன பதில் சொல்வாய் என்பேன்! இழுத்து வந்து செல்லமாய்க் கன்னம் கிள்ளிப் பழுத்திருக்கும் கோவைக்கனியாம் அவன் இதழில்; தேன்கலந்த பாலின் கிண்ணம் மெல்லக் கவிழ்த்து தெம்பாக இருப்பதற்கு முழுவதையும் அருந்தென்பேன்!

அழகுதமிழ் மழலைச்செல்வன் அதனை மறுக்காமல் அச்சத்தின் காரணமாய் அனைத்தும் பருகிடுவான்! பிறைபோல இருந்த பிள்ளை முழுநிலவாக உருவெடுத்து குறையில்லாத் தோற்றமுடன் குன்றம் போல் வளர்ந்து விட்டான்! தாலாட்டப் பிள்ளையொன்றைத் தந்துவிட்டுப் போராட்டக்களம் சென்ற என்னவரோ;

Illustration

Full-page colour illustration. No source-visible literary text or printed page number is visible on this scan.

தமிழ் மண்ணின் பண்பாட்டுக் கேற்றவாறு தட மார்பில் வேல்தாங்கி நடுகல்லாய் நின்றுவிட்டார்! நானும் கல்லாக மனத்தை ஆக்கிக்கொண்டு வானதிரப் புவி வாழ்த்துகின்ற மானத்தை ஊனமின்றிக் காப்பதற்கு உறுதி பூண்டு உயர் வீரக்குடிமகனாய்ப் பிள்ளைதனை வளர்த்தேன்! கட்டியணைத்துக் களித்த என் கணவனது நெஞ்சகத்தை வெட்டிப்பிளந்து வீழ்த்திவிட்ட பகைப்புலத்தை; எட்டியுதைத்துத் துரத்தி ஏற்றிடுக வெற்றிக்கொடி யென்றும், எதிரிகளின் கோட்டையிலே நம் முரசு முழங்கட்டுமென்றும், உச்சிமோந்து திலகமிட்டுக் குடுமிதனைக் கோதிவிட்டு உடைவாளைக் கையில்தந்து, “சென்றுவா மகனே” என அனுப்பி வைத்தேன்

அவனோ; கொடுவாளால் களிறுகளைக் கொன்றுபோட்டுக் குன்றுகளைப் பந்தாடுதல் போல் அவற்றை உருட்டிவிட்டுப் படுகளத்தில் விளையாடி வினை முடிக்கின்றான் என்றும், நெடுமரம் போல் பகைப்படை வீழ்கின்றதென்றும், அடுக்கடுக்காய்த் தித்திப்புச் செய்திகள் வந்திடவே அடக்கவொண்ணா ஆவலுடன் அது காணக் களம் புகுந்தேன்! ஐயத்திற் கிடமேயில்லை வெற்றி நமக்கேதான்... ஆனால் ஒன்று; அங்கே என் மகனைத்தான் காணவில்லை! குருதி மணம் கமழுகின்ற போர்க்களத்தில் குமுத மலர் மொட்டுக்களாய் முளைக்கும் தலைகள்!

வீழ்ந்துள்ள வீரர்தம் உடல்களோ கவிழ்ந்துவிட்ட படகுகளாம்! வெட்டுண்ட கைகால்கள் வேலையின்றி மிதக்கின்ற துடுப்புகளாம்! சூழ்ந்துள்ள பிணக்குவியல் நடுவில் சென்றேன். “ஆழ்ந்துள்ளேன் கவலையினால்; அருமை மகனே! நீ போர்க்களத்துப் பிணமாகி வாழ்கின்றாயா? அன்றி புறமுதுகிட்டோடிச் செத்துத் தொலைந்தாயா?”

எனக்கேட்டுத் துடித்திட்டேன்! “வாழ்கின்றேனம்மா வீரனாக!” என்றொரு குரல் தாழ்கின்ற என் தலையை நிமிர்த்திற்றாங்கே!

குரல் வந்த திசைநோக்கிப் பறந்துபோனேன்! - “உள்ள உரம் வாய்ந்த மகனே! நீ எங்கே?” என்றேன். “இங்கே” என்றான்; கண்டு கொண்டேன்! “வலம்புரிச் சங்கே!” என்றவாறு தழுவிக்கொண்டேன்! கையில்; தாங்கிப் போரிட்ட கேடயம் தரையில் கிடக்க; அதில், தங்கமகன் மார்பில் அம்புதாங்கி வீழ்ந்து கிடந்தான்! “வெற்றியம்மா வெற்றி” என்றான் - அவன் நெற்றியிலே முத்தமிட்டு, “என் நித்திலமே! போர்முனையில் உயிர்விட்டு மானம் காத்த தந்தைக்கு நேர்வழித் தோன்றலாய் வந்துதித்தாய் வாழ்க!”

என்றேன்! “ஊடுருவியிருக்கின்றதே மார்பில் அம்பு — வலி உனக்குத் தாங்காதே மகனே!” என்றேன்; அழுதுவிட்டேன்! “உண்மையா அம்மா? உன் கண்ணால் கண்டு நீ எனக்கு; உரைக்கும் வரை நான் உணரவில்லையம்மா!” என்றான்! உயிர்விட்டான் மடிமீது! போய்விட்டான்; உயிரோடு எனைமட்டும் விட்டுவிட்டு! ஊர்ப்பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டு உண்பதற்குப் பிடிவாதம் பிடித்தபோது — நான் ஓங்கிய கோல் கண்டு ஓடிய என் மகனா; மார்பில் தாங்கிய கணையுடனே தாயகத்தை மீட்கும் போரில் தன்னுயிரைத் தருவதற்கும் துணிந்து நின்றான்!

என்னுயிரே! என் மகனே! நீ வாழ்க! என வாழ்த்துகின்றேன்!

*