சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 13 · 13 / 104
உடலெங்கே? உயிரெங்கே? இவ்விரண்டும் ஒன்றைவிட்டு ஒன்றகன்று பிணமாக மாறிவிடும்! அதனாலே; மன்பதை ஆளும் ஆட்சியின் மாட்சியே - அந்த மக்களுக்குயிராம்; அவர்கள் வாழும் மண்ணுக்கும்
உயிராம்!
வேற்படை விற்படையென விதவிதப்
படைகளிருப்பினும்
விழிப்புடன் வேந்தன் விரைந்து செயல்படல்
வேண்டுமன்றோ?
வெளிநாட்டுப் பகைப்புலத்தை விரட்டுகின்ற வீரமுடன் ஒளிநாடாய்த் தன்னாட்டை உருவாக்கி வைப்பதற்கு தெளிவுள்ள ஆட்சித் திறன் தேவையன்றோ?
சோம்பலினால்
நெளிகின்ற போக்கிருந்தால்; நெல் எங்கே? நீர் எங்கே? அறிவார்ந்த அரசொன்றே நாட்டுக்குயிராய்
அமைந்துவிடின்
அதன்பின்னர் நீர்வளமும் நிலவளமும் பிறவளமும் நிறைந்து குலுங்கிவிடும் அறிவீர்!” என்றார்.
மோசிகீரனார் மொழி கேட்டுப் புலவரெலாம் தமது வாதம் தூசியென ஒப்புக்கொண்டு தோல்வியினை ஏற்றுக்கொண்டார்! நெல்லும் உயிரன்றே! நீரும் உயிரன்றே! எனக் கல்லில் செதுக்கிய எழுத்தாகப்
புறப்பாட்டு பூத்ததம்மா! அது என்றும் புதுப்பாட்டாய்ப் பொலியும் அம்மா!
*
\* “நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; அதனால் யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே.”
*
(புறநானூறு : பாடல் : 186 பாடியவர் : மோசிகீரனார்)
பொருள் விளக்கம் :
மன்னன் உயிர்த்தே = அரசை உயிராக உடையது. மலர்தலை உலகம் = பரந்துகிடக்கும் நாடு. வேன்மிகுதானை = வேற்படை மிகுதியாக உடைய சேனை. மன்பதை = மக்கள் வாழுமிடம்.
*
ஊரின் பெருமை உணர்த்தினள் ஒருத்தி!
வீராம்பட்டினமென்பது புதுவைக்கருகில் விளங்கிடும் ஊராம் - புலவர் பிரான் வீரைவெளியனார் தோன்றிய இடமென, இதனை விளக்குவர் அறிஞர்! தித்திக்கும் கவிதை தீட்டி அகத்துறையில் புகழ்பெற்ற தித்தனார் எனும் கவிஞர் இவர் பெற்ற மகனேயாவார். திறன்மிக்க மகனை ஈன்ற வெளியனாரும் புறப்பாட்டில் ஒரு புதுமைதனைக் காட்சியாக்கி, வேட்டுவர் இல்லத்துப் பெண்விளக்கின் மாண்புதனைக் காட்டுகின்றார் கவிதை ஒளிக் காவியமாய்!
வேந்தனிடம் விடைபெற்றுக் களம் சென்ற தளபதி வெற்றியினை மாலையாக்கிச் சூடிக்கொண்டு விருதுபல பெற்று வீரக்கொடி விண்தவழ வீடு திரும்பினான் என்ற செய்தி கேட்டு - அவனைப் பாடிப் பரிசில் பெற பாணன் ஒருவன் சென்றபோது - அவன் நாடி வந்த தளபதியின் நல்நெஞ்சக் கொடை இயல்பை நற்றமிழில் பாடுகின்றார், வீரை வெளியனார்.
வெற்றி பெற்ற நாட்டுப் பொருள்களையும் - நமது வேந்தர் வழங்கியுள்ள விருதுப் பொருள்களையும் ஈந்து சிவந்திட இரு கரமும் கொண்டவன்தான் பாய்ந்து பகைவீழ்த்தி வந்துள்ள வீரன் எனப் புகழ்ந்து - அன்பு தோய்ந்த இதயமுடன் அள்ளித் தருவான் பரிசுகளை என்று, ஆழ்ந்த அறிவுசால் வீரைவெளியனார், பாணர்க்கு அறிவித்து அவ்வூரின்கண் அரும்பிமலர்கின்ற அழகு மகளிர் பண்பு நலமும் பாடுகின்றார், கேளீர்!
முசுண்டை கொடியும் முசுண்டைக் கொடியும் பின்னிப் படர்ந்து விரிந்து பரந்ததால் பந்தல் என ஒன்று வேண்டாம் வெயில் மறைக்க என பலாக்கனிகள் தொங்குகின்ற அடர் மர நிழலின் கீழே மகிழ்ந்து,
Illustration
Full-page colour illustration. No source-visible literary text or printed caption is present on this scan.
வேடனொருவன் உறக்கத்தைத் தழுவிக்கொண்டு, வேல்பிடித்த கரத்தைக்கூடத் தளர்த்திக் கிடந்தான். வேலுக்குப் பதிலாக அவனருகே படுத்துக்கொள்ள சேலுக்கு இணையான விழிபடைத்த அவன் துணைவி, விருப்பங்கொண்டு; மெல்ல நடந்து இல்லத்துக்குள்ளிருந்து - அந்த வெல்லப்பாகு இதழாள்; கொடிப்பந்தல்தனைக் கூர்ந்து நோக்குகின்றாள்.
