சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 103 · 103 / 104
“அம்மா வந்து விட்டீர்களா?” என ஆச்சரியத்தால் அலறிவிட்டான்!
ஆமாம்! காவற்பெண்டு எதிர்வந்து நின்றாள்!
“மகனே நற்கிள்ளி! மன்னன் கட்டியையும் அவன் தோழன் பாணனையும் மாமூலனார், கல்லாடனார் எனும் இருபுலவரும் சந்தித்து, பகைவர்களின் உயிர்பறிக்கும் போர்முனையில்கூட பண்பாடு காக்கின்ற நெறிமுறைகள் உண்டு! உறையூரின் இளவரசியை சிறைபிடிக்கச் சென்றீர்; ஓடிவந்தீர் நற்கிள்ளி வந்துவிட்ட செய்தியினைக் கேட்டு! எதிரியின் வலிவு பெருகியதுணர்ந்து நீவிர் எடுத்த முடிவு நன்று! எனினும் எங்களில் ஒரு தமிழ்க்கவியைக் கைது செய்தமைக்கு என்ன நியாயம் உண்டு?
கணநேரமும் தாமதிக்காமல் காவற்பெண்டை விடுவித்திடுக! அப்படியோர் கட்டளையினை இப்போதே நீவிர் பிறப்பிக்காவிடில் இன்றோடு கல்லாடனார், மாமூலனார் உறவு அற்றுப் போயிற்றென முற்றுப்புள்ளி வைத்திடுக;
இரு புலவர்களும் இவ்வாறு சினந்து கொண்டவுடன் ஒரு நொடியும் தயங்காமல் எனை விடுவித்தார்! திருமகனே! உனைக்காண ஓடோடி வந்தேன் - என் மருமகளாய் நற்கண்ணை இங்கு வந்தாளே; எங்கே?” என்றாள்!
“தாயே! அடியேனை மன்னித்திடுக; அவளை நான் மணந்து கொண்டால் தமிழுக்கு கிடைக்கவேண்டிய இலக்கிய அணிகலன்கள் பல கிடைக்காமலே போகும்! தமிழ் இனமானமும் தடந்தோள் வீரமும் மேலும் உயர்ந்து அமிழ்தாய்க் கவிதைகள் அவள் இயற்றிட வேண்டும்; அதை விடுத்து, அந்தப்புரச் சிறையினில் அந்தப் பாடும் பறவையை அடைத்துப் போட்டால் அணுப் பயன்தான் உண்டோ, தமிழுக்கு?”
என்றான்!
“இலக்கியங்கள் தமிழில் வார்த்தெடுக்க; இல்வாழ்க்கை தடையாக இருக்குமென்று யார் சொன்னார்? மாந்தோப்பில் குலுங்குகின்ற பழங்களைப்போல்
மங்காப்புகழ் தமிழ்க்கவிதை குவிப்பதற்கு மணவாழ்வு மறுப்பா கூறும்? மாதுளைச் சாறுடன் மலைத்தேன் கலப்பதாலே கசப்பா தோன்றும். மகனே கேள்; மறுக்காமல் என் வேண்டுகோளை ஏற்றிடுக!” என்றாள்.
“மறுப்பதாக எண்ணிடாதீர் அம்மா! நான் வெறுக்கவில்லை நற்கண்ணையினை - ஆனால்; போர்வாளைத்தான் நான் காதலிக்கின்றேன். பூவிதழை அல்ல! அல்ல! அல்லவே அல்ல;” என்றான்!
“வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது மகனே - ஊரார் கூறுவதுபோல் உனைப்பெற்ற உண்மைத்தாயாக இருந்திருந்தால், தாய்சொல் தட்டாத தனயனாகத் திகழ்ந்திருப்பாய்! இந்தச் சேய் வளர்த்த செவிலித்தாய்தானே காவற்பெண்டு! அதனாலே அலட்சியப்படுத்துகின்றாய் என்னை; அன்புள்ள இளவரசே! நான் வருகின்றேன்” என நகர்ந்தாள்!
“இதயத்தில் ஈட்டியினை எறிந்துவிட்டீர் தாயே! இனியும் நான் பிடித்த பிடியில் உடும்பாக இருக்கப் போவதில்லை! எனைப் பெற்றெடுத்த தாய்தான் தாங்கள் - அதற்கு எடுத்துக்காட்டாக; நாளைக்காலையிலே நற்கண்ணையினை நானே போய்ச் சந்தித்து நல்ல முடிவை அறிவிப்பேன்”
கிள்ளியின் உச்சிமோந்து வாழ்த்துக்கூறி, “நள்ளிரவு ஆயிற்று அதனால் நாளைக்கு வருகின்றேன்; இருவருமே நற்கண்ணையினைப் பார்த்து இனிய செய்தி கூறுவோம்” என்றுரைத்து விழிவடிக்கும் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துத் தன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றாள் காவற்பெண்டு!
*
நற்கண்ணையின் தூய காதல் வெற்றியினை நினைத்தவாறு நற்கிள்ளி இமை மூடி இன்பத்தில் ஆழ்ந்திருந்தான்! நாழிகை ஒரு சிறிது கழிந்த பின்னர், ஆழிசூழ் உலகமே அவளாய் மாற - கற்பனைக் கனவுலகில் பயணமானான் - காதற் கிளியுடனே இணையாகப் பறக்கலானான்! அச்சத்தால், நாணத்தால், மடம், பயிர்ப்பால் அருகில் வராது அசைந்தாடிச் சென்றவளை
‘இச்’ சென்ற முத்தத்தால் புலன்மாற்றி இழுத்தணைத்துப் பஞ்சணையில் போட்டுக்கொண்டான்! இருமேனி - திருமேனி - ஒன்று கருமேனி; அது அவன் மேனி! மறுமேனி - மாம்பழ நிறமேனி - மங்கையவள் மாயமேனி! அமுதகலசங்கள் இரண்டும் நெஞ்சில் அழுந்த அழுந்த - அவள் குமுதவிழிகளோ குறுகுறுக்க இன்பம்! இன்பம்! இந்தக் கனவுப்பனியின் பொழிவு கலைத்து நினைவுக் கதிரோன் முளைத்திடவே கண்விழித்துக் கொண்ட கிள்ளி; களிப்பு சிந்தும் முகத்தினனாய் - ஒரு கால்தூக்கித் தலையணைமேல் போட்டுக் கொண்டான்!
இவ்வாறு பஞ்சணையில் பரவசமாய்ப் படுத்திருந்த கிள்ளிமீது பறந்து வந்து விழுந்தது ஓர் ஓலைச்சுருள்! எடுத்துப் படித்துப் பார்த்த கிள்ளி, துடித்துப் போய் எழுந்து நின்றான்!
“இன்றிரவு இளவரசி ஐயை இங்கிருந்து சிறையெடுக்கப்படுகின்றாள்”
ஓலையிலே இச் செய்தி கண்டு உரக்கச் சிரித்திட்டான் கிள்ளி! ஓடி ஒளிந்த கட்டிக்கும் பாணனுக்கும் உடல்தினவு அடங்கவில்லை போலும் - என் உடன்பிறப்பாம் ஐயையினைக் காப்பாற்ற; இந்த உடைவாளே போதுமென உறுமிக்கொண்டு, ஊழித்தீயெனப் புறப்பட்டான் - தங்கை உறங்குகின்ற மாளிகைக்கு!
*
1. “வலிமிகும் முன்பின் பாணனொடு மலிதார்த் தித்தன் வெளியன் உறந்தை நாளவைப் பாடுஇன் தெண்கிணைப் பாடுகேட்டு அஞ்சி போரடு தானைக் கட்டி பொராஅது ஓடிய........”
*
(அகநானூறு : பாடல் : 226 பாடியவர் : பரணர்)
பொருள் விளக்கம் :
வலிமிகும் முன்பின் பாணன் = வலிமை மிகுந்த போர் ஆற்றல் கொண்ட பாணன். தார்மலி தித்தன் = வெற்றி மாலைகள் மிகுதியாக அணிந்த தித்தன். பாடுஇன் தெண்கிணைப் பாடு = மகிழ்ச்சியொலி கிளப்பும் தோற்கருவியின் முழக்கம். நாளவை = அரசனின் அத்தாணி மண்டபம். போர்அடு தானைக் கட்டி = போரில் பகைவரை வெல்லும் ஆற்றல்மிகு படைகளைக் கொண்ட கட்டிமன்னன். பொராஅது = போராடாமல்.
*
ஒருதலைக் காதல்
11
நீலமயிலொன்று தோகை விரித்ததுபோல் அமைந்த கோலமிகு கட்டிலிலே கோதை ஐயை நல்லாள் அனிச்சமலர் தேகத்தை அரவுரியன்ன ஆடையால் மூடி; அண்ணன் வரும் தகவல் ஒன்றும் அறியாமல், ஆழ்ந்ததோர் உறக்கத்தில் மூழ்கியிருந்தாள்! காவற்பெண்டின் முன்னே கட்டியும் பாணனும் ஐயையின் கட்டழகைக் கற்பனையாய்ப் புகழ்ந்ததொன்றும் மிகையே இல்லை!
பரணர், ஒரு பாவை குறித்து அவள் ஆடையுரித்துப் பாட்டெழுதினாரே; அதற்குச் சரியான எடுத்துக்காட்டாய்ச் சோழமகள், சொர்ணத்தின் வார்ப்படமாய், காளைகளைச் சொக்கவைக்கும் பாற்குடங்கள் படைத்தவளாய்க் காட்சி தந்தாள்!
தென்றல் வந்து பலகணி வழியே நுழைந்து திருட்டுத்தனமாய் அவள் மேலாடை நகர்த்தியதால் வானத் திசைமுழுதும் பரவி நின்ற விண்மீன்கள்; திடுக்கிட்டுத் திகைத்துக் கண்சிமிட்டிப் பார்த்து, மலையிரண்டுக்கிடையே வெண்ணிலவு தோன்றி - அதுவும், மாளிகைக்குள் மஞ்சத்தில் குளிர்பொழிவதெவ்வாறு என்ற; மருமத்தை அறிவதற்கு ஆவல் மிகக்கொண்டு, மந்திராலோசனைக் கூட்டமே நடத்துகின்ற விந்தை என்னே!
