உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 102
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 102 · 102 / 104

(அகநானூறு : பாடல் : 113 பாடியவர் : கல்லாடனார்)

2. “குல்லைக் கண்ணி வடுகர் முனையது, பல்வேற்கட்டி நன்னாட்டும்பர்........”

(குறுந்தொகை : பாடல் : 11 பாடியவர் : மாமூலனார்)

3. “நாகிள வேங்கையின் கதிர்த்து ஒளி திகழும் நுண்பல் சுணங்கின் மாக்கண் மலர்ந்த முலகள்........”

(புறநானூறு : பாடல் : 352 பாடியவர் : பரணர்)

பொருள் விளக்கம் :

இகந்தனவாயினும் = எல்லைகடந்த தூரமாயினும். பகைவர் ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பு = பசுக்களைப் பாதுகாத்து பகைவர் உறையும் உணவு மிகுதியான அரண். குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் = திரண்ட திமில் கொண்ட காளைகளுடன் கூடிய பகைவர்களின் பசுக்களைக் கவர்ந்திடும். சுருணை = பூண். கனிகாழ் = நெய்கனிந்த வேலின் தண்டு. எழாஅப் பாணன் = புறங்கொடாத பாணன். நாகிள வேங்கை = கொத்துக் கொத்தாய் பூத்துள்ள இளவேங்கை மரம்.

நுண்பல் சுணங்கு = நுண்ணிய பலவாகிய பூந்தாது.

❀

ஒருதலைக் காதல்

10

பத்து மாதம் சுமந்து பெற்ற தாயினும் சாலப் பரிவு காட்டி வளர்த்த தாய் காவற்பெண்டு; பகைவரது பாசறையின் கூண்டுக்குள்ளே பறவைபோல் சிறகடித்துப் பதைப்பதை அறியாப் பாசமகன் நற்கிள்ளி, ஐயையினைப் பார்ப்பதற்கு, பொற்கூரை வேய்ந்துள்ள மாளிகைக்குள் நுழைந்தவுடன் நற்கண்ணை அங்கிருக்கக் கண்டு அதிர்ந்து போய் நின்றுவிட்டான்!

“அண்ணா வருக!” என அழைத்திட்ட ஐயை நல்லாள்; “உன்னைக் கண்ணாக உயிராகக் கருதுகின்ற கவியரசியினைக் காண்க!” என்றாள்!

“மண்ணாளும் மகராசன் கட்டியென்பான் - மணப் பெண்ணாக உனைக்கொள்ள முற்றுகையிட்டுள்ளான்! மனம் புண்ணாக உறையூர் மக்கள் எல்லாம் புறப்பட்டுப் போருக்குக் கிளம்புகின்றார் - நற்கண்ணையினை; நாளைக் காலைக்குள் போர்ப் பண்ணாகப் படைவீரர்க்குப் பாட்டொன்று எழுதச்சொல்!”

என்றுரைத்த கிள்ளியின் கால்வீழ்ந்து;

“மண்ணாகப் போகட்டும் என் வாழ்வென்று முடிவெடுத்து விட்டீரா? இதற்காகவோ பெண்ணாக நான் பிறந்தேன்?” எனக் கேட்டுக் கண்ணீர் உகுத்தாள் நற்கண்ணை!

“தங்கையினைக் காண வந்தேன் - இங்கும் மங்கையுந்தன் மையல் கதை கேட்கும் வேதனையா எனக்கு வேண்டும்? ஐயை! வருகின்றேன் நான்; நாளை அதிகாலைப் போர்முனைக்குப் போகின்றேன்! நற்கண்ணை நல்லதமிழ்க் கவியரசி - அவளுக்கு

பொற்கிழியொன்றைப் பரிசாக வழங்கி நீயே வழியனுப்பி வைத்திடுக!” எனக்கூறி நகர்ந்தவனை எதிர்மறித்து;

“தன வணிகன் பெற்றெடுத்த மகள்தான் நான்! தந்திடுவீர் பரிசென்று தமிழ் எழுதிப்பிழைக்க வரவில்லை! முந்தி நான் அறிவித்த சூளுரையை முடிமன்னன் மகனே! உமக்கு மீண்டும் நான் நினைவூட்டுகின்றேன்! வாழ்ந்தால் உமை மணந்து வாழ்வேன் - அன்றி வீழ்ந்தால் உமது வாள்முனையால் வீழ்வேன் இஃதுறுதி என அறிக!”

என்றாள்!

“இரண்டுமே நடக்காதென்று அறுதியிட்டு இன்னும் ஒருமுறை கூறுகின்றேன்!” என இன்னாச்சொல் இறைத்துவிட்டுச் சென்றுவிட்டான் கிள்ளி!

புயலில் ஆடாத கொடி பார்த்ததுண்டோ; பொய்யில்லை இதோ இரு கொடிகள், புயற்காற்றில் அசைவற்றுப் போயின காண்!

1. தித்தனிட்ட கட்டளைப்படி நாளவையின் முரச ஒலி; திக்கெட்டும் பரபரப்பாய்ப் பரவிடவே, திகைத்துப்போய் நடுங்கினார்கள் பாணன், கட்டி! கிள்ளியில்லா நேரத்தில் உறையூரை வென்று துள்ளி விளையாடவந்த பகைவர்கள்; முள்ளில் இட்ட ஆடையினை எடுத்தாற் போதுமென்று “கள்ளியாம் ஐயை எனும் கருங்குரங்குப் பெண் யாருக்கு வேண்டு” மென்று கூறிவிட்டுப் போருக்கு வராமலே கடையைக் கட்டி புளிக்குமிந்தப் பழமென்று கூறி, இளிக்கும் நரியைப் போல் ஓடிவிட்டார்!

களம் புகுந்தால் புறமுதுகு காட்டவேண்டும் - பின் உளம் நெகிழ்ந்து கூனிக்குறுக வேண்டும்! காவற்பெண்டு மட்டும் நமது காவலிலே இருக்கட்டும்; காலாள், புரவி, களிறு, தேர்ப்படை நான்கும் திரும்பட்டுமென்ற கட்டி, பாணனது ஆணைகேட்டுச் சட்டி சுட்டதடா - கைவிட்டதடா என்றெண்ணி நண்டுக்குஞ்சுகள் வளைநோக்கி விரைவது போல் நாடு திரும்பியதாம் நலமாக நாற்படையும்!

[Full-page illustration; no printed body text.]

இந்த நற்செய்தி உறையூர் மாளிகைக்கு எட்டியதும், நற்கண்ணையினைத் தழுவிக்கொண்டு ஐயை நல்லாள்; “படையெடுத்து வந்த நச்சுப் பாம்பிரண்டும் பாய்ந்து வரும் கீரியாம் நமது கிள்ளிக்குமுன் நிற்க முடியாமல் நெளிந்தோடி விட்ட நிகழ்ச்சியினைப் பாட்டொன்றாய்த் தீட்டுக!”

என்றாள்.

“செத்திருப்பேன் இந்நேரம் உன் அண்ணன் கையால்! செவிலித்தாய் காவற்பெண்டு வரட்டுமென்றிருக்கின்றேன்! ‘நானே முன்னின்று நடத்திவைக்கின்றேன் திருமணத்தை’ என்றார்; அதை நம்பிக்கொண்டு நானுமின்னும் இருக்கின்றேன் உயிரோடு! எண்ணியவாறு இனிதாய் என்காதல் நிறைவேறி உன் அண்ணியாகும் பேறு நான் பெற்றுவிட்டால் வெண்ணிலவு, தென்றல், தீம்பாகு, தேன்மழையன்ன எண்ணற்ற கவிதைகளை எழுதிக் குவித்திடுவேன்” என்றாள்!

அப்போது தோழியொருத்தி பெருமூச்சு வாங்க ஓடிவந்து பெருங் கோழிநாய்கன் மகள் உயிர் மூச்சு பறிக்கின்ற சேதி சொன்னாள்!

“கட்டி, பாணன் எனும் கயவர் இருவரும் - நமது காவற்பெண்டைச் சிறைக்கூண்டிலிட்டு இழுத்துச் சென்றுளதால் செவிலித்தாயை மீட்டுவர - நாளைக்குச் செருமுனை செல்கின்றார் நற்கிள்ளி!”

இன்பச் செய்தியினைத் தொடர்ந்து - இந்தத் துன்பச் செய்தி வந்ததாலே; இரவுணவை மறுத்துவிட்டு, உறங்குதற்கு இருவருமே தனித்தனி அறைக்குச் சென்றார்!

*

காலையிலே பாணன், கட்டி இருவர் நகர் முற்றுகையிட்டு காவற்பெண்டுத்தாயை மீட்பேன் எனச் சூளுரைத்து; நள்ளிரவில் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்த நற்கிள்ளிச் சோழன் காதில் கதவுதட்டும் ஒலிகேட்க; “இந்த நற்கண்ணையின் தொல்லை தாங்க முடியவில்லை” என முணுமுணுத்தவாறு அசைந்தெழுந்து சென்று அறையின் முன்வாசல் கதவுதனைத் திறந்து பார்த்தான்!