குறளோவியம்
பகுதி 97 · 97 / 300
“அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து!”
என வள்ளுவர் எழுதியுள்ளதை மறந்தனையோ! அந்த மறுவும் இல்லாத முகம் படைத்த இந்த உயிரோவியத்தை நான் காதலிப்பது கண்டு நீ வருந்துவதில் பயனில்லை” என்று, கவிஞன் இனிய குரலில் பதிலளித்தான்.
திங்களழகியோ கை கூப்பி தொழுதவாறு கண்கலங்க, அவனைப் பார்த்துக் கெஞ்சிக் கேட்டாள்.
“என் அன்புக் கவிஞனே! அப்படியானால் உன்னைக் காதலிக்கும் உரிமை கிடையாதா எனக்கு?”
கவிஞன் மெல்ல நகைத்து விடையளித்தான்.
“இதோ என் மடியில் தலைவைத்து உறங்கும் இந்த அழகியின் முகத்தைப் போல ஒளிவீச உன்னால் முடியுமானால், நீயும் இவளைப்போல என் காதலுக்கு உரிமை கொண்டாடும் தகுதியைப் பெறுவாய்! இதைக்கூட வள்ளுவர் குறளாகத் தீட்டியிருப்பதை நீ அறியமாட்டாயா?
இதோ அதையும் சொல்கிறேன் கேள்:
“மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி”
களங்கமுள்ள முகம், கவிஞனின் காதலைப் பெற உரிமையில்லாத அளவுக்கு அவன் காதலியின் முகத்து ஒளியோடு போட்டியிட முடியாத முகம்!” இந்த விளக்கத்தைக் கேட்டதும் நிலவு மங்கை வெட்கத்தால் தலைகுனிந்து எழுந்தாள். அவனிடம் விடைபெற்றுக் கொள்ளாமலே விண்ணோக்கிப் பறந்து கருமுகில் திரைக்குள்ளே ஒளிந்துகொண்டு கண்ணீர் சிந்தினாள்.
மணாளன் மடிமீது தூங்கிய மங்கையின் முகத்தில் மழைத்துளிகள் விழுந்தன. எழுந்தாள்! எழுந்தாள்! இருவரும் கடற்கரை விடுத்து இல்லம் நோக்கி வேகமாக நடந்தார்கள்! அவர்கள் வீடுபோய்ச் சேரும் வரையில் விண்மங்கையாம் திங்கள், வெளியில் தலைகாட்டவில்லை.
அதிகாரம் - 112 - நலம்புனைந்துரைத்தல்; பாடல் - 1117, 1118
விழி சிவந்தது. மொழி குழறியது. வெறி ஏறிக்கொண்டேயிருந்தது. ஏன்? பகை வெட்டிச் சாய்க்கும் வெஞ்சினம் கொண்டதாலா? இல்லை! கொண்ட கொள்கைக்கு ஊறு விளைத்துச் சில துரோகிகள் முளைத்துவிட்டனரே என்ற உள்ளக் குமுறல் அப்படி வெளிப்பட்டதா? அதுவுமில்லை. பின் எதற்காக? அவன் ஒரு குடிகாரன். வழக்கமாகக் குடிப்பவன். மொந்தையிற் கள்ளை மொண்டு குடிப்பதைவிட அவன் சிந்தையில் எதுவும் சிறப்பாகத் தோன்றுவதில்லை.
ஆடி நடப்பது - பாடிச் சிரிப்பது - கூடிக் குடிப்பது - அவன் அன்றாட அலுவல்கள். இழித்துப் பேசுவர் ஊரார், அவன் எதிரில் அல்ல, திண்ணைக்குத் திண்ணை அமர்ந்திருப்போர் அவனைப்பற்றி ஏசுவர்; ஏகடியம் செய்வர். தெருவோரம் அவன் தள்ளாடி வருவதைக் கண்டு விட்டால் வாய்பொத்திக் கொள்வர். சிலர் அவனை வாழ்த்தவும் செய்வர். வசவுக்கும் வாழ்த்துரைக்கும் வேறுபாடு தெரியாத நேரம்தானே அவன் கண்களில் அதிகம். அதற்கோர் சிரிப்பு!
தொடர்ந்து ஓர் அழுகை! வீட்டுக்குள் நுழைந்தாலோ துணைவியின் முதுகு வீங்கும்; முகம் கிழியும். தாய் தந்தை குறுக்கிட்டாலோ, அவர்களுக்கு ‘நாய் நரி’ பட்டம்தான் மிஞ்சும். “அப்பா” என அலறி அழும் செல்வங்கள், அவன் முரட்டுக் கால்களால் மிதிபடும்.
அவனில்லாத நேரம், அந்த ஊர்ப் பொதுமன்றத்தில் அவனது சேட்டைகள் குறித்துப் பலரும் வருந்தினர். அவன் செயல்களால் அவன் வீட்டுக்கு மட்டுமல்ல;
ஊருக்கே அவமானம் சூழ்கிறது எனக் கலங்கினர். இந்தக் களங்கத்திற்கு ஏதாவது ஒரு முடிவு கட்டத்தான் வேண்டும் என்று சிலர் முழங்கினர். அவனை ஊரைவிட்டே துரத்தினால் என்ன என்று ஒருவன் துடிப்புடன் கேட்டு விட்டுச் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டான், அவன் எங்கேயாவது வருகிறானா என்று!
அவனை என்னால் திருத்தமுடியும் என்று ஒருவன் நெஞ்சைத் தட்டிக் கொண்டு எழுந்து நின்றான். அப்போது ‘கலகல’ என ஒரு சிரிப்பொலி. அனைவரும் வியப்புடன் திரும்பி நோக்கினர். “முடியாதப்பா முடியாது” என்று கூறியவாறு வள்ளுவர், மன்றத்தில் நுழைந்தார்.
