உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 88 · 88 / 300

“குழப்பமாயிருக்குதத்தான் உங்கள் உவமை! தெளிவாகக் கூறுக!” என்று சிணுங்கினாள்.

“வரும் வழியில் குறள் அரங்கம் சென்று வந்தேன் என்று சொன்னேன் அல்லவா; அங்கு ஊடலைப்பற்றி ஒரு விளக்கம் கூறப்பட்டது. ஊடல், காதலர்க்கு இன்பம் தரக்கூடிய ஒன்றுதான் என்றாலுங்கூட, அந்த ஊடலையும் அளவு கடந்து நீட்டித்துவிட்டால், அது உணவில் சிறிதளவு உப்பு அதிகமாகிவிட்டால் எப்படியிருக்குமோ அப்படி ஆகிவிடுமாம். உணவில் அளவோடு கலக்கப்படும் உப்புப்போல இருக்கவேண்டுமாம் ஊடல்! இவ்வளவு அழகாக ஊடல் குறித்து வள்ளுவர் எழுதியிருக்கிறார்.

அந்த விளக்கம் கேட்ட நினைவோடு வீட்டுக்கு வந்தேன். அதனால் இன்றைய உணவு பற்றி அப்படிச் சொன்னேன்” என்று மலர்ந்த முகத்துடன் அவன் பதிலிறுத்தான்.

“அப்படியானால் குழம்பில் உப்பு அதிகமோ?”

மனவாட்டத்துடன் அவள் கேட்டாள்!

“ஓகோ! நேற்றிரவு நீ நடத்திய ஊடல் சற்று அளவுக்கு மீறியது என்பதை ஒப்புக்கொள்கிறாயா?” என்று அவன் அவளைக் கேலி செய்தான்.

அன்றிரவு, தான் கொண்ட ஊடலை அளவுக்கு அதிகமாகவே நீட்டித்ததை எண்ணிப் பார்த்து அந்தப் பேரழகி வெட்கத்தால் தலை குனிந்து கொண்டாள்.

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்.

அதிகாரம் - 131 - புலவி; பாடல் - 1302

Large colour illustration of an aged, tearful warrior reclining beneath a fire motif while another armed man looks away.

நாட்டுக் காவலர் அவர். பாட்டுத் தமிழ்ப் புலவர்க்குப் புரவலர். வரலாற்று ஏட்டுக்கு ஒளிசேர்க்கும் வலிமை படைத்த தோளுடையவர். அவர் நெஞ்சு வீட்டுக்குள் கலக்கமெனும் காரிருள், கணநேரமும் நுழைந்ததில்லை. களம்பல கண்டவர் எனினும், பகைப் புலம் மீது பழி தீர்க்க எண்ணிடாத இதயம் கொண்டவர். எதிரிகளின் வாள்வீச்சு அவர் மார்பகத்தில் வீர ரேகைகளை உருவாக்கியதுண்டு. போர்க்களத்தில் பொல்லாப் பகைவர்களை ஆயிரக்கணக்கில் சாவுக்கு விடை கொடுத்தனுப்பி, வெற்றி மாலைகளைச் சூடிய அந்த வீரர்குலச் சிங்கம், இதோ சாவறியிலிருந்து வந்துள்ள அழைப்பிதழைப் படித்துக்கொண்டு படுக்கையில் கிடக்கிறது.

தூதுவர் செல்ல அஞ்சி நடுங்கியதால், தானும் சென்றிடப் பயந்துகொண்டு காலன் அவருக்கே அழைப்புக் கடிதம் விடுத்தனன் போலும், அத்தனை ஆற்றல் மிகு மறவனன்றோ அவர்! அணிதேர்ப்புரவி, ஆட்பெரும் படையுடன் அவரது தலைநகரை முற்றுகையிட்டவர்கள், மஞ்சத்தில் சிரித்து மறுநாள் காலையில் வாடிய மலர்களைப்போல அள்ளிக் கொட்டப்பட்டனர், அவரது போர் முறையின் திறனால்!

அவருக்கும் இயற்கை ஒரு முடிவுரையை எழுதித்தானே தீரவேண்டும். இல்லையேல் மனிதனின் கதை முடிவுறாமல் போய் விடுமே! முடியாத மனித சமுதாயத் தொடர் கதையில், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு கதையுண்டல்லவா? அந்தக் கதையை முடிக்கச் சாவு, ஏட்டைப் புரட்டிக் கொண்டிருக்கிற நேரம்! எழுத்தாணியைக் கையில் எடுத்துவிட்ட வேளை!

மாவீரர், வயது முதிர்ச்சி, நோயின் தாக்குதல் - இவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், இளநகை இதழ்களில் தேக்கி மரணப்படுக்கையில் வேங்கை நோக்குடன் வீழ்ந்து கிடக்கிறார். படுக்கையைச் சுற்றி மருத்துவர்கள், உற்றார், உறவினர், பெற்றெடுத்த கண்மணிகள்! பேரன்புப் பெட்டகமாம் வாழ்க்கைத் துணைவி! அனைவரது விழிகளுமே அருவிகள்தாம்! விம்மியெழும் வேதனைக் குரல்கள், சுற்றுத் தொலைவில்! இன்னும் சில நொடிகள்தான் மிச்சமிருக்கின்றன.

மருத்துவர்கள் புரிந்து கொள்கிறார்கள். மாவீரர், தன் வெள்ளிக்கம்பி மீசையைத் தடவிக் கொண்டே சூழ்ந்து நிற்போரைப் பார்த்து ஆறுதல் கூறுகிறார். கொலு மண்டபத்தில் அமர்ந்து தீர்ப்புக் கூறுவாரே, அதே போன்று அழுத்தம் திருத்தமான தொனி:

“கவலையற்று நான் மகிழ்ச்சியுடன்தான் புறப்படுகிறேன். அழாதீர்கள். அழுது கொண்டு பிறக்கிறவர்கள் சிரித்துக்கொண்டு சாகவேண்டும் என்ற தத்துவத்தை மறவாதவன் நான். பிரியமுள்ளவர்களே! பிரிவு நம்மை நெருங்குகிறது. விடை கொடுங்கள், வருகிறேன்.”

மலர்ந்த முகத்துடன் மாவீரர் விடை கேட்டார். அவர் கண்களில் புத்தொளி வீசியது. அனைவரையும் ஒருமுறை ஆர்வத்துடன் பார்த்தார். திடீரென ஒரு மாற்றம்! மலை குலைந்தாலும் நிலைகுலையா மனம்படைத்த அவரது விழிகள் குளமாயின. சுற்றி நின்றோர் வியப்புடன் அவரைப் பார்த்தனர்.

அவர் அவர்களிடம் மீண்டும் பேசினார் - ஆமாம்! கடைசியாகப் பேசினார்:

“என்னை வியப்படைகிறீர்கள்? எதற்கும் கலங்காத என் விழிகளில் ஏன் கலக்கம் என்றுதானே! களத்தில் வேல்பட்டுச் சாகாமல் இயற்கையான மரணத்தைத் தழுவுகிறேனே என்பதற்காகக் கலங்குகிறேன் என்று கருதுகிறீர்களா? அந்தக் கவலையுண்டு எனினும் அதைவிடப் பெரும் வேதனையொன்று என்னை இப்போது தாக்கிவிட்டது. ஆம்! சாகும்வரையில் மறக்க முடியாத துன்பந்தான் அது! அதனால்தான் கலங்கிவிட்டேன். சாவுக்காகக் கலங்கவில்லை! உங்களுக்கு நினைவிருக்கிறதா?

பத்தாண்டுகட்கு முன்பு பழையனூரைப் படையை எதிர்த்து நான் தலைமையேற்றபோது, தங்கியிருந்த பாசறைக்குத் தீ மூட்டப்பட்டுவிட்டது. எதிரிகள் சூழ்ந்து கொண்டனர். என்னுடைய தளபதிகளில் ஒருவரைக் காணவில்லை. அவர் எனக்குத் தளபதி மட்டுமல்ல, இளமைக் காலந்தொட்டு நண்பருங்கூட! ‘என்ன ஆனாரோ?’

என்று நான் பதைத்து நின்றபோது, அவர் தான்மட்டும் உயிர் தப்பினால் போதுமென்று என்னை ஆபத்தில் விட்டு ஓடிவிட்டார்! நானும் என் வீரர்களும் எஞ்சியிருந்த தளபதிகளும் இறுதிவரை போரிட்டுப் பழையனூர்ப் படையைத் துரத்தியடித்து மீண்டோம்! இப்போது அந்த நண்பரின் செயலை நினைத்துக்கொண்டேன். கலங்கி விட்டேன்.”