குறளோவியம்
பகுதி 87 · 87 / 300
வழியில் தாய் கண்டாள்; வாழ்த்தினாள்; ‘வருக புலியே வெற்றியோடு!’ என்றாள். “தலைவனவன் உன்மீது சிறு கோபம் கொண்ட சேதி நானறிவேன். நீ மறைத்தால் தெரியாமல் போகுமா தம்பி! தாயகத்தின் மேன்மைக்குத் தலை கொடுக்கச் செல்கின்ற படைவரிசை காத்திருக்கும் - கடமை செய்து வா, என் கண்ணே” என்று முன்பவன் மார்பிலே பெற்றிருந்த புண்மீது முத்தமிட்டாள்.
போருக்குச் சென்ற வீரன் எதிரிகளைப் பொடிசெய்து எழும்புப் புழுதியிலே சேர்த்துவிட்டான். இரத்தச் சகதியிலே இரு தரப்புவீரர்களும் இறுதி யாத்திரைக்குச் சித்தமானார்கள். கடைசி வெற்றி பகைவருக்கு என்றோர் சேதி பறந்து வர, “கண்ணிருந்தும் குருடரா நாம்?”
எனக் கேட்டபடி களத்தினிலே, நம் காளை சுழல்காற்றாய்ப் பறந்து சென்றான். தனியொருவன் - தலைவனவன் கண்ணெதிரே பகைப் படையின் பலமழித்தான்; தோல்விப் புகைப்படலம் ஒழித்து நின்றான்; வெற்றிக்கு வித்திட்டான். அம்மவோ! இறுதியில் மறைந்துவந்த அம்புக்கு இரையானான்!
வெற்றிகண்ட படைத் தலைவன், வீரன் சாய்ந்துவிட்ட காட்சிதனைக்கண்டு கதறிவிட்டான்.
சிறியோர் சேட்டை விளைத்த சிறு கசப்பால் கருத்தினிலே வேறுபாடு கொண்டிருந்த காவலனும், களம்பட்டு வீழ்ந்திருந்த காளைதனைக் கண்ணீரால் குளிப்பாட்டுகின்றான்.
சாகின்ற வீரன் சொல்வான்:
“தலைவா! தமைக்காத்த தலைவன் கண்களில் நீர்ப்பெருக்கெடுக்குமாறு ஏற்படுகின்ற இதுபோன்ற களச் சாவுகளை - வீரர்கள் யாசித்தாவது பெறுதல் வேண்டும்.”
தலைவன், தன் சாவு கண்டு கண்ணீர் விடுவது, வீரனுக்கு அவ்வளவு பெருமையாக இருக்கிறது! தலைவனுக்குக் கண்ணீரை வரவழைத்த அந்த வீரச் சாவு பாராட்டுக்குரியது. அதற்கு இதோ குறள்:
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து.
அதிகாரம் - 78 - படைச் செருக்கு; பாடல் - 780
Large colour domestic illustration of a husband eating while his wife sits nearby.
அலுவலகம் சென்றிருந்த கணவனின் வரவை எதிர்பார்த்துக் கால்கடுக்க, வாயிற்புறத்தில் நின்றிருந்தாள் துணைவி. “காலொடிந்து போகுமுன்னே கணவனும் வந்து சேர்ந்தான்” என்ற பாரதிதாசனின் கவிதைக்கேற்ப அவன் வீட்டுப் படியை மிதித்ததும் அவள் புன்னகை சிந்த வரவேற்று கைகால் முகம் கழுவத் தண்ணீர் மொண்டு தந்தாள். ஈரம் துடைக்கத் துண்டொன்றும் ஏந்தி நின்றாள். அவன் கண்ணாடியில் முகம் பார்த்துச் சீர் செய்து கொண்ட பின்னர், உணவருந்தும் மேடையில் உட்கார்ந்து கொண்டான்.
வாழை இலையை அவன் எதிரே போட்டவாறே “என்னத்தான் இன்று இவ்வளவு நேரம்? அலுவலகத்தில் பணிப்பளு அதிகமோ?” என்று கிள்ளை மொழியில் கேட்டாள்.
“இல்லை! வரும் வழியில் குறள் விழாக் கருத்தரங்கம் ஒன்று நடைபெறுகிறது. சற்று அந்த இன்பத்தையும் பருகலாமே எனச் செலவிட்டேன் கொஞ்ச நேரத்தை” என்றான் அவன்.
“தமிழ் மணக்கும் அந்த மண்டபத்திற்கு அழைத்திருந்தால் நானும் வந்திருப்பேனே” என்றபடி, வெள்ளியுருக்கியதுபோல் குழைந்திருந்த வெண்சோற்றை இலையில் இட்டாள். வெங்காயம் உடலுக்கு நல்லதென்று அடுத்த வீட்டு சித்தவைத்தியர் சொல்லியிருந்தார்; தவறாமல் நாள்தோறும் செய்யும் அந்தப் பச்சடியையும் இலையின் ஓரத்தில் வைத்தாள். “கிழங்கு வறுவல், அதிகம் உண்ணக் கூடாதாம்; ஒன்றிரண்டு மட்டும் சுவை பாருங்கள்” என்று சிரித்துக் கொண்டே சொல்லி அதையும் பச்சடிக்குப் பக்கத்தில் வைத்தாள்.
“கசக்குமேனினும் பாகற்காய், பகுத்தறிவுக் கொள்கை போல நல்ல பயன் தரும் என்பீர்களே; அதற்காக இன்று அதைச் சமைத்தேன்” என்று நான்கைந்தை எடுத்து வைத்தாள். ‘பிஞ்சு முருங்கைக்காய்க் குழம்புதான் பிடிக்குமே’ எனப் புன்னகை புரிந்தவாறு, கண்களில் குறும்பினை நடமாடவிட்டுக்கொண்டு, குழம்பினையும் சோற்றிலே ஊற்றிவிட்டு, ஆளன் உணவருந்தும் அழகை அருகே உட்கார்ந்து பார்க்கத் தொடங்கினாள். இது அவளுக்கு வாடிக்கை!
குழம்பும் சோறும் பிசைந்த ஒரு பிடிச் சோற்றை அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். “குழம்பு எப்படி இன்றைக்கு?” எனக் கொஞ்சினாள் அவள்.
“நேற்றிரவு நீ புரிந்த ஊடல் போலிருக்கிறது” என்று குழம்புக்கு ஒப்புவமை காட்டினான் கணவன்.
