குறளோவியம்
பகுதி 74 · 74 / 300
பகல்பொழுது முழுதும் அவளுக்குத் தணல்மீது தணல் கொட்டினாற்போல் இருந்தது. பகல் அகன்று மாலைப்பொழுதும் வந்தது. அந்த மாலைப்பொழுது எப்படி வந்தது? அதுவும் ஒரு மங்கை உருக்கொண்டு வந்தது. காதலனைப் பிரிந்து கலங்கித்
தவிக்கும் அவள், எதிரே வந்த மாலையெனும் மங்கையை நோக்கினாள். மாலைப்பொழுதுக்கு ஒளியில்லை அல்லவா?
பகலும் இரவும் தம்முன்னே விரவி, கலங்குதல் தோன்ற நிற்பதுதானே மாலை நேரம்!
அந்த ஒளியிழந்த மாலைப்பெண்ணை அவள் கேட்டாள்.
“நீ ஏன் மயங்கிக் கலங்கியிருக்கிறாய்? நான்தான் அவரைப் பிரிந்து வேதனை தாளாமல் துவண்டுபோன கொடியாகக் காட்சி தருகிறேன். உனக்கென்னடி வந்தது?”
அவள் கேள்விக்கு மாலைப்பெண் பதில் கூறவில்லை. மேலும் அவள் முகம் வாடத் தொடங்கியது.
அவளோ விடவில்லை. மாலை மங்கை கூறவேண்டிய பதிலை அவளே கூறினாள்.
“ஒருவேளை நீயும் என்னைப் போலத் துன்பப்படுகிறாயோ?”
மாலைப் பெண்ணாள், மெல்ல இதழசைத்துச் சோகம் இழையோடச் சொற்களைச் சிந்தினாள்.
“காலைமுதல் இதுவரையில், ஒளிபடைத்த மேனியளாய்க் களிநடனம் புரிந்தேன். என் கண்நிகர் காதலன் கதிரவன், என்னைக் கட்டித் தழுவிக்கொண்டே இருந்தான். அந்த இன்பசுகத்தில் மெய் மறந்திருந்தபோது, மெதுவாகத் தன் கரங்களைத் தளர்த்தி என்னைத் தரையில் கிடத்திவிட்டு மேலைத் திசை நோக்கிச் சென்றுவிட்டான். துன்பமிருக்காதா எனக்கு? நீயே சொல்!”
என்று, மாலை மங்கை அவள் தோள்மீது கைவைத்துச் சாய்ந்து கொண்டாள். மாலையின் கூந்தலைக் கோதியவாறு அவள் கூறினாள்.
“மயங்கிய மாலைப்பெண்ணே! என் துணைவன்தான் இரக்கமற்றவன். என்னை ஒளியிழக்கச் செய்துவிட்டுப் பிரிந்து சென்றான் எனக் கருதியிருந்தேன். உன் துணையும் என் காதலனைப்போல் இரக்கம் அற்றவன்தானா?”
ஒளி குன்றிய மாலைப்பெண்ணுக்கு, அந்த வார்த்தைகள் சற்று ஆறுதல் அளித்தன போலும்!
துணையைப் பிரிந்து துன்புறுகிற இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்வதோடு - தங்கள் துணைவர்களை இரக்கமற்றவர்கள் என்று குறிப்பிடுவதன் வாயிலாக, அவர்கள் மீது கொண்டுள்ள ஆறாக் காதலையல்லவா வெளிப்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்ல; மாலைப்பொழுது அவளுக்குத் துன்பம் செய்கிறதாம்! அதனால் அந்த மாலைப் பொழுதுக்கும் இன்பம் இல்லையாம். எனவே “வாழி!”
என்று குமுறலோடு வாழ்த்துகிறாள். இதோ குறள்:
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை
அதிகாரம் - 123 - பொழுதுகண்டிரங்கல்; பாடல் - 1222
