குறளோவியம்
பகுதி 58 · 58 / 300
எப்பொருளை, யார் யாரிடம் கேட்டாலும் அவர்கள் சொன்னதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல், அது பற்றிய உண்மை என்ன என்பதை ஆராய்ந்து உணர்வதே அறிவாகும்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.
**அதிகாரம் - 43 — அறிவுடைமை; பாடல் - 423**
Large colour illustration above the prose showing the couple together indoors, with the woman seated in the foreground and the man behind her.
வாணிபத்தின் பொருட்டுப் பிறநாடு சென்றுவரத் திட்டமிடுகிறான் மாவெண்கோ! ஆனால், அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான். வாணிபத்திற்குத் தேவையான பொருள் இல்லாத காரணமா என்றால் இல்லை! அவனது மூதாதையர் சேர்த்துவைத்த பொற்குவியல் குன்றுபோல் உண்டு, அவன் வீட்டில்! அவன் தயக்கத்திற்கும், தவிப்புக்கும் காரணமே அவன் துணைவி மாங்கனிதான்! அவளைப் பிரிந்து அவனாலும் இருக்கமுடியாது என்றாலும் அவனைப் பிரிந்து அவளால் உயிர்வாழவே முடியாது என்பதை அவனறிவான்.
இதற்கிடையே அவனது வணிகத்துறை கூட்டாளிகள் அவனை வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள், பிறநாடு சென்று வாணிபம் நடத்திப் பொருளீட்டுவதன் மேன்மை குறித்து! வேறு வழியின்றி, ஒரு நாள் மாவெண்கோ, அவர்களுடன் பயணம் புறப்படுவதாக ஒப்புதல் அளித்துவிட்டான்.
அன்றிரவு கட்டிலறையில் மாங்கனியிடம் எப்படியாவது சம்மதம் வாங்கிவிடலாமென்ற துணிவுடன் இல்லம் வந்தான்.
சோர்வுற்றிருந்த அவன் முகத்தில், தன் கன்னங்களால் ஒத்தடம் கொடுத்து அந்தச் சோர்வினைப் போக்கினாள் மாங்கனி.
உணவருந்திட அழைத்தாள். வாழை இலை விரித்து வகை வகையாய் உணவு பரிமாறினாள். அவற்றைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான் மாவெண்கோ. அவன் உணவை அள்ளிச் சுவைக்காது கண்ட புள்ளி மயில், துள்ளிப்போய்வந்து தன் காந்தள் விரல்களால் இலையில் உள்ள பண்டங்களை எடுத்து அவன் இதழ் பிளந்து ஊட்டி
விட்டாள். தனைமறந்த மாவெண்கோ, மாங்கனியின் மடிமீது சாய்ந்து கொண்டான். பிள்ளையில்லாக் குறையும் தீர்ந்ததென்று அவன் உச்சந்தலையில் ஓர் முத்தமிட்டாள்.
உண்ணுமிடம் நீங்கிப் பின்னர், பண்ணும் யாழும் கலந்ததுபோல் கலந்திடவே பள்ளியறை நோக்கி நடந்தனர் இருவரும் ஒருவராக!
முல்லை மலர்க்கொத்தினை எடுத்து மாங்கனியின் தலையில் சூட்டினான் மாவெண்கோ!
அவளோ, அவனுக்குத் தன் புன்னகையால் முல்லைமலர்த் தோட்டமொன்றைக் காட்டினாள்.
“விளக்கு, தேவையா?” என்றான்.
“விளக்குத் தேவையில்லை, ஆனால் விளக்கம் தேவை; முகவாட்டத்திற்குக் காரணம் என்ன?” எனக் கொஞ்சினாள் அந்தக் கோதை!
“அல்லி மலர் என் முகம்! நிலவு நீயிருக்கும்போது எதற்காக வாடப் போகிறது!” என்றான் சிரித்துக்கொண்டே, மாவெண்கோ.
விளக்கின் ஒளி இல்லை அந்த அறையில்! பேசும் ஒலியும் இல்லை! வானத்தில் நிலவும் முகிலும் தழுவிக் கொண்டன. இளந்தென்றல், மலர்த் தோட்டத்தை அப்படியே வாரியணைத்துக் கொண்டது. அரும்புகளின்மீது பனி நீர்த் துளிகள் மென்காற்றுக்கேற்ப நடனமாடின.
