உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 42 · 42 / 300

“நீதான் அவன் வீட்டுக்கு ஓடுகிறாய். என்றாவது ஒரு நாள் அவன் நம் வீட்டுக்கு வந்ததுண்டா?”

இந்தச் சொற்களுக்காக அவள் அழுவானேன்? அவள் நெஞ்சம் அவளைப் பார்த்துக் கேட்டது, “ஏன் பெண்ணே அழுகிறாய்” என்று! அவள் பதில் கூறவில்லை. நினைத்துக் கொண்டு குமுறினாள்.

“நெஞ்சே! என் தாய், என் தம்பிக்குச் சொன்னதைத்தான் நானும் உனக்குச் சொல்கிறேன். என் தம்பி மருதன், அடுத்த தெரு தேனப்பன் வீட்டுக்கு விளையாட ஓடுகிறான். ஆனால், தேனப்பனோ இந்த வீட்டுக்கு வராமல் அவன் வீட்டிலேயே இருக்கிறான். என் நெஞ்சமே! என் காதலனின் நெஞ்சம் என்னைத் தேடி வராமல் இருக்கும்போது, நீ மட்டும் என்னை விட்டு விட்டு மருதன், தேனப்பனைத் தேடி ஓடுவதுபோல், அவரைத் தேடி ஓடிக்கொண்டு இருப்பது ஏன்?”

அதற்கு அவள் நெஞ்சு பதில் கூறியிருந்தால் என்ன கூறியிருக்கக் கூடும்?

“பெண்ணே! என் கண்ணே! நான் உன் தம்பி மருதன், தாய்க்கு அடங்கியதுபோல் அடங்கிவிட மாட்டேன். உன் காதலன் நெஞ்சு என்னைத் தேடி வராவிட்டாலும் நான் அவரைத் தேடிச் செல்வதை நிறுத்த மாட்டேன்!” என்று கூறியிருக்கும்.

ஏந்திழையின் இதயம் இப்படித்தான் இருக்குமென்பதை உணர்ந்திடவே, வள்ளுவப் பெருந்தகை வண்ண மயிலனையாளின் உள்ளத்தை ஓவியமாக்கிக் களிக்கிறார்.

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது.

அதிகாரம் - 130 - நெஞ்சொடு புலத்தல்; பாடல் - 1291

Large colour illustration of Gandhi walking with a staff, flanked by inset images of a spinning wheel and a handgun.

சந்தனமெடுத்துச் செய்த உருவமொன்று நடந்து வருகிறது. கையில் ஓர் ஊன்றுகோல். அதுவும், தரைக்கு வலிக்குமேயென்று அஞ்சியோ என்னவோ மெதுவாக ஊன்றப்படுகிறது. அருள் பொழியும் முகம்; கனிவு ததும்பும் விழிகள்; புன்னகையைத் தேக்கியிருக்கும் பொக்கை வாய்ப் பூவிதழ்கள். அவரைச் சுற்றி நூற்றுக்கணக்கானவர் இருக்கின்றனர் என்றாலும், அவர்கள் எல்லாம் பகல் நேரத்து விண்மீன்களாகவும், அவர் மட்டுமே கதிரவனாகவும் நம் கண்களுக்குக் காட்சி தருகிறார்.

அவர் வாய்மையின் வடிவம்; அன்பின் திருவுருவம். அவர் தான் கருணைக் கடல், காந்தியடிகள்.

அறவழியே அவர் வழி. அநியாயத்தை எதிர்க்கும்போது அவர் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளவும் தயாராகக் களம் நோக்கிச் செல்வார். இந்திய மண்ணின் சுதந்திரத்தைப் பெற்றிட, அவர் தியாக நெருப்பில் குளித்தார். அந்த நெருப்பிலிருந்து அவர் புடம்போட்ட தங்கமாக வெளிவந்தார். அடிமைத்தனம் எங்கிருந்தாலும் அவர் அதனைக் களைந்திடவே விரைந்தோடுவார். மனிதனை மனிதன் தீண்டக்கூடாது எனும் சாதிக்கொடுமையை வேரோடு வீழ்த்தக் கொடி தூக்கினார்.

சமுதாயத்தைச் சாய்க்கும் தீமைகளாம் குடியாட்டம், குதிரை ஓட்டம் முதலியவற்றை அறவே ஒழிக்க வேண்டுமென நாடெல்லாம் பாடுபட்டார். அமளிகள், கலகங்கள், குழப்பங்கள் எங்கு

நடந்தாலும் அவைகள் ஓயும் வரை உண்ணமாட்டார், உறங்கமாட்டார், மகா வீரரைப்போல், புத்தரைப்போல்,

என்பு இலதனை வெயில்போலக் காயுமே அன்பு இலதனை அறம்

என்றுரைத்த வள்ளுவரைப்போல் வாழ்ந்து காட்டியவர் அவர். அந்த உலக உத்தமர்தான் அதோ வருகிறார்.

மேற்றிசையில் கதிர் மறையும் நேரம். இளங்காற்று மென்மையாக வீசி, அவரை வலம் வருகிறது. அவர் அந்த மேடையில் அமர்ந்து இறைவணக்கம் தொடங்கப் போகிறார். அவரோடும் அவர் இதய உணர்வுகளோடும் இணைந்து அங்குள்ள நல்லோர் அந்த வணக்கப்பாடலை இசைக்கப் போகின்றனர். எப்பொழுது வருவார் என்று எதிர்பார்த்து ஏங்கிய விழிகளுக்கு விருந்தாக, எப்பிணியையும் நெஞ்சிலிருந்து நீக்கும் மருந்தாக, அவர் வந்துவிட்டார்.

அங்குள்ளோர் கரங்கள் அனைத்தும் மலர்ந்த பூக்கள், மீண்டும் மொட்டானது போல் விளங்குகின்றன. ஆம், அனைவரும் அவரை வணங்குகின்றனர். அவரும் அவ்வாறே வணங்குகிறார். அந்த வணக்கத்தைச் சூழ்ந்திருந்தோர் வாழ்த்தாக எண்ணிக் கொள்கின்றனர். காலமுணர்த்தும் கருவி, அவரது இடுப்பிலே அடிக் கொண்டிருக்கிறது. கூப்பியிருந்த கரங்களில் ஒரு கரம் அவரை நோக்கி நகருகிறது. கூட்டத்திலிருந்தவர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, அந்த மனிதன் மட்டும் அவருகே செல்கிறான்.

“ஏன் அருகே செல்கிறான்?” என்று நினைப்பதற்குள்ளாக, அவன் அவரைத் தாழ்ந்து வணங்குகிறான். அந்தத் தும்பை மலர் உள்ளம் அவன்மீது அன்பை அள்ளி வீசுகிறது. அம்மவோ! அந்தக் கொடியவனின் கும்பிட்ட கைகளுள்ளே கொலைக்கருவி பதுங்கியிருக்கிறது. அந்தக் கைத்துப்பாக்கி, திடீரென அந்த இடத்தின் அமைதியைக் கெடுக்கிறது. அசை போட்டவாறு கண்மூடியிருக்கும் பசுவின்மீது புலியொன்று பாய்ந்தது போல், அந்த அமைதியான சூழ்நிலையின்மீது வெடிச் சத்தம் தாக்கியது.