குறளோவியம்
பகுதி 25 · 25 / 300
“மன்னவனே! மாற்றாருடன் நடத்திய போர் எப்படி இருந்தது?”
என வள்ளுவர் கேட்டு வாய் மூடுவதற்குள், மன்னன் தனக்குக் கிடைத்த வெற்றிச் செய்தியைக் கூறிவிட்டு, களத்தில் தானும், தனது வீரர்களும் எவ்வாறு போரிட்டு அந்த வெற்றியைப் பெற முடிந்தது என்பதை விளக்கத் தொடங்கினான்.
என்றவாறு வெற்றிக்களிப்பில் ஆழ்ந்திருந்த மன்னன், வேலை வள்ளுவரிடம் நீட்டினான். அவர் அதைக் கையால் தொடாமலே, அவனைப் பார்த்துச் சொன்னார்:
“மன்னவனே! நீ பெற்ற வெற்றியினைப் புகழ்கிறேன். உன் படையின் ஆற்றலைப் போற்றுகிறேன். பகையரசை வீழ்த்திய இந்த வேல் உன் வெற்றியின் சின்னமாகத் திகழ்கிறது என்பதை நான் மறுத்திடவில்லை. மன்னர்கள் போரைத் தவிர்த்திட இயலாது என்பது உண்மைதான். இந்தப் போரில் கிடைக்கும் வெற்றி மகிழ்ச்சியூட்டக்கூடியதுதான்! ஆனால், ஒன்றை மறந்துவிட வேண்டாம் வேந்தனே! ஓர் அரசுக்கு உலகம் போற்றும் வெற்றியைப் பெற்றுத் தருவது பகைவரை வீழ்த்தும் வேல் அல்ல; குடிமக்களை நடத்தும் கோல்தான்!
அந்தக் கோலும் வளையாத செங்கோலாக அமைந்திட வேண்டும். அத்தகைய செம்மையான ஆட்சியை மக்களுக்கு அளித்து நிலையான வெற்றியைப் பெறுவாயாக!”
வள்ளுவரின் அறிவார்ந்த கருத்துக்களில் உள்ளத்தைப் பறிகொடுத்த மன்னன், கையிலிருந்த வேலைக் கீழே எறிந்துவிட்டு, அவரை வணங்கித் தேர் ஏறித் தலைநகர் நோக்கிக் கிளம்பினான். வள்ளுவர் புன்னகை புரிந்தவாறு நின்றார். சிந்தனை எழுத்தாணி கொண்டு தனது இதயத்தில் பின்வரும் குறளை எழுதிக் கொண்டார். அந்தக் குறள் இதோ:
வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்.
அதிகாரம் - 55 - செங்கோன்மை; பாடல் - 546
Large colour illustration above the prose showing a young woman seated on a bed with cushions and draped cloth, while a man's portrait/figure appears behind her.
அவளோர் சித்திரப் பாவை. உரித்தெடுத்த அல்லித் தண்டின் நிறம் பெற்ற உருக்குலையா மங்கை. அவள் ஒளி முகம், ஓராயிரம் நிலவுகளை ஒன்றாக அடுக்கி வைத்துக் கற்பனை செய்து போட்டி போட்டுப் பார்த்தாலும், எதிர் நிற்கக்கூடிய
ஆற்றல் வாய்ந்தது. அத்தகைய அழகின் வடித்தெடுத்த கூட்டு அவள்! காணக் கிடைக்காத தங்கம்! தேடக் கிடைக்காத வைரம்! களிப்பிலாடும் மயில்! காதாரப் பண்பாடும் குயில்! நடக்கும் பொன் வண்டு! நடனமிடும் நட்சத்திரம்!
அவள், அன்னத்தூவி பரப்பிய மஞ்சத்திலே ஆனந்த நித்திரை செய்து கொண்டிருக்கிறாள். தூங்கும் அந்தத் தோகையாளின் துடியிடை நெளிவதேன்? தூய்மை நிறை அவள் செவ்விதழ்களிலே அமுதம் நிறைவதேன்? மின்னித் தேங்கும் அந்த அமுதத்தை, அவளது அரும்பு இதழ்கள் அவளையுமறியாமல் சுவை பார்ப்பதேன்? ஆக - ரத்தினத்தின் நிறம் பழிக்கும் விதத்திலே அவள் கன்னங்கள் மாறுகின்றனவே, அது ஏன்? எத்தகைய மந்தகாசமான புன்னகை! முல்லைச் சிரிப்பா?
முழு நிலாத் தோற்றமா? எல்லையிலா மகிழ்ச்சியின் கோடுகள் அவள் வதனமெங்கும் அழகுக் கோலங்கள் போடுகின்றனவே!
இதற்குக் காரணம் யாரைக் கேட்பது? வள்ளுவரைத்தான் கேட்க வேண்டும்.
“தம்பி! அவளே - அதோ எழுந்து விட்டாள் - அவளையே கேள்.”
இப்போது அவள் தனக்குத்தானே பேசிக்கொள்கிறாள். அது நம் காதுகளில் விழுகிறது - கேளுங்கள்:
“கனவிலே வந்து என்னை என் காதலர் கூடினார். இன்ப சுகந்தரும் அன்பு பொருந்தி ஆனந்தம் பெற்றேன். என்னை விட்டு நீங்காமல் கனவிலே கூடியிருந்த என் காதல் தேவனை, நனவு என்று சொல்லப்படுகிற ஒரு கொடியவன் ஓடிவந்து பிரித்து விட்டானே!”
காரிகை கதறுகிறாள்; நனவைத் திட்டுகிறாள்.
