உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 241
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 241 · 241 / 300

ஆரணங்கைத் தழுவியவாறு அவள் மடிமீது முடிவைத்து விழிமூடிக் கிடக்கும் சுகம்-

அந்தச் சுகத்தைப் பெருக்கிட மெல்ல அதிர்ந்திடும் யாழ் ஒலி - யாழினும் இனிய ஒலி-

ஒலி வந்த திசையை நோக்கினால், அவர்கள் இன்பத்தில் உதிர்த்த அன்பின் அமுதமாம் அழகு மழலை-

- இவ்வளவும் உடையவன்தான் அவன் எனினும்; ஊக்கமெனப்படுகிற மன எழுச்சியில்லையேல் - அவனை “உடையவன்” என்று கூறமுடியாது என்கிறார் வள்ளுவர்.

“ஊக்கமுடையவர்” என்றுதான் ஒருவரைச் சொல்லிப் பெருமைப்பட முடியுமே தவிர; அனைத்தையும் பெற்றிருந்தாலும் பயனில்லை என்பதே வள்ளுவரின் கருத்து.

மன எழுச்சியில்லாதவன் மனிதனே அல்ல என்று சினங்கொண்டு கூறுகிறார்.

வாழ்க்கை, என்றுமே வசந்தமாக இருப்பதில்லை: வறண்ட பாலைகளைக் கூடக் கடந்திட வேண்டியிருக்கும். புயல்களையும் பூகம்பங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். எரிமலைகளை எதிர்த்து நிற்கவேண்டியிருக்கும். எதிர் நீச்சல் போடுவதே சிறந்த வாழ்க்கையாக ஆகிவிட்டிருக்கும். அப்போதெல்லாம் ஒருவனுக்குள்ள வலிமையென்பது, அவனிடமுள்ள மன எழுச்சியின் மிகுதியே ஆகும்!

அத்தகைய எழுச்சியற்றவன், மரமென அழைக்கப்படுவான் எனக் கூறும் வள்ளுவர், எவ்வளவு அழகாக அவனை எகடியம் செய்கிறார் பாருங்கள்!

“அந்த மன எழுச்சியில்லாத மரங்கள், வடிவத்தால் மக்களைப்போல இருப்பது வேறு விஷயம்!”

அதற்கு இதோ குறள்:

“உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரமக்க ளாதலே வேறு.”

அதிகாரம் - 60 - ஊக்கம் உடைமை; பாடல் - 600

உள்ளவெறுக்கை = மன எழுச்சி அல்லது ஊக்க மிகுதி

இருபதாம் நூற்றாண்டு இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொலைச்செயலில் ஈடுபட்டவர்களை மரண தண்டனைக்கு ஆளாக்கலாமா; அல்லது அதற்குக் குறைவான தண்டனை வழங்கி அந்தக் கொலைகாரனைத் திருத்திடலாமா என்ற இருவகையான கருத்து, பல்லாண்டுக் காலமாகவே உலகத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தக் காலத்தில் மரண தண்டனையைக்கூட சில நாடுகளில் மிகக் கொடூரமாக நிறைவேற்றுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் கூடிடும் பொது இடங்களில் குற்றவாளிகளைச் சுட்டுத் தள்ளுகிறார்கள்.

சில நாடுகளில் தலையை வெட்டிச் சாய்த்துத் தண்டனையை நிறைவேற்றுகிறார்கள். கொலைக் குற்றமில்லாத வேறு சில கொடுங் குற்றங்களுக்குக்கூட மரண தண்டனையை நடைமுறைப்படுத்தும் நாடுகளும் உள்ளன.

பயிரைக் காத்திட களைகளைக் களைவதுபோல, சமுதாயத்தைக் காத்திட கொடியவரைக் கொலைத் தண்டனையால் ஒழித்திடும் பணி அரசனுடையது என்று வள்ளுவர், பொருட்பாலில் - அரசியலில் குறிப்பிடுகிறார்.