உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 239
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 239 · 239 / 300

அதிகாரம் - 39 - இறைமாட்சி; பாடல் - 389

கவிகை = குடை

கைப்ப = வெறுக்குமாறு

வானத் தடாகத்தில் நீந்துகின்ற வெண்முகில் வாத்துக்களினிடையே... கருமுகில், தாமரையிலைகளை நீக்கிக்கொண்டு ஒளிமுகம் காட்டுகின்ற நிலவைக் கண்டேன். அந்த ஒளிச்சிதறல், வானின் அலைகளிலே விண்மீன்களாய்த் துள்ளி மின்னும் அழகைக் கண்டேன். எங்கிருந்தோ ஆயன் ஒலிக்கும் குழலின் இசையைக் கேட்டேன். யாழ் எடுத்து எவளோ ஒருத்தி எழில் மாடமிருந்து மீட்டினாள் போலும். தென்றலில் கலந்து அந்தத் தேனமுதம் என் செவிகளில் பாய்ந்தது.

நின்று கேட்டவாறு அங்கிருந்து பின்னர் அகன்றேன். இல்லத்திலோ என் தாய், வெல்லத்தில் செய்திட்ட பண்டங்கள் போதாதென்று வாழை, மா, பலா எனும் முக்கனியைப் பக்குவமாய்ப் படைத்துண்ணச் செய்தாள். உண்டு மகிழ்ந்தேன்; உவகை கொண்டேன்; உலவிடச் சிறிது சோலையோரம் சென்றேன். முல்லையும் மல்லிகையும் பரப்பிய மணத்தில் மனதைப் பறிகொடுத்து மீண்டேன். நான் வளர்த்திடும் முயலின் பஞ்சு மேனியைத் தடவிப் பரவசமுற்றேன். என் முதுகில் அழுந்திய மயிலின் தோகையைத் தழுவியபோது, மென்மையின் சுகத்தை உணர்ந்தேன்.

ஆம் - கண்ணால் கண்ட இன்பம்! காதால் கேட்ட இன்பம்! மூக்கால் முகர்ந்த இன்பம்! நாவினிக்க உண்ட இன்பம்! மெய்தீண்டி உணர்ந்த இன்பம்! இவ்வாறு

ஐம்புலனும் தனித்தனியே அனுபவித்த இன்பத்தை ஒருசேர எங்கு காண்பேன் என ஏங்கிடும் உள்ளத்தோடு, ஏரிக்கரை மீது நடந்தேன். அடடா! அந்த இன்பத்தை என் சொல்வேன். ஐம்புலன்களுக்கும் தனித்தனியாகக் கிடைத்த இன்பமெல்லாம் ஒருங்குகொண்டு என்னை ஓடிவந்து தழுவிக்கொண்டது!

நீங்கினாலும் நெருங்கினாலும் என் நெஞ்சிலேயே பிரியாமல் நிலைத்திருக்கும் என் காதலியைக் காண்பதிலும் - அவள் அன்புமொழி கேட்பதிலும் - எனை மயக்கும் மணத்தில் ஆழ்வதிலும் - இதழ்த்தேனை உண்பதிலும் - ஈருடல் ஒருடலாய்ப் பின்னிப் பிணைந்து கிடப்பதிலும் - ஐம்புலன்களும் ஒருசேர அனுபவிக்கும் இன்பத்தை எப்படி நான் விவரிப்பேன்!

ஒளிபொருந்திய வளையணிந்தவளிடம், ஐம்புலன்களுக்குமேற்ற இன்பம் உள்ளது என்று வள்ளுவர் கூறியதில் அணுவளவு ஐயமுமில்லை!

“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள”

அதிகாரம் - 111 - புணர்ச்சி மகிழ்தல்; பாடல் - 1101

புலிகள் ஆயிரம் சேர்ந்து உறுமுவதுபோல், புயல் காற்றில் அலையெழுப்பிக் கடல் கொந்தளித்துக் குமுறுகிறது! சுழன்றடிக்கும் சூறாவளியோ மரங்களைப் பெயர்த்துத் தலைகீழாக நட்டு விளையாடுகிறது! பலவாக்கும் வாட்களைக் கொண்டு முகத்துக்கெதிரே வீசுவதுபோல மின்னல் வெட்டுகிறது! வானக் கூரை இடிந்து விழுந்து பல திக்கிலும் சிதறுவதுபோல் இடி முழக்கம்! காலந்தாழ்ந்து வந்த கூலிக்காரனைக் கடின மனமுடைய முதலாளியின் கையால், சவுக்குக் கொண்டு தாக்குவதுபோல மழைச் சரங்கள்!

இருட்டோ, இரக்கமற்றோன் இதயத்தைப்போல!

இந்தச் சூழலில் ஒருவன் தன்னந்தனியாக நடக்கிறான். கம்பளித்துணி போட்டு மூடிய ஒரு பொருள், அவன் கைகளில் அணைத்தபடியிருக்கிறது! அந்தத் துணிக்குள்ளிருந்து மெல்லிய குரலில் அழுகைச் சத்தம்! ஆம்; ஒரு சின்னஞ்சிறு குழந்தைதான் அது!

அந்த அரும்பை ஈன்றெடுத்த அன்னை, கண்ணை மூடிவிட்டாள்! தந்தையையும் இயற்கையின் வாய் விழுங்கிவிட்டது! அந்தக் குழந்தையின் அண்ணன் அவன்! அதைக்கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய இடத்திலே சேர்த்து விட்டால், அதைச் சீராட்டி வளர்க்க எத்தனையோ பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

“வசுதேவன்; தனக்கும் தேவகிக்கும் பிறந்த எட்டாவது குழந்தையை ஆயர்பாடியில் கொண்டுபோய் விட்டுவிட்டால், ஆயத்து எதுவுமின்றி அமோகமாக வளர்ந்திடும் என்பதற்காக நெடும்பயணமொன்றை நள்ளிரவில் மேற்கொண்டான்” என்று கண்ணன் கதையில் ஒரு நிகழ்ச்சி சித்திரிக்கப்படுமல்லவா; அதைப்போலத்தான் - தனது மழலைத் தம்பியை மார்போடு அணைத்து அந்தப் பயங்கர இருளில், பயணத்தை நடத்துகிறான்.

அவனுடன் தொடக்கத்தில் துணைக்கு வந்த சில பேர், மழைத் தூறலைக் கண்டதுமே வழியிலேயே திரும்பிவிட்டனர்!

“நாம் ஆருயிர் நண்பர்களடா! அன்புச் சகோதரர்களடா!” என்றெல்லாம் இனிக்கப்பேசி - அவனுடன் அடிப்படிக் களித்த தோழர்கள் எல்லாம் பாதிப் பயணத்திலேயே பலமான இடியோசை, மழை, புயல்காற்று - இவற்றினைக் கண்டு மிக வேகமாகத் திரும்பி ஓடிவிட்டனர்!