குறளோவியம்
பகுதி 236 · 236 / 300
இப்படியொரு குறளை வள்ளுவர் தீட்டியிருக்கிறார். அதைத்தான் நாணமற்ற தனது செய்கைக்கு ஒப்பிட்டுக் காட்டுகிறார்கள் தனது மனைவியும் மகனுமெனப் புரிந்துகொண்டான்; மனம் புழுங்கிப் போனான்.
“நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி யற்று.”
அதிகாரம் - 102 - நாணுடைமை; பாடல் - 1020
காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர்கள் ஆண்டுகொண்டிருந்த காலம். பிற்காலப் பல்லவர்கள், நந்திவர்மனைப்போல தமிழின்பால் தணியாத வேட்கை கொண்டவர்கள். அவர்களில் ஒரு பல்லவன் ஆட்சியிலே படைத் தளபதிகளின் குழுவில் சோழநாட்டைச் சேர்ந்த அருளாளன் என்பானும் இருந்தான். அவனிடம் மன்னருக்குத் தனியன்பு உண்டு. தனது அமைச்சர்களிடமும் தளபதிகளிடமும் அடிக்கடி நாட்டுநிலை குறித்தும் அரசப் பொறுப்புகள் குறித்தும் பல்லவ மன்னர் விவாதித்து முடிவெடுப்பார் எனினும், அருளாளன் கருத்துக்கும் அவர் தனி மதிப்புக் கொடுத்து அவ்வண்ணம் செயலாற்றுகிற வழக்கம் கொண்டிருந்தார்.
துணைத்தளபதிகளின் பதவிகளில் சிலரை அமர்த்திப் படையின் வலிமையை மேலும் உறுதியாக்கிட வேண்டுமென்று ஒரு முடிவு மேற்கொள்ளப்பட்டது.
அந்தச் சில பதவிகளுக்கு வர, பலரும் போட்டியிட்டனர். அந்த நேரம் சோழத்தளபதி அருளாளன், பல்லவப்படை முகாம்களை நேரில் கண்டு ஒழுங்குபடுத்திவரச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தான்.
பரணியெனும் பாசறையைப் பார்வையிட்டபோது, அணிவகுத்து நின்ற வீரர்களில் ஒருவன் அருளாளனின் காலில் விழுந்து கண்ணீர் மல்க நின்றான். “என்னப்பா! என்ன வேண்டும்?” என இரக்கம் நிறைந்த இதயங்கொண்ட அருளாளன், கேட்டான்.
“நீண்ட நாட்களாகப் படையில் போர்வீரனாக இருக்கிறேன். துணைத் தளபதிப் பதவிகளில் ஒன்று எனக்குக் கிடைக்க, மன்னரிடம் தாங்கள்தான் பரிந்துரை செய்திடல் வேண்டும்; அதுவரையில் உமது பாதங்களை விடமாட்டேன்” என்று கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.
துணைத்தளபதிப் பொறுப்புக்குத் தகுதியும் ஆற்றலும் வாய்ந்தவர்கள் சிலர் பரணிப்பாசறையில் இருந்துங்கூட, அருளாளன் அவனுக்கு வாக்குறுதியளித்து விட்டுத் திரும்பினான்.
துணைத்தளபதிப் பொறுப்பென்றால் தகுதியும் உயர்ந்த ஊதியமும் அதிகம் கிடைக்கும்.
ஐந்தாறு துணைத் தளபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஒருவன், அருளாளனின் காலில் விழுந்தவன். இந்த நன்றியை என்றும் மறக்கமாட்டேன் என்று அவன் அருளாளனை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து வணக்கம் செலுத்தினான். துணைத்தளபதிக்குரிய உடைகளைத் தயாரித்துக் கொள்ளக்கூட அருளாளனே, தனது சொந்தப் பொறுப்பில் தொகை வழங்கி உதவினான். ஏதோ ஓர் அன்பு அவன்மீது அருளாளனுக்கு! அதனால் அந்த வீரனின் முகத்தை விகாரப்படுத்திக்கொண்டிருந்த துடைப்பம் போன்ற மீசையைக் கூட முடிதிருத்தும் தொழிலாளியைக் கொண்டு அழகுபடுத்தச் சொன்னான்.
“நீ இப்படிச் சிலருக்கு இரக்கம் காட்டி ஏமாந்து போனவனாயிற்றே! இவன் உனக்கும் எனக்கும் நாட்டுக்கும் நன்றியுடையவனாக இருப்பானா?” என்று பல்லவ மன்னர் கேட்டபோது, அருளாளன் உறுதியளித்தான், நிச்சயமாக இருப்பான் என்று!
நாட்கள் ஓடின! உடல்வலிவுடன் போராடி வெற்றிபெற முடியாமல், பல்லவ மன்னன் இயற்கை எய்திவிட்டார்!
அவர் கொலை செய்யப்பட்டதாகக் கதை கட்டி, அரண்மனையில் இருந்த சிலர் தங்களுக்குப் பிடிக்காத ஒருவரைப் பழிவாங்கத் திட்டமிட்டனர். அந்த நரிமனத்தினரின் நயவஞ்சகக் கண்கள் அருளாளன் மீதும் விழத் தவறவில்லை. மன்னரின் கொலைக்குக் காரணமாக இருந்தவன் அருளாளன் எனக்கூறி, பல்லவ நாட்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டினர். நோய்வாய்ப்பட்டு மறைந்த மன்னர், கொலை செய்யப்பட்டதாகப் புனையப்பட்ட அந்த வழக்கில் அருளாளன் இணைக்கப்பட்டதைக் கண்டு, பல்லவ பூமியே பதறியது!
“கொலைதான் என்பதற்கு என்ன சான்று?” - நீதிமன்றம் கேட்டது!
“இதோ சாட்சி! இறந்து போன மன்னரின் அருகில் கிடந்தது!”
வழக்காடிய வன்னெஞ்சன் இதுபோலப் பதில் கூறினான்.
