உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 218
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 218 · 218 / 300

“வீரசிங்கம் அவர்களே! தாங்களே வெற்றி பெற்றதாக இருக்கட்டும்! போட்டி நம் இருவருக்குமிடையே அல்ல! ஒன்றை மறந்து விட்டீர்கள்! நாம் இருவரும் சேர்ந்து முதியவராம் இந்தப் பெரியவரின் அறிவாற்றலுக்குத் தேர்வு வைத்திருக்கிறோம்! அவர் கூறட்டும் தீர்ப்பை!”

அன்பானந்தன், இவ்வாறு கூறியதும் வீரசிங்கம் கேலியாகச் சிரித்து- “என்னை வெற்றிகொள்ள, வேறொரு செல்வந்தன் இந்த ஊரில் இருக்கிறானா? இல்லை! இல்லை!”

என்று உரக்கக் கத்தினான். அன்பானந்தன், அவனைப் பார்த்து, “வெற்றி வீரரே! நீவிர் வாழ்க!” என்று வாழ்த்தினான்.

அப்போது முதியவர் குறுக்கிட்டார்! “இந்த இருவரில் வெற்றி பெற்றவர் அன்பானந்தனே! வீரசிங்கமல்ல!” முதியவர் தீர்ப்புக் கேட்டு கூட்டத்தினர் அதிர்ந்தனர்! அவர் விளக்கினார்: “பணிவான இயல்பும், இன்சொல்லும்தான் ஒருவனுக்கு உண்மையான அணிகலன்களாகும்! மற்றைய அணிகள் எவ்வளவு விலைமதிப்பற்றவையாக இருப்பினும் அவை அணிகள் அல்ல; என்று வள்ளுவர் கூறியிருக்கிறார் - அதையொட்டியே இந்தத் தீர்ப்பு வழங்கப்படுகிறது.”

முதியவரின் விளக்கம் கேட்டு, வீரசிங்கம் தலைகுனிந்தான்! அன்பானந்தன் கழுத்திலே வெற்றிமாலை ஏறிக்கொண்டது!

“பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற”

அதிகாரம் - 10 - இனியவை கூறல்; பாடல் - 95

பாறையின் உச்சியிலிருந்து பளிங்குபோல் நீர் கொட்டுகிறது! அந்த நீர் வீழ்ச்சியில் ஆடவர் பெண்டிர் குளித்துக் களிக்கின்றனர். வெள்ளியை உருக்கி ஊற்றுவதுபோல் கண்கொள்ளாக் காட்சி, அந்தக் குளிர் நீர்வீழ்ச்சி! தங்கநிற மேனியில் அத் தண்ணீர் பட்டுத் தெறிக்கும்போது பொங்கும் மகிழ்ச்சியால் பூக்களைப் போல் சிரிக்கின்றனர் பூவையர்! பாறையை விடுத்துத் தரையில் விழுந்த தெளிநீர் கண்ணாடிபோல ஓடுகிறது! அதன் பின்னர் களிமண் நிலத்தில் தாவுகிறது!

பளிங்காகவும் கண்ணாடியாகவும் தெரிந்த நிலையில் விளங்கிய அந்த அருவியின் நீர், தனது இயல்பை இழந்து, தான் சென்றடைந்த கரிசல் நிலத்தின் வண்ணத்தைப் பெறுகிறது. இதைத்தான் வள்ளுவர் அழகாகச் சொல்கிறார்:

“சேர்ந்த நிலத்தினுடைய தன்மையால் - நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும். அதுபோல் மக்களுடைய அறிவும்; தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.”

இதோ குறள்:

“நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு”

அதிகாரம் - 46 - சிற்றினம் சேராமை; பாடல் - 452

புதிய புதிய நூல்களைப் படித்துக்கொண்டே இருக்கவேண்டும் அவனுக்கு!

பழங்கால இலக்கியங்களைத் திரும்பத் திரும்பப் படித்துச் சுவைப்பான்!

மறுமலர்ச்சி இலக்கியங்கள் எவை வரினும் அவன் கைகளில் ஏறிக் கொள்ளும்! கண்வழி சென்று கருத்தறையில் அமர்ந்துகொள்ளும்!