உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 217
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 217 · 217 / 300

அவளது பார்வையில் பட்டுத் தெறிக்கிறதாம் அவனது பருவ நெஞ்சம்! அந்த இன்பவேதனையில் புலம்புகிறான். அய்யகோ; அணை சரியாகப் போட்டுப் பட்டுத் தடுக்கப்பட்டிருந்தால் விரகதாப வெள்ளம் என்னை மூழ்கடித்திருக்காதே! என்ற கருத்திலே கூறுகிறான், ‘அவள் சுந்தர விழிகளை - அவள் புருவங்கள் சுவர் போலத் தடுத்திருக்கக்கூடாதா’ என்று!

வள்ளுவர் நடையில் அதைப் படியுங்கள்:

“கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்னிவள் கண்”

அதிகாரம் - 109 - தகையணங்குறுத்தல்; பாடல் - 1086

நடுங்கு அஞர் செய்யல - நடுக்கம் தரும் துன்பத்தைச் செய்ய மாட்டா.

பழங்காலத்தில், சிற்றூர் ஒன்றில் ஒரு போட்டி நடத்தப்பட்டது. போட்டியைக் காணப் பெருங்கூட்டம் திரண்டிருந்தது. அந்தவூரின் தலை நரைத்த முதியவர் ஒருவர் போட்டியின் நடுவராக இருந்து, வெற்றி பெற்றவர் பெயரை அறிவித்து, வாகைமாலை சூட்டுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. எத்தகைய போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

விலை உயர்ந்ததும் மதிப்பு மிகுந்ததுமான அணிகளை, யார் பூண்டு வருகிறார்களோ அவர்களில் வெற்றி பெற்றவர் யார் என்பதை அந்த முதியவர் ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவார்.

அந்த ஊரிலேயே பெருஞ்செல்வத்திற்குரியவன், வீரசிங்கம் என்பான்! அவனை மிஞ்சக்கூடிய பொருள் வசதியும் அணிமணிகளும் கொண்டவர்கள் அந்த வட்டாரத்திலேயே யாரும் கிடையாது! அவன் அந்தப் போட்டியில் கலந்து கொள்ளப் போவதாக முன்னரே அறிவித்துவிட்டான்.

“நானும் அந்தப் போட்டியில் கலந்து கொள்கிறேன்”

என்று இன்னொருவனும் அறிவிப்புச் செய்திருந்தான்! அவன் பெயர் அன்பானந்தன்! வீரசிங்கத்திற்கு அடுத்தபடியாகச் செல்வம் படைத்தவன்!

அன்பானந்தன், வெற்றியிலே மிக ஆர்வங்கொண்டுள்ளான் என்றும் அதனால் தனது செல்வத்தில் பெரும் பகுதியைச் செலவிட்டு இணையற்ற அணிகளைப் பூண்டு அந்தப் போட்டியில் கலந்துகொள்ளக் கூடுமென்றும் எனவே வீரசிங்கம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமென்றும் அவனைச் சுற்றியிருந்தோர் அறிவுரை கூறினர்.

வீரசிங்கமும் வெற்றியொன்றையே குறிக்கோளாகக்கொண்டு, விலை மதிப்பற்ற அணிகளைத் தயார் செய்யுமாறு பொற்கொல்லர்களுக்குப் பொருள் வழங்கினான்.

போட்டிக்குரிய மேடையில் வீரசிங்கமும் அன்பானந்தனும் தோன்ற வேண்டிய வேளை வந்துவிட்டது! குழுமியிருந்தோர் விழிகளை அகலத் திறந்து, அந்த மேடையையே நோக்கியவண்ணமிருந்தனர்!

முதலில் வீரசிங்கம் வந்து நின்றான். கதிரொளியை வெல்லக்கூடிய வைரமணிகள் கொண்ட குண்டலங்கள் அவன் காதுகளில்! பத்தரைமாற்றுப் பொன்னிழையில் கோக்கப் பட்ட ஒன்பான்மணிகளும் குலுங்கிடும் மாலையும் அதன் முகப்பில் கொற்கை முத்துக்களால் ஆன பதக்கமும் கழுத்தை ஈர்த்து அகன்ற மார்பில் புரண்டுகொண்டிருந்தன.

மாணிக்கக் கல் பதித்த காப்புகள் கைகளில்!

போட்டி காண வந்திருந்தோர் வீரசிங்கத்தின் அணிகளைக் கண்டு, திறந்த வாய் திறந்தபடியிருந்தனர். அவனை வென்றிட அன்பானந்தனால் இயலாது என முடிவு கட்டினர். அப்போது அன்பானந்தன் அந்த மேடைக்கு வந்தான். கூட்டம் ஆச்சரியத்தில் மூழ்கியது. காரணம்! அன்பானந்தன் காதுகளிலோ- கழுத்திலோ- கைகளிலோ எந்த அணியும் இல்லை!

அவனைப் பார்த்த வீரசிங்கம் கலகலவெனச் சிரித்தான்! இறுமாப்புடன் நெஞ்சை உயர்த்தி, வெற்றிப்பூரிப்பில் விழிகளை மக்கள் மத்தியில் ஓடவிட்டான்! “முதியவர் எம்மிரு வரையும் ஒப்பிடவே தேவையில்லை! நானே வென்றேன்!” என்று முழங்கினான்.