குறளோவியம்
பகுதி 215 · 215 / 300
போரில் சதிச்செயல் புரிந்தவர்களால் தோல்வியுற்ற ‘வேள்’, மீண்டும் தனது நாட்டைக் கைப்பற்ற படை தயாரித்துக்கொண்டிருந்தான். வீரராகியரோ தனக்குப் பதவியளித்த வேள் மீது குறைகள் பலவற்றை அடுக்கி, அதன் காரணமாக பகைநாட்டானின் பாசத்தைப் பெற்று அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டார்.
நாடிழந்து பல்வேறு பகுதிகளில் பாசறையமைத்துப் படை திரட்டிக் கொண்டிருந்த வேளிடம், அவனது தளபதிகளில் சிலர் சென்று வீரராகியர் போக்குக் குறித்துக் கூறினார்கள்.
“இப்படித்தான் வாழவேண்டுமென்றில்லாமல், எப்படியும் வாழலாம் என்று திட்டம் வகுத்துக்கொண்டவர்கள், நிலைக்காத செல்வத்தைப் பெறலாம்! ஆனால், நிலைத்த புகழைப் பெற முடியாது.”
இதை வேள் சொல்லிவிட்டுத் தளபதிகளைப் பார்த்து, “இத்தகைய மனிதர்களைப் பற்றி வள்ளுவர் கூறியுள்ளது தெரியுமா?” எனக் கேட்டுவிட்டு அதையும் விளக்கினான்:
“புகழற்ற வாழ்வுடன் தங்களது உடம்பைச் சுமந்து கொண்டிருக்கிறார்களே; அந்த உடம்பைச் சுமந்த நிலம்கூட வளமான விளைவு இல்லாமல் குன்றிவிடும்.”
அதற்கு இது குறள்:
“வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்”
அதிகாரம் - 24 - புகழ்; பாடல் - 239
வசை - பழிப்பு
வண்பயன் - வளமான பயன்
இசை - புகழ்
வறுமையில் வாடும் புலவரின் மகன் அவன். இருபது வயது தாண்டிய இளைஞன். அவனிடம் கற்பனைச் செல்வம் கரை புரண்டதே தவிர, அவர்கள் வீட்டில் அடுப்பு ஒரு வேளை எரிவதற்கே அலைந்து திரிந்து கடன் வாங்கவேண்டும். கட்டழகன்கூட அந்தக் காளை! வறுமைக்கோடு, செல்வச் செழிப்பு இவற்றையெல்லாம் பார்த்து அளவெடுத்துக்கொண்டா காதல் எனும் காட்டாறு பெருக்கெடுத்து ஓடுகிறது? அந்த வெள்ளத்தில் சிக்குண்டான் அந்த இளங்கவிஞன், வளம் தழைத்த குடும்பத்தின் வசந்தம் அவள்!
வாலிபக் கவிஞனின் வண்ணத் தமிழுக்கு அடிமையானாள்! வழக்கம்போல் இரு குடும்பத்தாருக்கும் தெரியாமல் மலர்ந்த காதல்; மணம் வீசத் தொடங்கிற்று!
நாட்கள் நகர நகரக் கவிஞனின் இளம் இதயத்தில் நடுக்கம் பிறந்தது. “நீயோ விண்ணில் ஒளிவிடும் நட்சத்திரம்! நானோ மண்ணில் கிடக்கும் கரிக்கட்டை! நமக்குள் மணப் பொருத்தமிருக்கலாம்; மணப்பொருத்தம் உண்டென்று யார்தான் ஒப்புவார்? அதிலும் பெருஞ்செல்வத்தில் புரளும் உன் பெற்றோர் ஏற்றிடுவரோ” எனக் கூறித் தன்னை மறந்து விடுமாறு கேட்டுக்கொண்டான், அவளிடம்!
திடுக்கிட்டாள்! திகைத்தாள்! “நீங்கள்தான் பேசுகிறீர்களா? ‘மீனை அள்ளும் வலையோ - வலையில் துள்ளும் மீனோ இந்தக் கண்கள்?’ எனக் கவிதையால் கேட்டு என் இமைகளை இதழ்களாக்கி முத்தமிட்டீர்களே; அந்தக் கண்களை நீரில் உறைவைக்க எப்படியத்தான் துணிந்தீர்கள்?”
அழுதாள் அவள்!
அவன் ஊமையாக உட்கார்ந்திருந்தான்.
