உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 214
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 214 · 214 / 300

ஓலைச்சுவடிகள் இறைந்து கிடக்கின்றன. அந்தச் சுவடிகளுக்கு மத்தியில் அந்த மனிதன். அவன் விழிகள், சுவடிகளின் மீது மொய்த்துக் கிடக்கின்றன. அகமென்றும் புறமென்றும் ஐம்பெருங் காப்பியமென்றும் எத்தனை எத்தனையோ சுவடிகள்! அத்தனையும் அவன் படித்து மனத்தில் பதிய வைத்து விட்டானா? அல்லது பார்ப்பவர்களுக்கு அப்படியொரு மயக்கமா? அழகு சிந்தும் நூல்கள் - அறிவு மணக்கும் நூல்கள் - பண்பாடு உணர்த்தும் நூல்கள் - அறமுரைக்கும் நூல்கள் - அனைத்தையும் வாரிக் கட்டிக்கொள்கிறான்; எழுந்து கம்பீரமாக நடக்கிறான்.

அவனைப் பார்த்து இருவர் பேசிக்கொள்கிறார்கள். “ஏ, அப்பா! எவ்வளவு கருத்துக்கள் மூளையில்

ஏறியிருக்கின்றன. இன்று அவைக்களத்தில் இவரை எதிர்த்து வாதிடுவோர் புறமுதுகிட்டு ஓடுவர்! அதில் சந்தேகமேயில்லை.” புகழ்ந்தவர்களைப் பார்த்து ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு அவன் போய்விடுகிறான்.

இப்போது முதல் காட்சிக்குச் செல்வோம். கூர்மைகொண்ட போர்வாளை ஒரு கரம் எடுத்ததல்லவா! அந்தக் கரத்துக்குரிய உருவம், களம் நோக்கி வாளுடன் சென்றது. அந்த உருவைப் பார்த்துப் பகைவர்கள் நகைத்தனர். உருவமோ வெட்கப்படவில்லை. கைவாளைச் சுழற்றியது. அப்போது ஒரு யானை, தனது துதிக்கையால் அந்த வாளை அலட்சியமாகத் தட்டிவிட்டு அந்த உருவத்தை உற்று நோக்கியவாறு நின்றது! அது கண்டு நடுங்கிய அந்த உருவம் ‘அய்யோ’ என அலறியவாறு ஓடியது.

“பேடி! பேடி!” என உரக்கக் கூறிச் சிரித்தனர் களத்தில் நின்றோர்.

மீண்டும், இரண்டாவது காட்சிக்குச் செல்வோம். ஆர்ப்பரிப்புடன் அவைக் களத்திற்கு வாரிக் கட்டிய ஓலைச்சுவடிகளுடன் சென்றவன்; அவனை எதிர்த்து வாதிடக் கூடியவர்களை ஒருமுறை நோக்கினான். “ஆகா! தமிழிலக்கிய நூல்கள் அனைத்துடனும் வந்திருக்கிறானே; இன்று வெற்றி நம் பக்கமே!”

என அவனைச் சார்ந்தோர் மகிழ்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவன் கையில் தமிழ்ப் பெருநூல்கள்! அவற்றையே கருத்தில் தாங்கியிருந்த எதிர் அணியினர் அதே நூல்களில் இருந்து சான்றுகளைக்காட்டி உரையாற்றினர். திடீரென்று ஒரே பரபரப்பு! ‘ஓலைச் சுவடி மனிதனைக் காணவில்லை! ஓடிவிட்டான் அவையைவிட்டு!’

மண்டபம் சிரிப்பால் அதிர்ந்தது!

பகையைச் சந்திக்கப் பளபளப்பான வாளுடன் சென்றவனையும் - அவையைச் சந்திக்கப் பற்பல நூல்களுடன் சென்றவனையும் - நமது அகக்கண்கள் மாறிமாறிக் காட்சிகளாக்கிக் கொள்கின்றன!

நாமும் நம்மையறியாமல் சிரித்துவிடுகிறோம்!

வள்ளுவரும் அவையஞ்சும் அந்த மனிதனைப் பார்த்துச் சிரிக்கிறார். அவனை யாருடன் ஒப்பிடுவது எனச் சிந்திக்கிறார். பகையஞ்சும் அந்தப் பேடி, அவர் நினைவுக்கு வரவே; குறள் வடித்துக் கொடுத்துவிடுகிறார்.

அதுவே இது:

“பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல்”

அதிகாரம் - 73 - அவை அஞ்சாமை; பாடல் - 727

தோற்றப் பொலிவும் தோள் வலிவும் கொண்டவர்தான் வீரராகியர்! ஒரு காலத்தில் நாட்டுக்குத் தளபதியாகப் பொறுப்பேற்றிருந்தார்! பகை நாட்டுடன் நடந்த போரில் சிறைப்பட்டு, நீண்ட நாட்களுக்குப்பிறகே விடுதலை பெற்றார். இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட நல்லுறவு உடன்பாட்டின் அடிப்படையிலேதான் வீரராகியருக்கு விடுதலை கிடைத்தது. சிறையில் வாடிய அவரது தியாகத்தை மன்னர் மதித்தார் என்றாலும் பகை நாட்டாரை வீழ்த்துகின்ற திறமை வீரராகியருக்கு இல்லையென்பதை உணர்ந்து, அவரிடமிருந்து தளபதிப் பொறுப்பைப் பறித்து வேறொருவருக்கு அளித்துவிட்டார்.

பதவியிழந்த தளபதி வீரராகியர், பழைய நூல்களுக்கு விளக்கவுரை விரிவுரைகள் எழுதிக் காலத்தைக் கழித்துவந்தார். முதுமையும் அவரைத் தழுவிக்கொள்ளத் தொடங்கியது. வயது ஏற ஏற வீரராகியருக்குக் குடும்பத்தைப் பற்றிய கவலையும் தன் முதுமைக் காலத்திலும் தனக்குப் பிறகும் வசதியோடும் ஆடம்பரத்தோடும் தன் குடும்பம் வாழ்ந்திட செல்வத்தைக் குவிக்க வேண்டுமென்ற ஆசையும் தோன்றியது!

மண்மீது அவருக்கிருந்த பற்று இளமைக் காலத்தில் நாட்டுப் பற்றாக இருந்தது. இப்போதோ அது நிலவுலப் பற்றாக மாறிவிட்டது! தோட்டம் துரவுகள், காட்டு நிலங்கள், மலை வளங்கள் இவற்றைச் சேர்த்திட வேண்டுமெனத் துடித்தார்.

மன்னனிடம் சென்று, தனது அறிவாற்றலை மட்டுமாவது பயன்படுத்திக்கொள்ள அமைச்சர் பதவியை யாசித்தார். மன்னவரோ, மெளனம் சாதித்துவிட்டார்.

சிறிது காலத்திற்குப்பிறகு மன்னர் இயற்கை எய்திடவே, மன்னரின் தம்பி ‘செந்தமிழ்வேள்’ என்பான் ஆட்சிக்கு வந்தான். அவனிடமும் சென்று வீரராகியர் கெஞ்சினார் பதவிக்கு! முதியவராயிற்றே என்ற இரக்க நெஞ்சத்துடன் இளைய மன்னன் ‘வேள்’, அவரை அமைச்சர்களின் ஆலோசனை அவைக்குத் தலைவராக நியமித்தான். அந்தப் பதவியைப் பயன்படுத்திக்கொண்டு, அவர் வேண்டிய மட்டும் கையூட்டுகளைப் பெற்றுத் தன் குடும்பத்தைச் செல்வச் செழிப்பில் ஆழ்த்திக்கொண்டார்.

ஏதோ ஒரு காரணத்தால் பக்கத்து நாட்டான் திடுமெனப் படையெடுத்து, வேளின் அருகிருந்த அதிகாரிகள் துணையுடன் வேளின் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்! அதுவரையில் வேளின் புகழ்பாடி விருந்த பொருளீட்டிக்கொண்ட வீரராகியர், இப்போது பக்கத்து நாட்டானின் சிறப்புகளை முழக்கத் தொடங்கினார்.