குறளோவியம்
பகுதி 169 · 169 / 300
இதைச் சொல்லிவிட்டுப் பேரன், பாட்டியின் முகத்தைப் பார்த்தான். அவள் முகம் மலர்ந்தது. கிழவர், கிழவியிடம் சொன்னார் : “சொர்க்கம், நரகம் என்று தனியாக இடங்கள் எதுவுமில்லை. ஒருவன் தனது வாழ்க்கைக்குப் பிறகு மிச்சமாக விட்டுப் போகிற புகழ்ச்சியையோ அல்லது இகழ்ச்சியையோ பொறுத்ததாகும் அது” என்று!
பேரன், தனக்குத் தாத்தா சொல்லிக்கொடுத்த திருக்குறளுக்கான விளக்கத்தையும் பாட்டிக்குக் கூறி அவள் பாராட்டைப் பெற்றான்.
“தமது வாழ்க்கைக்குப் பின் எஞ்சி நிற்பதாகிய புகழைப் பெறாவிட்டால் அப்படிப் பெறாத வாழ்க்கை, உலகத்தார் எல்லார்க்கும் பழியெனக் கூறத்தக்க அளவுக்கு ஆகிவிடும்.”
“வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்”
அதிகாரம் - 24 - புகழ்; பாடல் - 238
இசை - புகழ் வசை - பழி
“அறம் எனக்கு வழிகாட்டுகிறது! நீதியும் நேர்மையும்தான் எனக்குத் துணை நிற்கின்றன! சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் என் வாழ்வு மாசற்றது! மறை நான்கு வகுத்தவர்கள்கூட மதித்துப் போற்றக்கூடிய வாழ்வாகும்! நான் பிறர்மீது குறை சொல்லிக் கொண்டே இருப்பதற்குக் காரணம், யார் மீதும் பழி சுமத்த வேண்டும் என்பதற்காக அல்ல! அப்படிப் பிறரைக் குறை கூறி அவர்களை இழித்துப் பேசுவதால், என் சிறப்பு மக்களுக்குத் தெரிகிறது.
நான் புத்தனைப்போல எதையும் துறந்துவிட்ட தியாகியாக இருப்பவன். நபிகள் நாயகத்தைப்போல எதிர்ப்புகளைப் புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறவன். ஏசுநாதரைப்போல இலட்சிய வெற்றிக்காக, இழப்பு எதுவாயினும் அதனைப் பொருட்படுத்தாதவன்.”
- இப்படி ஒருவன் மக்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்ததை ஆங்கு, ஓர் ஆசிரியரின் மகன் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவன் பேசி முடித்ததும் மக்கள் கலைந்தனர். கலைந்து சென்ற மக்களில் பலர் - ஆடவரும் பெண்டிருமாக - அவன் கால்களைத் தொட்டு வணங்கிச் சென்றனர்.
அந்தப் பெரிய மனிதனின் அருகே அவனது மெய்க்காப்பாளன் நின்று கொண்டு, ஏடொன்றில் எதையோ குறித்துக் கொண்டிருந்தான்.
மக்கள் அனைவரும் வெளியேறியபின்பு, அந்தப் பெரிய மனிதன், மெய்க்காப்பாளனைப் பார்த்துக் கேட்டான் : “இன்று என் காலில் விழுந்து வணங்காதவர் எத்தனை பேர்?”
“ஐயா, அந்தத் தொகை நேற்று இருந்ததைவிட சற்று அதிகம்.”
“நேற்று இருபது பேர் என்று கூறினாய்; இன்று எத்தனை பேர்?”
“இன்று ஐம்பது பேர் தங்களின் காலில் விழாது மட்டுமல்ல; தங்களைக் கைகூப்பிக்கூடத் தொழவில்லை!”
“அப்படியா? ஓகோ! சரி! சரி! நேற்று என் குறைகேட்க வந்தோர் எண்ணிக்கை என்ன? மகளிர் எண்ணிக்கை என்ன?”
