உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 160
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 160 · 160 / 300

எனக் கேட்டார் துறவி! கன்னத்தில் கன்னம் சேர்த்து கனதனங்கள் சுகம் வழங்கக் கட்டி முத்தங்களால் விடையளித்தாள் அந்த விழியழகி.

“பற்றற்று வாழவேண்டுமெனப் பறைசாற்றிவிட்டு வந்தேன். அப்போதும் இந்தப் பத்தரை மாற்றுத் தங்கத்தை நெஞ்சில் பதித்துக் கொண்டேயிருந்தேன்.”

துறவியைப் பேச விடவில்லை, அந்தத் தோகை மயில்! அள்ளிப் பொழியலாம் பள்ளியறைக் காவியமெனத் துள்ளிக் குதித்து அவரைக் கட்டிலில் தள்ளினாள்.

இதற்குமேல் இளைஞனால் அங்கு நிற்க முடியவில்லை. அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

“உண்மையிலேயே மனதாரப் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை”

என்ற குறளின் வாசகம் அந்த இளைஞனின் நினைவுக்கு வந்தது. மடத்து வாயிலில் அந்தக் குறளை எழுதிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

“நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்.”

அதிகாரம் - 28 - கூடா ஒழுக்கம்; பாடல் - 276

வன்கணார் = இரக்கமற்றவர்

வீரர் கோட்டம் - வீரர் பாசறை - இப்படித் திக்கெட்டும் புகழ்ந்தது உரோமாபுரி குறித்து! அந்த நாட்டினை ஆளுதற்கு மகுடம் புனைந்தோர்: படைபல குவித்துக் கடைபல கடந்து பிறநாட்டார் கோட்டைகளில் தமது கொடிகளை ஏற்றி, வெற்றி முரசு கொட்டி மகிழ்ந்தனர்! அவர் தம் குதிரைகளின் குளம்படிச் சப்தம் கேட்டு எதிரிகளின் கூடாரம் அதிர்ந்தது! அலறியது! போர்க்களத்தை விளையாட்டுத் திடலாக எண்ணிக் கொண்டு, உடலில் படும் விழுப்புண்களையே வெற்றிக்குரிய எண்களாகக் கருதிக் கணக்கிட்டுக் கொண்டு வாள் தூக்கிப் பாய்ந்தனர், பகையின் தாள் வணங்கி அறியாத அந்த மாவீரர்கள்!

கொப்பளிக்கும் குருதி கொண்டு தங்கள் சாம்ராஜ்யத்தின் எல்லைக் கோடுகளை வரைந்து களித்தனர், அந்த வளையாத வைரநெஞ்சினர்! தொட்டிலிலேயே வீரம் பயின்று, தொகை தொகையாய் எதிரிகளை வெட்டிச் சாய்க்கும் மறவர்களின் மண்ணாக விளங்கிய உரோமாபுரி, பிறிதொரு காலத்தில் கட்டிலில் கண்ட சுகத்தையே சொர்க்கமென்றும் - சொர்க்கமும் அந்தச் சுகத்திற்கு ஈடில்லையென்றும் கூறி, அதனைச் செயலில் காட்டவும் தொடங்கியது!

போர்க் கருவிகளைத் தூக்கிப்பிடித்த புலிநிகர்த்த வீரமன்னர்கள், போர்க்கருவிகளாம் கேளிக்கை அரசிகளைத் தாங்கிப்பிடித்துத் தழுவத் துடித்து, மெல்லிய இதழைக் கடித்து, இளந்தளிர் மேனியைச் சுவைத்து இன்பத்தில் மூழ்கினர்! இரவு

விளக்குகளில் மிதந்தனர்! அந்த அழகிகளோ, அவர்கள் பெற்றிருக்கும் போதையேறிய கண்கள், புருஷர்களை வீழ்த்துவதற்கென்றே அமைந்துள்ள மோகனாஸ்திரங்கள் என எண்ணி, அரசர்களை மடியில் போட்டுக்கொண்டு அரசாங்கத்தைத் தமது பிடியில் வைத்துக் கொண்டனர்.

இதோ வள்ளுவரும் உணர்த்துகிறார்;

“நெஞ்சத்தை உறுதியுடன் அசையாமல் வைத்திருக்கும் ஆற்றல் இல்லாதவர்கள்; வேறு காரியங்களை மனதில் எண்ணிக்கொண்டு மயக்குமொழி பேசுகிற பொதுமகளிரின் தோளைத் தழுவிக் கெடுவார்கள்.”

“நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள்”

அதிகாரம் - 92 - வரைவின் மகளிர்; பாடல் - 917