குறளோவியம்
பகுதி 156 · 156 / 300
“சே!சே! அப்படியொன்றுமில்லை. கார்மேகத்தின் மருத்துவரே நான்தானே! உடல் வலிக்கு ஒன்றும் குறைவில்லை. ஏதோ உள்ளத்தில்தான் குடைச்சல்! அதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.”
இன்னொருவர், அந்த மண்டபத்தில் பின் வருமாறு ஒரு கற்பனையைப் பொழிந்தார்.
“கார்மேகத்துக்குப் பக்கத்து ஊரில் சில பகைவர்கள் உண்டு. அவர்களால் ஏதாவது தீங்கு நேரிடக் கூடும் என்று கார்மேகம் அஞ்சிக் கொண்டிருப்பதாகக் கேள்வி! அதிலும் வர வர அந்தப் பகைவர்கள் வலிவு பெருகிக் கொண்டிருக்கிறதாம்! வாய்க்கால் வரப்புச் சண்டையில் வளர்ந்த அந்தப் பகைமை ‘உன்னை வாழவிட்டேனா பார்’ என்கிற அளவுக்கு வளர்ந்து விட்டதாம்.”
இதை அவர் சொல்லி முடிப்பதற்குள் அந்த ஊர்ப் பெரியவர் - கலகலவென நகைத்தவாறு பேசலுற்றார். எல்லோரும் அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதையே ஆவலுடன் எதிர்பார்த்தனர். பெரியவர் பேசினார்:
“ஒளியழகன் எனும் ஓர் இளைஞன் நமது ஊர்ப்பிள்ளை என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? அவன், கடலோடி வாணிபம் செய்து பெரும் பொருள் திரட்டிச் சிறந்த செல்வனாகத் திகழ்கிறான். ஒளியழகன், நமது கார்மேகத்துக்கு உறவுகூட! அவனொன்றும் கார்மேகத்திடம், எந்த வம்புக்கும் வருவதில்லை. பக்கத்து ஊரில் பெரியதோர் வீடு கட்டுகிறான், நிறைந்த தொகை செலவிட்டு!
தன் கண் எதிரே எளியோனாய்த் திரிந்த இளைஞன் இன்று பெருவணிகனாய் விளங்குவது கண்டு கார்மேகத்துக்குப் பொறாமை தாங்கமுடியவில்லை. அவனையும் அறியாமல் அவன் எரியும் உள்ளத்தை என்னிடம் திறந்தும் காட்டிவிட்டான். பொறாமைத்தீ, அவன் நெஞ்சைச் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது.
யாரோ - எவரோ - என்றால்கூட இவ்வளவு பொறாமை இருக்காது! உறவுக் காரன் ஒருவனே, தன்னை மிஞ்சிச் செல்வந்தனாகி விட்டதும் - சீர் பல பெற்று வாழ்வதும் - கார்மேகம் போன்ற கடுகு உள்ளத்தினரால் தாங்கிக் கொள்ள இயலாது.
அதனால் தான் அவன் வதங்கித் தேய்கிறான். பகைவர்கள் யாருமே தீங்கு செய்ய முற்படவில்லை! அவனுள்ளிருக்கும் பொறாமையே அவனுக்குப் பகை! அதைவிட அவனுக்கு வீழ்ச்சி தருவதற்கு வேறு பகை தேவையில்லை.”
பெரியவரின் விளக்கம் கேட்டு ஊரார் உண்மை உணர்ந்தனர். கார்மேகத்தைக் காரி உமிழ்ந்தனர்.
“அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது.”
அதிகாரம் - 17 - அழுக்காறாமை; பாடல் - 165
ஒன்னார் = பகைவர்
வழுக்கியும் = தவறினாலும்
ஈன்பது = தருவது
அழகை அள்ளிப் பொழியும் இயற்கைக் காடு! அங்கே துள்ளித் திரியும் மான் கூட்டம்! தோகை விரித்து ஆடிடும் மயில்கள்! அதுகண்டு பொல்லாச் சிறகை அவிழ்த்துக் குதித்திடும் வான்கோழிகள்! இலவம் பஞ்சின் உருண்டைகள்போல் முயல்கள் தரையில் பறந்திடும் காட்சி! கிளைவிட்டுக் கிளை தாவிப் பாய்ந்திடும் குரங்குகட்கும் அந்தக் காட்டில் தனியாட்சி! மலைமுகட்டின் முகில்கள் உருகி, இயற்கையின் அற்புதத்தால் நெய்யருவிகள் பாறைகளில் பெருக்கெடுக்கும் எழிலே எழில்!
அதனருகே அமர்ந்து பாடிடும் குயிலோ குயில்! அக்குரல் பயிலத் தவமிருக்கும் காகம்! அது இசைப்பதோ அபத்த ராகம்! அதை ரசிப்பதோ ஒரு வராகம்! இந்த வேடிக்கை பார்க்க அங்கு வாடிக்கையாக வட்டமிடும் பச்சைக் கிளி! நீலப்புறா!
அங்குள்ள பாறைகளில் ஒன்றுதான், பாவையை யாரும் பார்த்துவிடாமல் பாதுகாப்பு அளித்தது. ஆம்; பாவைதான் அவள் பெயர்! பாறை மறைவில் யாரைத் தேடி அவள் நிற்கின்றாள்; யாரைத்தான் தேடுவாள்?
