குறளோவியம்
பகுதி 133 · 133 / 300
மறுநாள், நிலக்கிழார் ஆணைகேட்டுக் கடம்பன் அவசர வேலையாக அயலூர் சென்றுவிட்டான். அவன் திரும்ப, ஆறு ஏழு நாட்களாகுமெனச் சொன்னார்கள்.
வஞ்சிக்கொடி, வாடிக் கிடக்கும் காரணம் இப்போது புரிகிறதல்லவா? பிரிந்து சென்ற காதலன்மீது பெண்களுக்குத் தேவையில்லாத ஒரு கோபம் வரும். அது இயல்பு! விரகதாபத்தின் விளைவு போலும்! காளிக்கும் அப்படித்தான் கோபம் வந்துவிட்டது! அவள் நெஞ்சம் அவளைப் பார்த்துச் சொன்னது:
“காளி! உன்னைத் தவிக்கவிட்டுப் பிரிந்துசென்ற கடம்பன்; அதோ வந்து கொண்டிருக்கிறான். அவன் வந்தால் அவனோடு எந்த உறவும் உனக்கு இல்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிடு!” என்பதாக!
காளி, சிரித்தாள்! அந்தச் சிரிப்பில் கோபமும் கலந்திருந்தது! அவள் பேசினாள்:
“என் நெஞ்சே! எனக்கு உரிமையுடைய நீயே; அவர் என்னைப் பிரிந்து சென்றதும் என்னை விட்டு அவரோடு போய்விட்டு இப்போதுதான் திரும்பி வருகிறாய்! நீயே என் உறவை மறந்துவிட்டாய் என்றால்; அவர் என் உறவை மறந்து பிரிந்து சென்றதில் பெரிய பிழையொன்றுமில்லை.”
இப்படிக் காளி, தன் நெஞ்சை நொந்துகொண்டு, பிரிந்துசென்ற காதலனையும் ‘அயலார்’ என்று சினந்து குறிப்பிட்டாள்.
அதற்குள் கடம்பன் ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டான். ‘அயல்’ என்ற வார்த்தை அடிபட்டுப்போயிற்று! கயல், அவன் அன்பு வலையில் சிக்கிக் கொண்டது.
“தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி.”
அதிகாரம் - 130 - நெஞ்சொடு புலத்தல்; பாடல் - 1300
1982 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 15ஆம் நாள் காலை மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரையில் 120 கல் தொலைவு (200 கிலோமீட்டர்) நெடிய பயணம் ஒன்று புறப்பட்டது. நீதியைப் புறக்கணித்துவிட்ட அரசின் செயலைக் கண்டித்துக் கழகத்தினர் நடத்திய அந்தப் பயணத்திற்கு நான் தலைமை தாங்கினேன். தொடக்கத்தில் ஐம்பதினாயிரம் பேராகக் கிளம்பிய அந்தப் பேரணி, எட்டு நாட்களில் இரண்டு லட்சம் பேரைக் கொண்ட மிகப்பெரும் பேரணியாக நடந்தே சென்று திருச்செந்தூரை அடைந்தது.
அத்தனை தொலைவு - எட்டு நாட்கள் - இலட்சக்கணக்கானோர் - நடந்தே சென்று ‘நீதி கேட்கும் நெடிய பயணத்தை’ நிறைவு செய்திட முடியுமா? இந்தத் தயக்கம் பலரது ஐயப்பாடாக வெளிவந்தது! அரசு அலுவலர் ஒருவர் - அறநெறி வாய்ந்தவர் - அவரை, ஆளுந்தரப்பினரான சில கொடியோர் கொன்று குவித்துக் கள்வர் என்றும் கதை கட்டிவிட்டனர். அவர் கள்வர்
அல்ல என்றும் கள்வர் என்று கழறியோரே அவரைக் கொன்றுவிட்டனர் என்றும் நீதிபதியும் முடிவு அறிவித்துவிட்டார். அந்த முடிவையும் மீறி, அரசினர் நீதியை வளைத்தனர். வளைந்த செங்கோல் கண்டு தனது வாழ்வை முடித்துக்கொண்டு, நிமிர்ந்த செங்கோலுடன் வீழ்ந்துவிட்ட நெடுஞ்செழிய பாண்டியன் ஆண்டிருந்த மதுரையிலிருந்து தொடங்கப்பெற்ற நெடிய பயணம், மக்களின் குரலை மண்ணாள்பவருக்கு எதிரொலித்துக் காட்டியது.
ஐயம் - அச்சம் - இயலுமா என்ற வியப்பு - இத்தனைக்குமிடையே நெடிய பயணத்தில் ஈடுபட்டோர் உள்ளத்தில் வள்ளுவரின் குறள் வரிகள் செம்மாந்து எழுந்து நின்றன.
“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை.”
“சோர்வு இல்லாத ஊக்கமுடையவனிடத்தில், ஆக்கமானது தானே அவனிடத்துக்கு மிடம் தேடி வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேர்ந்திடும்.”
இந்தக் குறளின் கருத்துப் போதாதா, அந்தப் பேரணியினர் தங்களின் வரலாற்றுப் புகழ்மிக்க நடைப்பயணத்தை மேற்கொண்டிட!
வழியில் எத்தனையோ இடையூறுகள்! இன்னல்கள்! நோய் நொடிகள்!
