உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 106
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 106 · 106 / 300

தீயின் கொழுந்துகள் சத்திரத்தை முழுமையாக மூடிக்கொண்டு விட்டன. ஊரார் தீயை அணைக்க முடியாமல் தவித்தனர்; அப்போது கையில் ஒரு பிச்சைப் பாத்திரத்துடன் அங்கு வந்த சிறுமி, தன் கையிலிருந்த பாத்திரம் கீழே விழுந்து அதிலிருந்த சோறு பூமியிலே சிதறிவிட்டதைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல், “அய்யோ! என் அப்பாவைக் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!”

என்று கதறியவாறு, சத்திரத்தை நோக்கி ஓடினாள்.

அதைக் கண்ட ஓர் இளைஞன், சிறுமியைத் தடுத்து நிறுத்தி விட்டு, ஒரே பாய்ச்சலில் சத்திரத்துக்குள் நுழைந்தான். அடுத்த கணம், ஒருவனைத் தூக்கிக் கொண்டு அந்த இளைஞன் வெளியே ஓடி வந்தான். அவன்தான் அந்தப் பிச்சைக்காரச் சிறுமியின் தகப்பன். அவனைப் பார்த்து எல்லோரும் கேட்டார்கள், “என்னப்பா, எரிகிற நெருப்பின் நடுவே இப்படி ஒரு மனிதன் தூங்கிக் கொண்டிருப்பானா? இந்த இளைஞன் இல்லையேல் உன் கதி என்ன ஆகியிருக்கும்?”

என்று சினந்து கேட்டனர். அவன் கண்களைக் கசக்கியவாறு, அசதி மிகுந்த நிலையில் பதில் சொன்னான்:

“இந்த நெருப்பைக் கொடியதாக எண்ணி நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால், என்னை வாட்டி வதைக்கிற வறுமையோ, இந்த நெருப்பைவிடக் கொடியது. நெருப்புப் பிடித்தது தெரியாமல்கூட நான் சற்று நேரம் அயர்ந்து தூங்கி விட்டேன். ஆனால், வறுமை தாக்கும்போது தூங்கவே முடியவில்லையே! அது தெரியவில்லையா, உங்களுக்கு? ஏன்? என் தூக்கத்தைக் கெடுத்தீர்கள்? நான் இந்த நெருப்புக்கு மத்தியில் தூங்கியிருப்பேனே; வறுமையை எனக்கு நினைவூட்டி மீண்டும் தூங்க முடியாமல் செய்து விட்டீர்களே!”

இப்படிச் சொல்லி அழுதான் அவன். அந்தக் குமுறல்தான் இதோ குறளாக வெளிப்படுகிறது;

“நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.”

அதிகாரம் - 105 - நல்குரவு; பாடல் - 1049

சூளையில் வைத்து எடுத்த பானைகள் ஒருபக்கம் அடுக்கப்பட்டிருக்கின்றன. பச்சை மண்ணால் செய்து பக்குவமாக வைக்கப்பட்டிருந்த பானைகளும் சட்டிகளும் இன்னொரு பக்கம் காட்சி அளிக்கின்றன. பானை செய்யும் சக்கரம், ஓய்வு கொண்டிருக்கிறது. அதனருகேதான் அவள் உட்கார்ந்திருக்கிறாள். அவள் முகத்தில் இனம் தெரியாத ஒரு சோகம். காதலனை இன்னும் காணவில்லையே என்ற

ஏக்கத்தைத்தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்! அவளைக் கேலி செய்வதற்காக அடுத்த வீட்டுத் தோழி வருகிறாள்.

“என்னடியம்மா! கண்ணை மூடிமூடித் திறந்து கொண்டிருக்கிறாய்? உன் காதலன் கண்ணுக்குள்ளேயே இருக்கிறார் என்று சொல்லவாய் - இப்படிக் கண்ணை மூடி இமைத்தால் கண்ணுக்குள் இருக்கும் காதலன் வருந்தமாட்டாரா?”

என்று தோழி புன்னகை சிந்தியவாறு கேட்கிறாள். அப்போது, அவள் காதலன் அங்கு வந்தவன், அவர்கள் பேசிக் கொள்வதைக் கேட்பதற்காக, அடுக்கப்பட்டிருந்த பானைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு கவனிக்கிறான். தோழியின் கேள்விக்கு அவள் சொல்கிற பதில், அந்தக் காதலன் நெஞ்சில் தேன்மழை பொழிய வைக்கிறது.

“என் காதலர், என் கண்ணுக்குள்ளிருந்து எங்கும் செல்லமாட்டார். கண்ணை மூடி இமைப்பதாலும் அவர் வருந்தமாட்டார். காரணம்; அவர் அவ்வளவு நுட்பமானவர்.”

அவள் இந்தப் பதிலைக்கூறி, அதற்கான குறளையும் பாடிக் காட்டுகிறாள்.

“கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் நுண்ணியர்எம் காத லவர்.”

தோழி குறுக்கிட்டு, “அவ்வளவு நுட்பமானவர் உன் அருங்குணத்தை நினைத்துப் பார்க்காமல் அடிக்கடி உன்னைப் பிரிந்து விடுகிறாரே!” எனக் கேலி செய்கிறாள். தன் காதலியை அவள் தோழியிடம் சிக்கவைக்க விரும்பாத காதலன், உடனே எதிர்வந்து நிற்கிறான். அடுத்த வீட்டுப் பாவையைப் பார்த்து அவன் ஒரு அழகான விளக்கத்தை அளிக்கிறான்.

“என் அன்புக் காதலியின் போர்புரியும் வலிமைவாய்ந்த கண்களை உணர்ந்தவன் நான். அத்தகைய வேல்விழியாளின் அருங்குணங்களை நான் மறந்தால்தானே பிறகு நினைக்க முடியும். அந்தக் குணங்களை நான் ஒருபோதும் மறந்தது கிடையாதே!”