உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

விடுதலைக் கிளர்ச்சி

கட்டுரைகள் 2 · 2 / 2

இந்த வகையிலே-உருவம் வேறாக இருந்தாலும், அமெரிக்கப் படையெடுப்புகள் டில்லியின் துணை கொண்டு நாட்டிலே நடைபெறுகின்றன.

பல தொழில்வளம் பெருக்கும் பயிற்சிகள் பலவற்றை கற்றுத்தர ரஷ்யா முன்வருகிறது. அண்மையில் பம்பாயில் நடைபெற்ற தொழிற் கண்காட்சியில் ரஷ்யாவின் சாதனைகள் பல்லோராலும் பாராட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் இவைகளை பயன்படுத்திக் கொள்ள தயாராயில்லை இந்த பாரதமணித்திருநாடு! ஆம் மூளியாகப்போன பாரதமாதா! டில்லியின் இந்தச் செயல்களெல்லாம், ஏதோ ஒரு பயங்கர எதிர் காலத்திற்கு அறிகுறியாக தென்படவில்லையா?

ஆனால் இந்தத் தெளிவை, தெரிந்தும் தெரியாதவராய் காட்டிக்கொள்ளும் கலை பயின்றோர் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் நம்மிடத்தில்!

“தென்னாட்டில் காங்கிரஸ் தோற்றது ஏன் தெரியுமா?”

“டில்லியின் தலைமை பிடிக்கவில்லை.” இது நாம்!

“திராவிட இயக்கம் சினிமா, நாடகம், மேடை, பள்ளிக்கூடம், புத்தகம், இவைகளின் மூலமாக செய்துவந்த தேசத்துரோகப் பிரச்சாரந்தான் காங்கிரஸ் தோல்விக்குக் காரணம்”

இது அவர்கள், பாவம்; தோல்வியால் துவண்டவர்கள்.

திராவிட இயக்கம் வாழமுடியாது; கோட்டைக்குள்ளே குத்து-வெட்டும் கிளம்பிவிட்டது. இரண்டாகிவிட்டது, இரண்டும் மோதிக்கொண்டு அழிந்துவிடும் என்று எந்தப் பேனா இங்கியைச் சிந்தியதோ-அதே பேனா கண்ணீரைச் சிந்திக் கூறுகிறது; திராவிடர் இயக்க எதிர்ப்புப் பிரச்சாரந்தான் தேசத்துரோகப் பிரச்சாரந்தான் காங்கிரஸ் தோல்விக்குக் காரணம் என்று!

திராவிடம் வேண்டுமென்பது தேசத் துரோகப் பிரசாரமாம். போகட்டும், பிரச்சாரத்தால் காங்கிரஸ் தோல்வியுற்றது என்பவர்கள் உண்மையிலேயே பேசுகிறார்களா அப்படி!

காலையிலே வானொலியைத் திருப்பினால் வந்தே மாதரம். பிற்பகலிலே ஜேஹிந்த். மாலையிலே ‘பாரத மணிக்கொடி’ பாட்டு.

பொழுதுபோக்க திரைப்படத்திற்கு சென்றால் படங்கள். தென்னாட்டு வீரன் இராவணனை வடநாட்டு ராமநவமியில் கொளுத்துவதும், அந்தக் கொண்டாட்டத்தை நேரு கண்டு குதூகலிப்பதும், ஹோலி பண்டிகையிலே பலவித சாயங்கள் முகத்திலே ஊற்றிக் கொண்டு நேருஜீ நர்த்தன மாடுவதும், முன்ஷி செடி நடுவதும், பிரசாத் தண்ணீர் ஊற்றுவதும், ஆசாத் வீட்டு ஆடு அதை மேய்ந்து விடுவதுமான எத்தனை எத்தனையோ காட்சிகள் செய்திச் சுருள்களிலே!

வனப்புமிகு வர்ணங்களிலே பத்திரிகைகள், தேர்தல் நேரத்திலே தெருவெல்லாம் திகைக்க வைக்கும் சுவரொட்டிகள்.

இன்னோரன்ன பிரச்சார பலங்கொண்ட பெரிய கட்சி, தென்னாட்டைப் பொறுத்தவரையிலே கோமிண்டாங் கட்சியாக மாறிவிட்டது.

காரணம் எதிர்ப்பு இயக்கப் பிரச்சாரம் என்று கூறப்படுகிறது. விடுதலைக் கிளர்ச்சியின் எதிரொலி என்று சொல்லட்டும்; ஒத்துக்கொள்வோம். எதிர்ப்பு இயக்கம் நடத்த வேண்டுமென்ற கீழ்த்தர ஆசையுள்ளவர்களல்ல நாம். அந்தப் பெயரால் கண்ணகி பந்தல்களிலே திரௌபதி நடனமாடியவர்கள் அவர்கள் தான் நன்மை அழிப்பதற்காகவே—கண்ணீர்த்துளிகளை ஒழித்துக்கட்ட வேண்டுமென்றே—நம்மோடு உறவாடக் கூடாது என்றே தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

எதிர்ப்பு மாநாடு என்ற பெயரால் விடுதலைக் கிளர்ச்சியை எதிர்த்திடும் விபீஷணர்கள் கிளம்பினார்கள்.

இராவணனுடைய பார்வையிலே இராமன் கூட கொஞ்சம் நல்லவன். விபீஷணன் துரோகி. அந்த துரோகியின் வரிசையிலே உள்ள துரோகிகள் நம்மை துரோகிகள் என்றார்கள். இப்போதும் சொல்லுகிறார்கள்.

தேசத் துரோகியாம் நாம். நாட்டுத் துரோகியாம் நாம். திராவிடம் என்ற நமது நாட்டை நாம் கேட்பது துரோகமாம். துரோகிகளின் கூச்சலாம்.

உயர்ந்ததாக எண்ணிக் கொண்டு ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், ஆண்டவன் பெயரால் உன்மத்தம் பிடித்தலைந்த சுயநல வெறியை உடைத்து நொறுக்கி, திராவிட சமுதாயம் உய்ய வழி வகுத்திட்ட நாம் அந்தக்காலந் தொட்டு இந்தக் காலம் வரையிலே துரோகிகள் என்றே அழைக்கப்படுகிறோம்.

நான் ஊகிக்கிறேன் நண்பர்களே, தமிழ் அகராதியிலேயே ஒரு மாற்றம் ஏற்படுமென்று! துரோகி என்றால் தூய்மையாவன் என்று பொருள் சொல்லப் போகிறது, வருங்கால அகராதி.

வெண் புறாவைப் பார்த்து வல்லூறு வல்லூறு என்று வர்ணித்துக் கொண்டிருந்தால் சில பல ஆண்டுகளுக்குப் பிறகு,

வல்லூறு என்றால் வெண்புறா என்றுதான் ஆகிவிடும்.

தென்றலை—புயல் புயல் என்று அழைத்துக் கொண்டே யிருந்தால் புயலுக்கு தென்றல் என்றே அர்த்தம்கூற ஆரம்பித்துவிடும், வருங்கால அகராதி!

ஏசல்கள்—ஏளனங்கள்—கிண்டல்கள்—கேலிகள்—கண்டனங்கள் தாங்கிக்கொண்டு விடுதலைக் கிளர்ச்சியிலே ஈடுபட்டிருக்கிறவர்கள் நாம்!

துரோகி யென்றால் அதை நம் வீர விருதாகக் கொண்டு—பாபி என்றால் பதக்கமாக நினைத்து—பணிபுரிந்து வருகிறோம்; கிளர்ச்சி நடத்தி வருகிறோம்.

கிளர்ச்சியாளர்களின் குரலை அலட்சியப்படுத்துவதோடு நில்லாமல் மனதைக் கிள்ளிவிடும் போக்கிலே எரிமலையென நெருப்புமிழ்கின்றனர் ஆளுங் கட்சியினர்.

செத்துவிட்டார்கள் இங்கே செங்கோல் பிடித்த கோமிண்டாங் கட்சியினர். ஆனாலும் சிரிப்பு போகவில்லை அவர்கட்கு. வட நாட்டார் தென்னாட்டாரை அவ்வளவு சுலபத்திலே விட்டுவிடுவார்களா என்ன?

கூண்டுக் கிளியின் விடுதலையை எதிர்பார்த்து ஏங்கியிருந்த பூனையல்லவா வடநாடு. ஆகவே தன் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்திருக்கிறது. டில்லியின் பிடி தளர்ந்து விடாதிருக்க வழி செய்ய வேண்டுமே. அதற்காக கவர்னர் மூலமாக கடிவாளம் பூட்டுகிறது. காங்கிரஸ்காரர் ஒருவரை காங்கிரஸ் கவிழ்ந்துவிட்ட மாகாணத்திற்கு கவர்னராக நியமனம் செய்து அனுப்புகிறது. அவர் வரும்போதே சொல்கிறார் “நான் ராபர்ட் கிளைவின் வாரிசாக சென்னைக்குச் செல்கிறேன்” என்று.

எவ்வளவு பொருள் பொருந்திய பொல்லாத வாசகம் அது!

கிளைவ் யார்?

ஆங்கில நாட்டிலே சகதியிலே, சாக்கடை யோரத்திலே உருண்டவன். உதவாக்கரையெனப் பெயர் எடுத்தவன். குமாஸ்தாவாக வந்து பிரிட்டிஷ் கொடியை உயர்த்தியவன். ஆங்கில ஏகாதிபத்யத்தின் முக்கிய தூதுவன்.

அவனுடைய வாரிசாக வருகிறாராம் இந்த வட நாட்டார்.

கிளைவ் வந்தான். ஆங்கில ஏகாதிபத்யம் கிளைவ் உருவிலே வந்தது. ஆனால் அது மௌண்ட் பேட்டன் உருவிலே வெளியேறியது.

நான், கிளைவின் வாரிசுக்கு நினைவூட்டுகிறேன்—வடநாட்டு கவர்னரே! உமது உருவிலே இப்போது வரும் டில்லி ஏகாதிபத்யம் வேறொருவர் உருவிலே திரும்பிப்போகு மென்பது என்ன நிச்சயம். உமது உருவிலேயே கூட அது திரும்பிவிட நேரிடலாம்.

சோப்பும் சீப்பும் விற்க வந்தவன் அவன்!

நீ, மிட்டாய் விற்க வந்தவன், வட்டிக் கடை வைக்க வந்தவன்; வித்யாசம் அவ்வளவு தான்.

ஜனநாயகம் பெயர்; ஆனால் கவர்னர் நியமனம்!

பேதமற்ற சர்க்கார்; ஆனால் பிடித்தனுப்புவது காங்கிரஸ்காரரை!

சமமான கண்ணோட்டம்! ஆனால் வருவது வட நாட்டார்!

இதற்குப் பெயர்தான் காந்தீயம்—காங்கிரஸ் ஆட்சி. ஆமாம்; கோமிண்டாங் கட்சி.

இத்தகைய நேர்மையற்ற போக்கிலிருந்து திராவிடம் விடுதலை பெறவேண்டாமா? விடுதலைக்கிளர்ச்சி இன்னும் பலமாக நடைபெற வேண்டாமா?

விடுதலைக் கிளர்ச்சி சுலபமான தல்லவே. சொன்னதும் வெற்றி என்ற அளவில் சுருக்கமாக முடிந்து விடக் கூடியதல்லவே.

விளைவு சுவைதருமே தவிர அதற்கான முயற்சிகள் சொல்லொணா வேதனை மிக்கவை.

சைனாவின் விடுதலைப் போரிலே மக்கள் சேனையும், சியாங்சேனையும் போரிட்ட நேரத்திலே பலமாத காலம், ஆயிரக்கணக்கான மைல்கள் மக்கள் சேனை கால்நடையாக நடந்திடவேண்டிய நெருக்கடி ஏற்பட்டதாம். அந்த நீண்ட பயணத்திலே ஆடவர், பெண்டிர், முதியவர், இளைஞர் அனைவரும் இருந்தனராம். கருவுற்றிருந்த பெண்மணிகள் வழியிலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்தார்களாம்.

பெற்ற குழந்தைகளை பிரியமோடு வளர்க்க நேரமில்லை அவர்களுக்கு. நெருக்கடி. நாட்டைப்பற்றிய கவலை. அந்தத் தியாகவல்லிகள் தங்கள் குழவிகளை, கண்ணிதழ் விரியா அந்த அரும்புகளை அடையாளம் தெரியாத விவசாயிகளிடம் விட்டுப் போயினராம்.

அப்படி விடப்பட்ட சிசுக்கள் பனிரெண்டாம். அந்தப் பனிரெண்டு குழந்தைகளிலே ஒன்று, அப்போது விடுதலைச் சேனையிலே ஒரு வீரனாயும், இப்போது சீனாவின் தலைவனாயுமிருக்கிற மாசேதுங்கினுடைய குழந்தையாம்.

மனங்கலங்காத மாசேதுங்கள் தேவை விடுதலைக் கிளர்ச்சிக்கு!

இரண்டாயிரம் பேர்தான் உணர்ச்சி பெற்றெழுந்தனர் சைனாவிலே, முதலில்! இரண்டாமிரம் இரண்டொரு ஆண்டுகளில் இலட்சக் கணக்கில் உருவெடுத்தது.

திராவிடத்து விடுதலைக் கிளர்ச்சியும் நூற்றுக் கணக்கானவர்களை முதலாக வைத்துத்தான் துவக்கப்பட்டது, முதலில்!

வேறுபல நாடுகளைப்போல அல்ல; இந்த நாட்டு விடுதலைக் கிளர்ச்சி! அரசியல் பொருளாதார விடுதலையோடு நின்றுவிடக் கூடியதாய் அமையவில்லை. சமுதாயம், மூட நம்பிக்கை என்னும் முரட்டுப் பாசீசவாதியின் பிடியிலிருந்து விடுதலை பெற துடியாய்த் துடிக்கிறது.

உலகிற்கு நாகரீக விழுதுகளை படரவிட்ட ஆலமரம், திராவிடம்தான் என்று புகழப்பட்டாலுங் கூட, நாம் கவினுடை தரித்திருந்த நேரத்தில் காடுகளில் தழைகளோடு அலைந்தவர்கள், காட்டுமிராண்டியாய்த் திரிந்தவர்கள் இன்று நம்மைப் பார்த்து நையாண்டி செய்கிறார்கள்.

ஒரு சமுதாயம் விடுதலை பெற்ற நாட்டிலே வாழ வேண்டுமானால் அந்த சமுதாயம் விடுதலைக்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டதுதானா என்பதையும் சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் ‘விடுதலை’ குரங்கு கையில் அகப்பட்ட மாலையாகிவிடும்.

கிளிதேவனையும், அப்போலாவையும், அர்குலிசையும் ஆபாசக் கடவுள்களையும் ஆயிரக்கணக்கிலே கொண்டிருந்தவர்கள் அந்த ஆண்டவர்களிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டார்கள். பல பல ஜாதிகளாய் பிரிந்து கிடந்தவர்கள் ஜாதி வெறியிலிருந்து விடுதலை பெற்றுவிட்டார்கள்.

இப்படி அடிப்படையிலே விடுதலை முழக்கம் செய்து வெற்றி கண்டவர்கள்தான் பெற்ற விடுதலையை பாதுகாக்க முடியும்.

இந்த அடைப்படை விடுதலைக் கிளர்ச்சியைத்தான் திராவிட இயக்கம் ஆரம்பித்து வைத்தது.

கடவுள், மதம், சாத்திரம், சம்பிரதாயம், ஜாதி வெறி, புராணம், இதிகாசம், இத்தகைய போதைகளிலிருந்து விடுபெற வேண்டுமென்ற கிளர்ச்சியையும் இணைத்துக் கொண்டிருப்பதுதான் நம்முடைய விடுதலைப் போர்.

புதுமை தாகம் உதயமாக வேண்டும் என்ற ஆர்வம் கொழுந்து விடுகிறது நாடெங்கும் இப்போது!

புதுமையிலே மோகம் ஏற்பட்டிருக்கிறது என்றால், புதுமை புன்சிரிப்புக்காரி—பூரிப்பு தவழும் முகத்தினள், மயக்கு மொழிக்காரி, மாயாஜாலக்காரி, வர்ண விகோதனி, என்கின்ற காரணங்களால் அல்ல!

பழமை—கூனி, கிழவி, நடை தளர்ந்தவள் என்ற காரணத்தால்தான்!

பழமையை மனைவியாகக்கொண்டு இதுவரையில் குடும்பம் நடத்தியவர்கள், புதுமையை மகளாகவாவது, மருமகளாகவாவது ஏற்றுக்கொள்ளட்டும் என்றுதான் நாம் கூறி வருகிறோம்.

புதுமையை விரும்பும் நாமும், புதுமையிடம் நாட்டம் கொள்வது, கண்ணகியை வெறுத்து மாதவியிடம் கோவலன் கொண்ட நாட்டத்தைப் போன்றது அல்ல!

பழமை, தாய் போல இருந்து அனுபவ மொழிகள் சில சொல்லட்டும், நாமும் தாயிடம் செலுத்தும் அன்பை அதனிடம் செலுத்துவோம்.

இத்தகைய பரந்த எண்ணம்—நல்ல பண்பு—புதுமை வெறுப்பாளர்களிடமும் தோன்றவேண்டுமென்பதுதான் நமது ஆசை.

சேக்கிழரை, கம்பனை சினந்திடுகிற நாம்—சிலப்பதிகாரத்தை சிறப்பித்திடத் தவறுவதில்லை. புறத்தை, அகத்தை புகழ்ந்திட மறந்ததில்லை.

பழமையிடத்திலே பாசம் செலுத்தித்தான் தீர வேண்டுமென்பதற்காக அல்ல; அந்த பழைய நூல்கள் தாயின் உள்ளத்தை பெற்றிருக்கிற காரணத்தால் பாராட்டுகிறோம்.

இந்தத் தெளிவான உண்மையை புரிந்து கொள்ள இயலாதவர்கள்—வேறு நாடுகளிலே இந்தப் புதுமை கிளர்ச்சி, வெகு சுலபமாக வெற்றி பெற்று வருவதையும் மறந்து ஏதோ ஒரு ஆபத்து வந்துவிட்டதாகக் கருதி அலறித் துடிக்கிறார்கள்.

படித்தவர், பட்டம் பெற்றோர், உலகம் சுற்றியவர் அறிஞரெனப் புகழ் பெற்றவர். இவர்களிலே பெரும்பாலானவர் ராகு; குளிகை காலங்களுக்கு கட்டுப்பட்டவர்கள்!

பஜனை மடம் சுற்றிகள்!

பகவானின் பல்லக்கு தூக்கிகள்!

இவர்களையெல்லாம் அறியாமையிலிருந்து விடுதலை பெறச் செய்து, நம்முடைய விடுதலைக் கிளர்ச்சியிலே இணைக்க வேண்டிய பணியையும் மேற்கொண்டிருக்கிறோம்.

பசி கொண்ட பல்லியின் சப்தத்திலிருந்து, பக்தர்களின் ஆவேசக் கூச்சல் வரையிலே — பார்த்து நடு நடுங்கிடும் பாமரர் ஏராளம் இங்கே!

அவர்களையெல்லாம் மெளடீகத் தனத்திலிருந்து விடுதலை பெறச் செய்ய போராடி வருகிறோம் நாம்.

விஷமப் பிரசாரம் என்ற எதிரிகளின் அணுகுண்டு வீச்சுக்களையெல்லாம் துச்சமாகக் கருதி, தொடர்ந்து நடத்துகிறோம் இந்தப் பகுத்தறிவுப் பணியையும்.

விவசாயத்திலே ஈடுபட்டவன் வயலுக்கு வேலி போடுவதைமட்டும் முக்கியமாகக் கருதி, கழனியிலே முளைக்கும் களையை எடுக்காமல் விட்டு விட்டால் — வேலி பலமாக அமையும் — விளைவு சுகமாக இருக்காது! ஆடுமாடு நுழையாது — ஆனால் அறுவடை ஆனந்தமாயிருக்காது!

இதை எண்ணித்தான் சமுதாயப் பயிர் செழிப்பாக வளர, அறியாமைக் களைகளை அகற்றி, அதே நேரத்தில் தனியரசு வேலிபோடும் வேலையிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம்.

இத்தகைய விடுதலைக் கிளர்ச்சி வெற்றி காண வீட்டுக்கொரு வீரர் புறப்படவேண்டும். வரிசை வரிசையாக புறப்படவேண்டும்.

“தந்தை மாண்டார் — கணவன் இறந்தான் — தமையன் செத்தான் — இதோ நான் பெற்ற தளிர்! இவனை யனுப்புகிறேன், போர் முனைக்கு,” என்ற வீரத்தாயின் குரல் திராவிடத்தின் வீடுகளிலே எதிரொலிக்க வேண்டும்.

புதிய புறநானூறு ஒளி செய்ய வேண்டும். விடுதலைக் கிளர்ச்சி, வீணர்களின் கிளர்ச்சியால் வீழ்ந்து விடாது; வீழ்ந்துவிடக் கூடாது!

பல முனைகளிலே கிளர்ச்சி செய்யும் நாம் — பலமான கிளர்ச்சி செய்யும் நாம் — பலாத்காரமற்ற கிளர்ச்சி செய்யும் நாம் — நிச்சயம் வெற்றி பெறுவோம். வெற்றி பெற்றுத் தீரவேண்டும்.

அந்த நம்பிக்கையை நமக்கு வழங்குவது திராவிட முன்னேற்ற கழகம்.

அந்த அன்புக் கட்டளையை நமக்கு பிறப்பிப்பவர் அறிஞர் அண்ணா!

இரத்த ஆறுகள் பலவற்றைத் தாண்டித்தான் விடுதலை பூமியை அடைந்திருக்கின்றன பல நாடுகள். அந்த ஆறுகளிலே கொடுமையாளர்களின் குருதியோடு, இருதயத் துடிப்பை தியாகத் துடிப்பாக மாற்றி அமைத்தவர்களின் உதிரமும் வேற்றுமையின்றிக் காலந்தோடியது.

பிரான்சிலே ஏழைகளின்மீது, சவாரி செய்த பிரபுக்களின் தலைகளோடு கொடுமையை இன்னதென்று அறியாது, இந்த உலகத்தை விசித்திரக் கருவிழிகளோடு பார்த்த எண்ணற்ற குழந்தைகளின் தலைகளும் கில்லெட்டினுக்கு பலியாகின.

பிரபுக்கள், மன்னர்கள் குடும்பங் குடும்பமாக சிறையிலே அடைக்கப்படுவார்கள் புரட்சிக்குப்பின்.

அந்தக் குடும்பங்களிலே கணவனின் போக்கைக் கண்டித்த மனைவிகளும் இருந்திடுவர். தந்தை செய்த தகாத செயல்களை இன்னதென்றே அறியாத குழந்தைகளும் இருப்பர். எங்கே வந்திருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் விளையாடிக் கொண்டிருக்கிற கொழுந்துகளைப் பார்த்து தாய்கள் கண்ணீர் விடுவர். அப்போது புரட்சிச் சேனையின் வீரர்கள் சிறையைத் திறந்திடுவர். பிரபுவோ மன்னனோ அழைத்துச் செல்லப்படுவான். பிறகு அவன் திரும்பி வரமாட்டான்.

அவன் உயிர் போக்கப்படும்போது மக்கள் செய்யும் ஆரவாரக் கூச்சலைத்தான் சிறைச்சாலை எதிரொலிக்கும். மனைவி தனியே விடப்படுவாள். பிறகு குழந்தைகள் தனியே விடப்படும். பின்னர் சிறைச்சாலையே காலியாகிவிடும். இப்படி பழி தீர்த்துக் கொண்டனர், வேதனைகளை அனுபவித்துக் கிடந்தவர்கள்.

குழந்தைக்கும், பெண்களுக்கும் விதிவிலக்கு அளிக்கவில்லை; அவர்கள் உடலில் ஓடுவது பிரபுத்துவ ரத்தம் என்று விளக்கம் தரப்பட்டு அவர்களின் தலைகள் துண்டாடப்பட்டன.

இப்படி சரித்திரத்தின் இரத்தக்கரை படிந்த ஏடுகளைப் புரட்டிவிட்டு, ‘இரத்த ஞாயிறு’ களை மனக் கண்களினால் சந்தித்துவிட்டு யோசித்தால் நம்முடைய நாட்டு விடுதலையையும் இரத்த விருந்து வைத்துத்தான் அடையவேண்டுமோ என்ற கேள்வி எழலாம்.

ஒவ்வொரு நாடும், தன்னுடைய விடுதலைக்கு துப்பாக்கியையும் பீரங்கியையும் நம்பியிருந்தன. பாஸ்டில் சிறையை உடைத்து விட்டால், பிரபுக்களின் வம்சத்தை பூண்டறுத்து விட்டால், காரியம் முடிந்து விடுமென்று நம்பிக் கொண்டிருந்தார்கள் மக்கள் தலைவர்கள். இப்போது நாகரீக உலகம், ஆயுதங்களின் பலத்தை உணர்ந்தபோதும் அதன் அவசியத்தையும் தேவையையும் ஒத்திப் போடும் அளவுக்கு வளர்ந்து வந்திருக்கிறது.

பின்பற்றுவோரின் எண்ணிக்கை அதிகம் இருக்கத் தேவையில்லை; பின்பற்றும் கொள்கையின் பலமும், சிலர் பின்பற்றினாலும் அந்தச் சிலரின் உடும்புப் பிடிப்பும்தான் இப்போதைய விடுதலைத் தலைவர்களின் வெற்றிக்கு மருந்து.

இரத்தப் புரட்சியையும் ஆயுத பலத்தையும் பக்குவமறியாத மக்களின் முதிர்ச்சி பெறாத முடிவு என்று தீர்மானித்திருக்கும் இந்தக் காலத்திலும், சீனத்தின் விடுதலைக்கு துப்பாக்கியும் பீரங்கியும் தேவைப்பட்டிருக்கிறது. இந்தோ சீனாவிலே இப்போது போர்க்களம் உண்டு பண்ணப்பட்டிருக்கிறது. இவைகள் சூழ்நிலைகளின் பிரதிபலிப்பு என்றும், தவிர்க்கமுடியாத தாகிவிட்ட நிலைமை யென்றும் சமாதானம் கூறப்பட்டாலும் இம்முறைதான் சரியானது என்று ஒப்புக்கொள்ள முடியாது.

ஆதிக்க சக்திகளின் பக்கம் அமெரிக்கா நிற்கிறது — மக்கள் சக்திகளின் பக்கம் ரஷ்யா நிற்கிறது—ஆகவேதான் அழுத்தப்படும் சக்தியும் அழுத்தும் சக்தியும் ஆயுதமேந்திப் போரிடுகின்றன என்று விளக்கங்கள் வராமலில்லை. காரணங்கள் எத்தனை கூறப்பட்டாலும் வளர்ந்துவரும் நாகரீக உலகம் அத்தகைய முறைகளை ஆமோதித்திடத் தயாராயில்லை. நாச முறைகள் என்றுதான் கூறிடும்.

ஆனால், ரத்த நதிகளை அனுமதிக்காவிட்டாலும், அந்த நதிகளின் இரு கரைகளிலும் நிற்பவர்களில் கொடியவர் யார்; கொடுமைப்படுத்தப்படுகிறவர் யார்; சூதர் யார்; சுதந்திரம் வேண்டுபவர் யார்; என்பதை சிந்தித்துப் பார்க்கும் போது புது யுகத்தின் ஆதரவு கொடியவர் பக்கம் நிற்பதில்லை.

ஆகவேதான் விடுதலை வீரர்களின் குறிக்கோளைப் பாராட்டி அந்தக் குறிக்கோளின் கோட்டினிலே குதித்திடத் துடிக்கும் ஏராளமானவர்களை இங்கே - திராவிடத்தில் காணமுடிகிறது.

வீரத்தால் — ஆர்வத்தால் — இவர்கள் வேற்று நாட்டு விடுதலை சேனைகளுக்கு வேறுபட்டவர்களல்ல.

போர் முறையால் மாறுபட்டவர்கள்.

அவர்கள் ஆயுதந்தாங்கிகள் — இவர்கள் அமைதி ஏந்திகள்.

அங்கே விடுதலை உணர்ச்சி, மேடைகள் மூலம், ஏடுகள் மூலம், கலைத்துறைகள் மூலம், மக்களுக்கு ஊட்டப்பட்டது.

இங்கேயும் அப்படித்தான்.

ஆனால் அங்கெல்லாம் விடுதலைக் கிளர்ச்சி நடந்த விதம் வேறு.

இங்கு நடந்திடும் விதமும், வளர்ந்திடும் விதமும் வேறு.

அங்கு மக்களிடத்திலே மூண்டெழுந்த விடுதலை உணர்ச்சி தண்ணீரை விட்டு வெளியே எடுத்த ‘பாஸ்பரஸ்’ போன்றது.

சிலரை விடுதலைக் கிளர்ச்சிக்கு தூண்டவேண்டுமானால் அது கற்பூரத்தைக் கொளுத்துவது போன்று சுலபமான தாயுமிருந்தது.

ஆனால் இங்கே விடுதலையுணர்வை மூட்டிவிடுவது நனைந்துபோன விறகை எரிப்பது போல் அவ்வளவு கஷ்டமானது.

வேதனை—விசாரம்—விம்மல்—விழியிலே நீர்—இவ்வளவுமிருக்கும். ஆனால் இதற்கெல்லாம் காரணம் விடுதலையில்லாமையே என்பதை உணர மாட்டார்கள்—விதியின் தன்மை என்று உரைத்துவிடுவார்கள். இவர்களிடம் விடுதலை வீரர்களுக்கு இரட்டிப்பு வேலை ஏற்படுகிறது. விடுதலைக் கனலை கிளப்புவது ஒன்று! விதி-மாயை-என்ற வேதாந்தத்தை போக்குவது ஒன்று!

அந்த வேதாந்தமென்ன சாதாரணமாகவா அவர்கள் உள்ளத்தில் குடியேறியிருக்கிறது. ஆண்டவன் பெயரால், அவன் அவதார மகிமைகளின் பெயரால் அல்லவா அது மக்கள் மன்றத்திலே கொலுவீற்றிருக்கிறது.

விடுதலைத்தீயைப் பரப்பிட மேடை ஏறினால் அங்கேயும் இரட்டிப்பு வேலைதான்.

“காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” என்று தான் மேடைகள் முழங்கியிருக்கின்றன.

வாழ்வைப்பற்றி கவலைப்பட வேண்டாமென்ற போதனைக்குள்ளானவர்களை வாழ்வின் உண்மை உருவத்தைக் காணச் செய்து, அதன்பிறகு அந்த வாழ்வுக்கு வேண்டிய உரிமைப் போராட்டத்திலே இழுத்துவர வேண்டியிருக்கிறது. இந்த முயற்சியிலே முக்கால் வெற்றியாவது பெற்றிருக்கிறார்கள் விடுதலை வீரர்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.

ஏடுகள் மூலம் எழுச்சி யேற்படுத்துவது விடுதலைப் படையின் முக்கியமான வேலை. அந்த வேலைக்கு இங்கே எத்தனை தடைகள். இங்கிருப்போர் படித்ததெல்லாம் நெப்போலியனும், சேரன் செங்குட்டுவனும் அல்லவே.

நெற்றிக்கண் காட்டும் பரமசிவனும், மாயாஜாலக் கண்ணபிரானும் தானே!

விடுதலைக் காளையரின் ஏடுகள், அந்தப் பழைய குப்பைகளுக்கெல்லாம் தீ மூட்டும் திருப்பணியையும் செய்துகொண்டே திராவிடர் நெஞ்சிலே நுழைய வேண்டியிருக்கிறது.

ராமாயணமும் பாரதமும் சதிராடிய கரங்களிலே இலட்சிய வரலாறும், ஆரிய மாயையும் மின்னிடுகின்றன.

இதுவும் விடுதலைக் கிளர்ச்சியினருக்கு பூரிப்பான சேதிதான்.

கலைத்துறை மூலம் கிளர்ச்சி, விடுதலைக் கிளர்ச்சி மட்டுமல்ல; கலைத்துறையிலேயே புரட்சி நடத்தி விட்டுத்தான் விடுதலைப் போருக்கு கலைத்துறையை பயன்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது, இங்கே.

சுதந்திர ஆர்வத்தை, இன உணர்ச்சியை, மொழிப்பற்றை, தீய்த்திடும் வகையிலேதான் திராவிடத்திலே கலைகள்—வளர்க்கப்பட்டிருக்கின்றன, முன்னேற்பாட்டுடன் முற்றுகையிட்டவர்களால்.

அந்த முற்றுகை தகர்க்கப்பட்ட பிறகுதான் கலைகளையும் கேடயங்களாக ஆக்க முடிகிறது விடுதலைப் பட்டாளத்திற்கு.

அந்த முதல் போராட்டத்திலே நல்லதொரு வெற்றியை திராவிட விடுதலை வீரர்கள் பெற்றிருக்கிறார்கள் கலைத் துறையில்.

சைனா நாட்டு விடுதலைப் போரிலே கலைகள் மூலம்—நாடக மூலம்—வீரர்கட்கு உணர்ச்சி யூட்டப்பட்டது என்கிறார் எழுத்தாளர் டிங்லிங்.

இங்கு கலைகளுக்கே புது உணர்ச்சி ஊட்ட வேண்டிய பொறுப்பை ஏற்கவேண்டி யிருந்தது.

வீரம்—மனிதனுடைய பண்பல்ல. மகேஸ்வரனின் அருளால் கிடைப்பது என்று எண்ணுகிற அளவுக்குத்தான் அன்று கலை வளர்க்கப்பட்டது.

மூவுலகத்தையும் ஆள எண்ணுபவன் முள் முனையிலே நின்று தவம் செய்வான். பரமசிவன் தோன்றுவார். வீர வரம் தருவார். தவசி திக் விஜயம் ஆரம்பிப்பான்.

அரன், அயன், அரி இவர்கள் அருள் பெறுமே அணுகுண்டு உதவியால் உலகத்தை கட்டியாள நினைக்கும் வல்லரசுகள் உலவிடும் இந்த நேரத்திலும், வரம் பெற்றால்தான் படைபலம் பெறமுடியும் என்ற புராணக் கருத்துக்களை நாடகக் கலை மூலம் விளக்கிடவும், அதை நம்பும் போக்கினர் வியந்திடவுமான நிலை இங்கிருந்திடக் காண்கிறோம்.

கயிற்றால் கட்டி இறக்கப்படும் நாடகமேடை பரமசிவனையும், கம்பியால் பிணைத்து காட்சியாகும் கருடவாகனரூடரையும், கண்டவுடனே நாடக மேடை யென்பதை மறந்து கன்னத்தில் போட்டுக் கொண்ட பக்தர்கள் எத்தனை பேர் அன்று! அவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதிலே விடுதலை இயக்கம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் சாதாரணமானவையா?

பலமும், வீரமும் பகவான் தருவதல்ல மனிதப் பண்புதான் என்பதை உணர்த்தி, முதலில் தன்னம்பிக்கையை வளர்த்து, அதன் பிறகு விடுதலைப் போருக்கு அழைத்திடும் இரட்டிப்பு வேலை இங்கும் தேவைப்பட்டது.

ஆனால் அயராமல் அஞ்சாமல் ஆற்றிய பணியின் காரணமாய் வெற்றி விளக்குகள் தென்படுகின்றன விடுதலை வீரர் பாதையில்.

சேக்கிழாரைக் கண்டவர்களிடம் சேரன் செங்குட்டுவனை நிறுத்தி, சத்தியவான் சாவித்திரிகளைக் கண்டவர்களிடம் சந்திரமோகன் சிவாஜிகளை நிறுத்தி புராண போதையை தெளிவித்து புதுமையை நடனமாடவிட்ட பெருமைக்குரியவர்களும், அந்தப் புதுமையை போராட்டத்தின் படைக்கலமாக்கிடும் சிற்பிகளும் திராவிட விடுதலை இயக்கத்தார்தான்.

ஓவியக் கலையிலும் புரட்சி—புதுமை—திராவிட விடுதலைக் கிளர்ச்சிக்கு அதுவும் தேவைப்பட்டது என்று கருதுகிற காரணத்தால்.

தாமரை மலரிலே நின்றிடும் லட்சுமி — பாம்பு மெத்தையில் படுத்திடும் விஷ்ணு — இப்படித்தான் காண முடிந்தது ஓவியங்கள்.

பராந்தகன் படையெடுப்பு ஓவியமாக் வரவில்லை. செங்குட்டுவன் சிரிப்பு—சித்திரமாக காட்டப்படவில்லை. திராவிடத்திலே நடமாடியவர்கள் — நமது மூதாதையர்கள்—எப்படியிருந்திருப்பார்கள் என்று கனவு கண்டு அதை ரசிக்க முடியுமே தவிர முழு மகிழ்ச்சியடைந்திட முடியாது.

கண்டவர் விண்டிலாத, விண்டவர் கண்டிலாத, கடவுளரின் திருவுருவங்களை காமிராவின் உதவியால் கண்டது போல் ஓவியங்களாக்கி காட்டிடுவர்.

கண்ணன், கோவர்த்தனகிரியை விரலால் தூக்கிடுகிறான். சித்திரம் பார்க்கிறோம்.

வீரமா பிறக்கும்? ஆகா ஆண்டவன் செயலே செயல் என்று பக்தி போதையல்லவா உண்டாகும்.

ஆரியப் படை கடந்த நெடுஞ்செழிய பாண்டியனின் வீர உருவத்தையும் அவன் பார்வைபட்டோடும் எதிரிகளையும் படமாக்கித் தந்தால் தேய்ந்து போன திராவிடம் வீரம் பெற்று வீறு கொண்டெழாதா?

இந்தக் கேள்வியின் எதிரொலிதான் திராவிட விடுதலைப் படையினரின் ஓவியக் கலைப் புரட்சி.

வரலாறுகளை விளக்கும் ஓவியங்கள்—வஞ்சகர் வீழ்ந்ததைக் காட்டும் ஓவியங்கள்—வீர உணர்ச்சியைத் தூண்டும் ஓவியங்கள் — என்றிப்படி வளர்ந்திடுகிறது ஓவியக் கலைப் புரட்சி,

பழைய சித்திரங்கள் பலவற்றை அழித்துவிட்டு புது சித்திரம் தீட்டும் இரட்டிப்பு வேலை ஏற்பட்டாலுங்கூட, இந்த வேலையிலும் வெற்றியின் தூதுவராகி விட்டனர் விடுதலைக் கிளர்ச்சியினர்.

குழந்தை தாலாட்டிலிருந்து, வளர்ந்து விட்டவனை வட்டமிடும் சூழ்நிலைகள் எல்லாவற்றிலும் விடுதலை யுணர்வை வீழ்த்திடும் மருந்துகள் கலக்கப்பட்டே யிருந்தன.

அடிபீடத்திலிருந்து புரட்சி நடத்தி — பக்குவப்படுத்திடும் பணி பெரியதுதான். ஆனாலும் விடுதலை இயக்கம் சோர்ந்துவிடவில்லை.

விடுதலை தாகத்தை மறைத்திட மொழியை அழிக்கும் முயற்சி நடைபெற்றது. நடைபெறுகிறது.

உயிர் சிந்தி மொழி காத்து, மொழியையும் ஒரு படைக்கலமாக்கி வீறுகொண்டெழுகின்றனர் விடுதலைச் சேனையினர்.

‘நமஸ்காரம்’—வணக்கமாக மாறிவிட்டது என்றால்—அது சாதாரணம்தான்—அதற்குத் தரப்பட்ட, விலை எவ்வளவு என்பதுதான் சிந்திக்க வேண்டியதொன்று.

இரத்தப் புரட்சி சுலபமானது. எண்ணப் புரட்சி மிக மிக கஷ்டமானது. ஆனாலும் திராவிட விடுதலைப் பாசறையிலே கத்தி தீட்டப்படுவதில்லை. புத்திதான் தீட்டப்படுகிறது.

எண்ணப் புரட்சிதான் நாகரீகமானது என்று அறிவுலகம் தெளிவாகத் தெரிவித்திடுகிறது.

புரட்சி என்றால் ரத்தக் குளம் வெட்டுவதும், அமைதி யென்றால் ஆட்டுக்குட்டியாக மாறிடுவதுமல்ல பொருள்.

விடுதலைக் கிளர்ச்சி வேறு நாடுகளில் நடைபெறுகிறது. நடைபெற்றது.

இங்கும்—திராவிடத்தில் நடைபெறுகிறது.

பல பல போர் முனைகளில் விடுதலை வீரர்கள் குதித்திருக்கின்றனர்.

மொழி காக்க நடைபெற்ற போரிலே குடந்தைத் தெருவிலே ரத்தம் பெருக்கெடுத்தோடியது. அது விடுதலை வீரர்களின் குருதியே தவிர மாற்றாரின் குருதியல்ல. எண்ணப் புரட்சி நடத்தியவர்களை ரத்தவெறி கொண்ட ஆதிக்க சக்தியின் காவலர்கள் எலும்பை யொடித்து இழுத்துச் சென்றனர்.

விளைவு ரத்த ஆறு என்றாலும், முறை விடுதலை வீரர் கையாண்டதல்ல.

வடநாட்டு ஏகாதிபத்ய மூலவர்கள் திராவிடத்தில் பவனி வந்தபோது வெறுப்பைக்காட்ட விடுதலை சேனை திரண்டெழுந்தது.

கோட்டை கொத்தளங்களை இடித்திடக் குமுறிக் கிளம்பவில்லை. கொடியைக் கிழித்து எரித்திடவில்லை. கோட்சேயாக மாறிட யாரும் நினைத்தது கூட இல்லை.

கருப்புக் கொடியைத்தான் காட்டினார்கள். அதுவும் அமைதியான முறையில்.

எண்ணப் புரட்சி நடைபெற்றது. ஆனால் ஏகாதிபத்யத் தூதர்கள் அதை ரத்தப் புரட்சியாக மாற்றிடத் துணிந்தனர். விடுதலை சேனைக்கு அமைதியிலும், அறப்போராட்டத்திலும் இருந்த நம்பிக்கையின் காரணமாக எண்ணப் புரட்சி யென்னும் எல்லைக் கோட்டிலிருந்து அவர்களை ஒரு அங்குலம்கூட வெளியே அகற்றிட முடியவில்லை.

விடுதலைச் சேனையினர் விபரம் தெரிந்தவர்கள், விளக்கம் புரிந்தவர்கள். ஒவ்வொருவரும் விவேக சிந்தாமணிகள்.

எய்தவனிருக்க அம்பை நோவானேன் என்ற உண்மையைப் புரிந்தவர்கள். ஆதிக்க சக்திகள் எப்போதுமே தன் தர்பார் குறைவற நடைபெற பல காவலர்களை வைத்துக் கொண்டிருக்கும். அந்தக் காவலர் அம்புபோன்றவர்கள்கூட அல்ல. வாழ்வை நடத்த வேண்டுமேயென்று கட்டுப்பாடுகளால் பிணைக்கப்பட்டு கடமையாற்றிக் கொண்டிருப்பவர்கள்.

ஆட்சிகள் பல மாறும்; புராணத்திலே வரும் இந்திரர்கள் போல!

அதிகாரிகள் அப்படியே இருப்பர் இந்திராணி போல!

அவர்களைப்பற்றி தப்புக் கணக்குப் போட்டு அவர்கள்மீது பாய்ந்திடுவது அர்த்தமற்றது என்பதை நன்றாக உணர்ந்திருக்கின்றனர் விடுதலைச் சேனையினர்.

உதாரணமாக ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்படுகிறார், கிளர்ச்சிக்கு தடையாயிருந்தார் என்ற காரணத்திற்காக என்று வைத்துக் கொள்வோம்; போலீஸ் அதிகாரியின் சாவு புரட்சிக்கு வெற்றிகரமான முடிவை அளித்துவிடுகிற அளவுக்கு அவ்வளவு முக்கியமானதா?

முக்கியமான தாயிருந்தால்கூட, மனித உணர்ச்சியோடு—பாசம், பரிவு இந்த உணர்வுகளோடு உலகிலே உலவுகிறவர்கள்—அத்தகைய பாசமும் பண்பும் வளரவேண்டும் என்று பாடுபடுகிறவர்கள், ஒரு மனிதன் — தன் இனத்திலேயே ஒரு துளியை — அவனுக்கு மனைவியிருப்பாளே அவள் கதறுவாளே — அவனுக்கு மக்கள் இருப்பார்களே; அனாதைகளாவார்களே — தாய் தந்தையர் தவித்திடுவரே — என்பவைகளைப்பற்றி கவலைப்படாமல் பிணமாக்கும் தொண்டை போர் முறைகளில் ஒன்றெனக் கருதினால், குறி வைத்திடும் லட்சியத்திலிருந்து தங்களை யறியாமல் நழுவுகிறார்கள் என்றுதானே அர்த்தம்.

அதிகாரிகள் நல்லவர்கள் என்ற வக்காலத்து வாங்கிடும் கருத்திலல்ல இதைக் குறிப்பிடுவது.

அவர்கள் தவறான பாதையில் நடந்துவிடலாம். நடந்துவிடலாம் என்பதுகூட முற்றிலும் சரியல்ல; நடத்தப்படுகிறார்கள் ஆட்சிபீட மேறிகளால் என்பதுதான் முழு உண்மையுங்கூட!

புரட்சி விரும்பிகளின் சலனம் செய்யவேண்டிய இடம் ஆட்சிபீடம். அதிகாரிகள் உயிர் மேலல்ல.

ஆட்சி பீடத்தைக் கைப்பற்றுவதும் ‘அவுங்ஸான் மந்திரி சபை’யை மாற்றார் கைப்பற்றிட கையாண்ட முறைகளைப் பின்பற்றி அல்ல.

விழித்தெழுந்த மக்களை விடுதலை சேனையின் பக்கம் திரட்டிட வேண்டும். உறக்கத்திலிருப்பவரை எழுச்சிபெறச் செய்திடவேண்டும்.

மக்கள் மன்றத்தின் தீர்ப்பு பிறகு தீட்டப்பட வேண்டும். வாள் முனையால் அல்ல! பேனா முனையால்!

வேட்டு தந்திட்ட காலம் போய் ஓட்டுச் சீட்டுக்களால் ஒழித்துவிட முடியும் உன்மத்தர்களை என்ற அளவுக்கு நாகரீகம் படர்ந்திருக்கிற காலமிது!

இந்தக் காலத்திலேதான் உலகின் பல முனைகளிலே விடுதலைக் கிளர்ச்சி நடைபெறுகிறது.

அங்கெல்லாம் பல இடங்களில் ஆயுதப் புரட்சி!

இங்கு எண்ணப் புரட்சி!

இதுதான் வேறுபாடு. தேவையான துங்கூட!

★