விடுதலைக் கிளர்ச்சி
கட்டுரைகள் 1 · 1 / 2
★
பத்திரிகைச் செய்தியொன்று, கான்வார் மாவட்டக் கிராமக் காட்டில் நடைபெற்றதாக வெளியாயிற்று அண்மையில்.
துள்ளியோடிய கன்றுக்குட்டி யொன்றை புதரில் பதுங்கியிருந்த வேங்கை துரத்தியதாம்.
அதைத் தாய்ப் பசு கண்டு விட்டதாம். வேங்கையை எதிர்த்துத் துரத்தியதாம். தன் கொம்புகளால் வேங்கையின் பாய்ச்சலைத் தடுக்க முனைந்ததாம்.
“வேங்கையைத் துரத்திய பசு” வேடிக்கையல்ல! உண்மை நிகழ்ச்சி.
வேங்கையைத் துரத்திடும் பசுக்கள் பலவற்றை உலகமெங்கும் காணமுடிகிறது, இப்போது!
பலஹீனனும் சில நேரங்களில் பழிதீர்த்துக் கொள்கிறான். கோழையும் வீரனாகிறான்.
அழுது அழுது, கண்ணீர் காய்ந்து விடுகிறது. கதறிக் கதறி தொண்டையும் அடைத்து விடுகிறது.
பிறகுதான் கதியற்றவன் தன் கைபலத்தை நம்புகிறான். அதன் விளைவுதான் வேங்கையைப் பசு எதிர்க்கும் விசித்திரம்!
நைந்துபோய் நரம்பும் தோலுமான நாடுகள், தங்கள் நகங்களால் வெறி தீரும் மட்டும் ஆணவக்காரர்களை கிழித்து எறிந்திருக்கின்றன.
வேங்கை வீழ்ந்திருக்கிறது; பசு வென்றிருக்கிறது; கன்று காப்பாற்றப்பட்டிருக்கிறது.
இதுதான் விடுதலைக் கிளர்ச்சி. அழுத்தப்பட்டவன் அலட்சியமாகப் பார்த்திடும் பார்வைதான் விடுதலைக் கிளர்ச்சிக்கு நாள் குறித்திடும் தூதுவன்.
ஏழை - கோழை - மோழை - எப்படிப்பட்ட ரகமாயிருந்தாலும் சரி; வேதனையால் அழுத்தப்பட்ட அழுத்தப்பட்ட - பிறகு, நிலைமை வேங்கையும் பசுவும் தான்.
பசுவிடம் விஷமும் வைத்துக்கொண்டாலே வேங்கை விரட்டப்படுகிறது என்றால், யானையின் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டால்?
சிறு சிறு நாடுகளே, ஆதிக்க சக்திகளின் ஆணவத்தை முறிய வைத்திருக்கிறதென்றால், பெரிய நாடு - திராவிட பூமி - ஆதிக்க சக்தியால் அழுத்தப்பட்டால் விளைவு என்ன ஆகும்?
கேள்விக் குறிதான் பதில் கூறவேண்டும்.
கன்றைக் காப்பாற்ற பசு கனல் கக்கியிருக்கிறது.
சிறு நாடுகள் உரிமையைக் காப்பாற்ற சீறி எழுந்திருக்கின்றன.
இதோ பெரும் நாடு - பெருமைமிகு திராவிடம் - வாழ்ந்த வளநாடு - வீரர் கோட்டம் - மறவர் உலவிய மண் - தன் உரிமைகள் அழிக்கப்படுவதைக் கண்டு பொங்கி எழுந்துவிட்டது.
விடுதலைக் கிளர்ச்சியென்னும் இலட்சியக் காதையிலே “வேங்கையை விரட்டும் படலம்” தான் ஆரம்பமாக இருக்கும்.
விளைவைப்பற்றி கவனிப்பது கிடையாது; வெற்றி தோல்வியைக் கணக்குப் போட்டு நடைபெறுவது கிடையாது விடுதலைக் கிளர்ச்சி.
மிதிக்கப்பட்டவர்கள் கொதித்தெழுவார்கள். கொதித்தவர் பக்கத்திலே கடமை செய்வோர் அணி வகுத்து நிற்பார்கள்.
இது வேங்கையை விரட்டும் படலத்திற்கு அடுத்த படலம்.
இந்த அத்தியாயத்திலேதான் எழுத்துக்கள் ரத்தத்திலே தோய்த்து எழுதப்பட்டிருக்கின்றன பல இடங்களில். பல நாடுகளில்.
★
விடுதலைக் கிளர்ச்சி! தலைப்பிலேயே எவ்வளவு எழுச்சி. வீரர்களுக்கு துடிதுடிப்பையும் விவேகிகட்கு தித்திப்பையும் வழங்கிடும் உணர்ச்சிச் சொற்களின் கூட்டு, ஒலிக்கும்போதே புது விறுவிறுப்பை வாரி யிறைக்கிறது. விடுதலைக் கிளர்ச்சி வெறும் எழுத்தாரமல்ல; அந்த சொல்லுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிற உயிர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா! அறுத்துத் தரப்பட்டிருக்கிற நரம்புக் குவியல் அளவில் மிகப் பெரியது! நொறுக்கப்பட்டிருக்கிற எலும்புகளின் தொகை ஏராளம்!
ரத்தச் சகதியிலே விதைக்கப்பட்ட பிணங்கள் தந்த இன்ப அறுவடைதான் விடுதலை! அதற்காக செய்யப்பட்ட உழவு முயற்சிதான் கிளர்ச்சி!
கிளர்ச்சியின்றி விடுதலை கிடைத்தது கிடையாது பெரும்பாலும்; எங்கேயும்; எப்போதுமே!
நாட்டிலே—வீட்டிலே—நடைமுறைகளிலே விடுதலைக்காக கிளர்ச்சிகள் மலர்ந்திருக்கின்றன. நெருப்பிலே விழுந்த புழு, செத்துவிடுவோமென்று தெரிந்தும் துடித்துப் பார்க்கிறது விடுதலைக்காக! தவளையின் வாயிலே சிக்கிய பூச்சி, பாம்பின் பல்லிலே அகப்பட்ட தவளை, கருடன் நகத்திலே மாட்டிய பாம்பு, ஓநாயின் பார்வையில் பட்ட கருடன், கணை விடுவோன் கண்ணிலே வீழ்ந்த ஓநாய், இவை ஒவ்வொன்றுமே விடுதலைக்காகத்தான் போராட்டம் நடத்துகின்றன; இறந்துவிடுவோம் என்பது உறுதியாகத் தெரிந்துங்கூட!
நடைமுறைகள் மட்டுமல்ல; கடவுளரின் நிலைமை கூட இதேதான். கடவுளர் சம்மந்தப்பட்ட ஓவியங்களைக் காணும்போது விடுதலைக்கிளர்ச்சியின் சாயல் அங்கே படர்ந்திருப்பது நன்றாகத் தெரிகிறது. கணபதியின் பருத்த தொந்தியையும், பெருத்த தலையையும் தாங்கமுடியாமல் பெருச்சாளி கஷ்டப்படுகிறது. முருகனின் திருவுருவத்தை சித்தரிக்கும் ஓவியத்திலே மயிலின் காலில் தொங்கும் பாம்பு விடுதலைக்காக கிளர்ச்சி நடத்துகிறது. மயிலோ வள்ளியையும் தெய்வானையையும் சேர்த்து சுமக்க முடியாமல் விடுதலைக் கிளர்ச்சி நடத்துகிறது.
வள்ளி-தெய்வானைகளோ முருகனின் பன்னிரு கைகளின் பலமான அணைப்பை சகிக்க முடியாமல் விடுதலைக் கிளர்ச்சி நடத்துகிறார்கள். முருகனோ; பாவம் பக்தர்களிடமிருந்து விடுதலைபெற கிளர்ச்சி நடத்துகிறார்.
இப்படி-அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் விடுதலைக் கிளர்ச்சியின் நிழல் தெரிந்து கொண்டிருக்கிறது.
பல்வேறிடங்களிலே பல்வேறு பெயர்களிருக்கலாம்; அது மொழி, இடம் இவைகளைப் பொருத்து மாறுபடுமே தவிர தன்மையில் விடுதலைக் கிளர்ச்சியேதான்.
உலகமெனும் சிறையிலே, குடும்பமெனும் செக்கிழுக்கிறேன். இதிலிருந்து விடுதலை கிடையாதா என்று வேதாந்தி அலறுகிறான்.
உலகிலிருந்து விடுதலை பெற்றால் உல்லாசமாய் வாழ்ந்திட வேறோர் உலகு இருப்பதாக அவன் கனவு காண்கிறான். அந்தக் கனவு வெறுங் கற்பனை யென்பதால் நாம், அவனுடைய விடுதலை விருத்தத்தை ஆமோதிப்பதில்லை. ஆட்சேபிக்கவும் செய்கிறோம்.
கூண்டுக் கிளியின் விடுதலைக்காக பூனை போராட்டம் நடத்துகிறது. கிளியின்மேல் உள்ள பாசத்தால் அல்ல; பசியைத் தணித்துக்கொள்ளும் ஆர்வத்தால்! ஆகவே அந்த பயங்கரமான விடுதலை முழக்கத்தை நாம் வரவேற்பதில்லை. கிளியின் விடுதலையும், பூனையின் பசியும் ஏக காலத்தில் கவனிக்கப்படக் கூடிய பிரச்சினையாக ஆவதில்லை நம்மிடையே.
நிரபராதிக் கைதியும், கொலைகாரக் கைதியும் விடுதலையைத்தான் விரும்புகிறார்கள். இங்கே விடுதலைத் தீர்ப்பு மாறிக்கூட வழங்கப்பட்டு விடுகிறது. இதிலே யாருடைய விடுதலை, தேவையானது என்பது முக்கியமே தவிர 'விடுதலை' என்ற வார்த்தையின் வனப்பிலே மயங்கிவிடமுடியாது.
இத்தனை பிரச்சினைகளையும் சிந்தித்துத் தான் உலக வரலாறு தீட்டிக் காட்டும் விடுதலைக் கிளர்ச்சிகளை நம்முன் நிறுத்தி பாடம் பெற முனைகிறோம் நாம். அவைகள் நேரடியாக போதிக்கும் பாடங்களையல்ல; அவைகளைத் துருவி ஆராய்ந்து, நாம் நமக்குத் தயாரித்துக் கொள்ளும் பாடங்களைத்தான் குறிப்பிடுகிறேன்.
மனிதனோடு சேர்ந்து பிறந்திருப்பது விடுதலைக் கிளர்ச்சி. ஞானிகள் போக்கிலே கூறவேண்டுமானால் மனிதன், சிசுவாக கருவில் தவழும்போதே விடுதலைக்கு கிளர்ச்சி நடத்தியிருக்கிறான். அதை யல்ல; நான் குறிப்பிட விரும்புவது, மனிதன், ஒருவனாக, இருவராக, மூவராக, பலராக, சமுதாயமாக, நாடாக, இப்படி ஒவ்வொரு விதமாக மாறிய நேரத்திலும் ஒவ்வொரு வகையிலே விடுதலைக்காக போரிட நேர்ந்திருக்கிறது. அந்தப் போராட்டத்திலே நான் இங்கே விளக்கிட விரும்புவது அதிகமாக நாட்டுப் போராட்டங்களைத்தான்!
அந்த விளக்கத்திலே இரண்டு நாடுகள் மோதிக்கொண்ட கதைகளை மட்டுமல்ல; நாட்டுக்குள்ளேயே எழுந்த நாசக் கும்பல்களை முறியடித்த வெற்றிச் செய்திகளையும் கவனித்திட வேண்டும்.
அமெரிக்கா, கொலம்பஸ் தோண்டிய புதையல்! புதிய நாடு! அங்கே குடியேறியவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்களால் அமெரிக்காவும், அமெரிக்காவால் அவர்களும் வளம்பெறும் வாய்ப்பு மலர்ந்திட்டது. உடனே பிரிட்டன், அவர்களை தனக்கு வரிகட்ட வேண்டுமென்று உத்திரவிட்டது. அவர்கள் மறுத்தனர். வரிகட்ட வேண்டும் என்ற அதிகாரத் தொனியிலிருந்து விடுபெற முயற்சித்தனர். எதிர்த்தனர். வெற்றியும் பெற்றனர். இதுவும் விடுதலைக் கிளர்ச்சிதான்!
குணகோளார்த்தம், குடகோளார்த்தம் என்று பிரிக்கப்படும் உலகத்திலே பெரும்பாலும் குணகோளார்த்தமான கிழக்குப் பகுதியை குடகோளார்த்தம் அடிமையாக்கி வைத்திருந்திருக்கிறது; வைத்துமிருக்கிறது. கிழக்குப்பகுதி, சென்றுபோன நாட்களிலும் சரி - இப்போது சில பகுதிகளும் சரி - அடிமையாக்கப்பட்டும், ஏகாதிபத்தியப் பிடியில் சிக்கியும், காலனிகளாகவும், காமன்வெல்த் போதையில் வீழ்ந்த நிலையிலும் வாழ்ந்திடும் போக்கிலேயே இருந்து வந்திருக்கின்றன.
இருந்து வருகின்றன.
ஆனால் அந்தப் பகுதிகளில் எல்லாம் இப்போது விடுதலை வேட்கை கனிந்த நிலையிலும் அரும்பிய நிலையிலும் காணப்படுகின்றது.
குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவிலே ஏகாதிபத்தியத்தின் முரட்டுப் பாதங்கள் படிந்திருந்த பூமிகளில், அந்த அவமான அடையாளங்கள் கழுவப்பட வேண்டுமென்பதற்காக ரத்த அபிஷேகம் செய்யப்படுகின்ற காட்சிகள் தென்படுகின்றன. வளர்ந்திருக்கும் விடுதலை வேட்கையின் அறிகுறி அது என்பது தெளிவாகவில்லையா?
இந்தக் கிளர்ச்சிகளின் எதிரொலி, அந்தந்த நாட்டு அரண்களோடு அடங்கிவிடவில்லை. அரண்களையும் துளைத்துக்கொண்டு வெகு தூரத்திலுள்ள நாடுகளுக்கெல்லாம் சுதந்திர ஜூவாலை வீசியிருக்கிறது. அப்படி வீசிய காரணத்தால் எழுந்துள்ள தீப்பொறிகளின் எண்ணிக்கையை நினைத்தாலே நெஞ்சினிக்கும். கல்லறைகளாய்-காதலியை இழந்தவர்களாய்-கைம்பெண்களாய்-கண்மணியை இழந்த பெற்றோராய்-அனாதைகளாய்-அபலைகளாய் வீட்டற்றவராய்-ஓடேந்திகளாய்-பலர் ஆக்கப்பட்டாலுங் கூட விடுதலைக் கிளர்ச்சி யென்னும் வளமான சொல்லை, நெஞ்சிலேந்தி யுத்தம் நடத்தும் நாடுகள் எல்லாம் தீயவர் வாழ்வைத் தீய்த்திடும் தீப்பொறிகள்தான்.
அதில் சந்தேகமில்லை; அணுவும் சந்தேகமில்லை.
வேட்டைக் காடுகள் போர்க்களமாகி விட்டன. விடுதலை பேரிகை முழக்கிடும் வீரர் பாசறைகளாகி விட்டன. இதோ இந்தோ சீனா! பிரஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்தோ சீனா மக்கள் கொரில்லா யுத்தம் நடத்துகிறார்கள். இரண்டு லட்சத்து எண்பத்தேழாயிரம் சதுர மைல் பரப்பளவு உள்ளதும், 240 லட்சம் மக்களைக் கொண்டதுமான இந்த நாடு - கொச்சின் சைனா, அன்னாம், டாங்கிங், கம்போடியா, லவோஸ் என்ற பகுதிகளைக் கொண்ட தேசம்—பிரஞ்சு நாட்டுப் பிடியிலே அகப்பட்டிருப்பதை எதிர்த்து டாக்டர் கோசிமின் என்ற தலைவனின் கீழ விடுதலைக் கிளர்ச்சி நடத்துகிறது.
பாவோடாய் என்ற பொம்மை ராஜாவையும் வேறு சில பதுமைகளையும் பிரஞ்சு ஆதிக்கம் தன் சூத்திரக் கயிற்றிலே கட்டிவிட்டு விடுதலை தாகத்தை தடுத்திட முனைகிறது. 45-ம் ஆண்டிலிருந்து இதுவரையிலே லட்சத்து பத்தாயிரம் கோடி பிராங்குகள் செலவிட்டு பிரஞ்சுக் கழுகு யுத்தம் நடத்தியிருக்கிறது இந்தோ சீனாவில்! 52-ம் ஆண்டுக்கு 43 ஆயிரம் கோடி செலவிட திட்டம் தீட்டியிருக்கிறது. இது 45-ம் ஆண்டில் மட்டும் செலவழிக்கப்பட்டதை விட 135 பங்கு அதிகமான தொகையென்று கணக்கிடப்படுகிறது.
பண—பிணம்—இவைகளைக்காட்டி இந்தோ சீனாவின் விடுதலைக் கிளர்ச்சியை முறியடித்துவிடலாமென்று தப்புக் கணக்குப் போடுகிறது பிரஞ்சு ஏகாதிபத்யம். உயிரைச் சிந்திடினும் கவலையில்லை எனக் கங்கணம் கட்டியுள்ள காளையர் விடுதலைக் கிளர்ச்சியின் தூதுவர்களாய் நிற்கின்றார்கள் உலக அரங்கின் முன்னே! இந்தோ சீனாவிலே!
இந்தோனேஷ்யாவிலே நடைபெற்ற விடுதலைப் போரை மறந்துவிட முடியாது. சர்க்கரை, பெட்ரோல், ரப்பர், ஈயம் முதலிய பொருள்களை தமதாக்கிக்கொண்டு கொழுத்துக் கிடந்த டச்சுக்காரரை விரட்டியடிக்கும் பணியிலே விடுதலைக் கிளர்ச்சி மூண்டது இங்கே! பெரும்பாலான முஸ்லீம் மக்களைக் கொண்டதும் மூவாயிரம் சிறு சிறு தீவுகளைக் கொண்டதும் இந்தோனேஷ்யா. ஜாவா, சுமத்ரா முதலிய தீவுகளில் சுதந்திரப் போர் நடத்தி மக்கள் குடியரசை மலரச் செய்தனர்.
டாக்டர் சுகர்னோவும் தலைவரானார். புது வாழ்வு அரும்பியது விடுதலைக் கிளர்ச்சியால்!
ஆப்பிரிக்கக் கடலோர முள்ள பூமி மடகாஸ்கர். புரட்சிகள்—கிளர்ச்சிகள்—சுதந்திர சங்கநாதங்கள் கேட்டிட முடியாத அளவுக்கு வெகு தொலைவில் உள்ள இடம். நீங்கள் நினைக்கிறீர்களா; அங்கே ஒரு விடுதலைக் கிளர்ச்சி நடக்க முடியுமென்று! நடந்திருக்கிறது தோழர்களே; நடந்திருக்கிறது. மடகாஸ்கரில் உள்ள மல்காஷ் மக்கள் பிரஞ்சுக் காலனி ஏகாதிபத்யத்தை எதிர்த்து ஒரு போர்! ஆம் விடுதலைக் கிளர்ச்சி! இது எதைக் காட்டுகிறது? ஆணவக்காரர்களின் ஆதிபத்யம்.- மமதையாளரின் மண்டைத்திமிர்—இனி எங்கேயும் நிலைத்திட முடியாது; தூள் தூளாக ஆக்கப்பட்டுத்தான் தீரும் என்பதைத்தானே!
காலனியினின்றும் விடுபட்ட லிபியா, விடுபடக் கிளர்ச்சி செய்யும் டூனிஸியா இவைகளெல்லாம் விடுதலை கீதத்தின் எழுச்சிமிக்க வரிகள் என்பதை யார்தான் மறுக்கமுடியும். அரபு மக்களின் தனித்த ஆனால் இனித்த வாழ்வுக்காக டூனிஸியாவிலே நடைபெறும் விடுதலைக் கிளர்ச்சி உலக மக்களால் கவனிக்கப்படுகிறது. முற்போக்கு சக்திகளின் அனுதாபத்தைப் பெற்றிடுகிறது.
பெரிய நாடோ சிறிய நாடோ.... பேதமில்லாமல் பேரிகை கொட்டியிருக்கிறது, தளையை அறுத்துக் கொள்வதற்காக. விடுதலைபெற்ற நாடுகளிலே கூட அமுக்கப்படும் சில இனங்கள் தங்கள் விடுதலைக்காகப் போரிடுவதைக் காணமுடிகிறது. உரிமை முழக்கங்கள் ஒலித்திடுவதை கேட்கமுடிகிறது.
1937ல் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டு, 42 முதல் மூன்றாண்டுகள் ஜப்பானியர் ஆதிக்கத்திலிருந்து, பிறகு பிரிட்டிஷ் கையில் மாறி, பின்னர் 1948ல் சுதந்திரக் குடியரசான பர்மாவிலே தனி பூமி கோரி கரேனியர் என்ற மலை வகுப்பினர் கிளர்ச்சி நடத்துகின்றனர். சரியோ, தவறோ விடுதலை ஆர்வம் எப்படியெப்படி, எங்கெங்கே புறப்படுகிறது என்பதை நினைவூட்டவே இதைக் குறிப்பிடுகிறேன்.
மலேயா பிரிட்டிஷ் காலனியிலே சுல்தான் ஆட்சியை பொம்மை ஆட்சியாகக்கொண்டு கட்டுண்டு கிடக்கிற நாடு. அங்கும் மக்களிடையே விடுதலை உணர்ச்சி சுடர் விட்டிருக்கிறது. பிற்போக்கு சக்தியை எதிர்த்து நடத்தும் போராட்டத்திலே மரண மேடையைத் தழுவிடும் பயங்கர தண்டனைகளையும் ஏற்று பலர் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அமெரிக்கக் காலனி பிலிப்பைனிலே காணமுடிகிறது விடுதலைக் கிளர்ச்சியை!
சிலோன் காமன்வெல்த்திடமிருந்து விடுபட வேண்டுமென்று அங்குள்ள மக்கள் எழுப்பும் குரல் நமது காதிலே விழாமலில்லை. இப்போது ராணியாகி விட்ட எலிசபெத், இளவரசிப் பட்டத்தோடு சுற்றுப் பயணம் வரத் திட்டம் போட்ட சமயத்தில் சிலோன் சர்க்கார் எலிசபெத்துக்கு ஒரு வரவேற்பளிக்க தீர்மானித்தனர். அதை மறுத்து மக்கள் நடத்திய கிளர்ச்சியை மறந்துவிட முடியாது நாம்.
பிரிட்டிஷ் தீவுகளைச் சேர்ந்த அயர்லாந்து 1937ல் சுதந்திரம் பெற்றது. பெயரளவிலிருந்த பிரிட்டிஷ் மன்னன் அதிகாரத்தையும் 1949ல் விலக்கிவிட்டு காமன்வெல்த் நாடுகளின் பட்டியலிலிருந்தும் பிரிந்து விட்டது. எப்படிக் கிடைத்தது இந்த சுதந்திரம்!.... விடுதலைக் கிளர்ச்சி தந்த வெகுமானமல்லவா அது!....
இரான் என்றதும் எண்ணெய்க் கிணறுகள் ஞாபகம் வருகிறதே. அந்த எண்ணெயிலே விழுந்த தீப்பொறி இரானிய மக்களின் இதயத் தீயாகமாறி டெஹ்ரான் தலைநகரின் இலட்சிய முரசு கொட்டப்பட்டதை-பிரிட்டிஷ் அமெரிக்க சதிகளை எதிர்த்திடும் மக்கள் சேனையின் உரத்த குரலை விடுதலைக் கிளர்ச்சி யென்று சொல்லாமல் வேறென்ன சொல்வது. யாருடைய நாட்டில் யாருடைய வாணிபச் சந்தை? இப்படி அதட்டிக் கேட்கிறது பாரசீகத்தின் இருதயம்.
நீலநதி அணைத்துக் கிடக்கும் எகிப்து நாடும், பிரிட்டனும் கூட்டு ஆதிக்கம் செய்துவரும் சூடானில் சுதந்திர தாகம் ஏற்பட்டிடக் காண்கிறோம்.
அட்லாண்டிக் கடலிலே மிதந்திடும் ஐஸ்லாந்து டென்மார்க் அரசனுடைய தர்பார் நடைபெற்ற கொலு மண்டபமாயிருந்தது 1944 வரையில். மக்கள் வாக்கெடுப்பு நடைபெற்று சுதந்திரக் குடியரசாக கொடி நாட்டியது. விடுதலைக் கிளர்ச்சியின் விளைவல்லவா அது!
இப்படி உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் முதுகிலே அழுந்தியிருந்த மூர்க்கர்களின் பாதங்களை முழங்காலோடு வெட்டி யெறிந்த விடுதலை யுத்தங்கள் நடைபெற்றிருக்கின்றன.
வரலாற்று சுவடியிலே சிவப்பு எழுத்திலே மின்னிடும் பிரஞ்சுப் புரட்சியும், ரஷ்யப் புரட்சியும் மறுமலர்ச்சி யுகத்திற்கு ஆறுதல் தரும்—ஆர்வ மூட்டும் அற்புதச் செய்திகளாகவும், மதோன்மத்தர்களுக்கு இடியின் உறுமல்களாகவும் தோன்றுவதிலே ஆச்சரியமில்லை.
நாயும் மனிதனும் மாமிசத் துண்டுக்கு சண்டை போட அதைக்கண்டு பிரபுக்கள் சீறிட-மனிதன் மேல் உள்ள கருணையால் வந்த ஆத்திரமல்ல.... நாயின் உணவை மனிதன் பறிக்கிறானே—என்ற கோபத்தால் குதிரைப் படைகளை ஏவிட, தாவிடும் குதிரைகள் தளர்ந்து, போனவர்களின் விலாவிலே குளம்படிகளை பதித்து, எரியும் வயிற்றைக் கிழித்து விழி பிதுங்கச்செய்து, வெருண்டோடிட, அதுகண்டு வெற்றிப் புன்னகையும், வெறிச் சிரிப்பும் முழக்கியவர்களை யெல்லாம் விடுதலைப் போர்க்களத்திலே சந்தித்தனர், பிரஞ்சு மக்கள்.
பசி என்றவருக்கு பாஸ்டிலி சிறை காட்டப்பட்டது. பாஸ்டிலியைக் காட்டியவர்களுக்கு விடுதலைப்போர் படைகளைக் கட்டியது. அதுவும் விரைவாக! வேக வேகமாக!
ரஸ்புடீனின் பயங்கரத் தாடி அசைவை, முகத்திலே உதயமாகும் விகாரக் கீறல்களை, விழியிலே மின்னும் கோரத்தை, விலை மதிக்க முடியாத வித்தகரின் உபதேசமென எண்ணிய ஜார் மன்னனை, அவனுடைய அதிகாரப் புயலை—சர்வாதிகார சூறாவளியை—அவன் வால்பிடித்த வஞ்சகர்களை—மமதையாளரை—மாளிகை வாசிகளை—பிரபுக்களை—பிற்போக்கு சக்திகளை சுக்கல் சுக்கலாக தகர்த்தெறிந்த ரஷ்ய மக்களின் விடுதலைக் கிளர்ச்சி உலக அரங்கிலே பேசப்படாத நேரம் கிடையாது. முதலாளி மூர்ச்சையாகிறான்; மூர்க்கன் முதுகு காட்டுகிறான்; முட்டாளும் தலை நிமிர்கிறான்; கோழையும் கொக்கரிக்கிறான் ரஷ்யப் புரட்சியின் கதையைக் கேட்டால்.
ரஷ்யாவிலே அக்டோபர் புரட்சிக்குப் பின்னும் முதல் உலகப்போர் முடிவுற்ற பிறகும் சீனாவிலே எழுச்சிக் கதிர் படரலாயிற்று.
பிரபுத்துவம், ஏகாதிபத்யம், ராணுவ வெறி, அதிகார போதை இவைகளையெல்லாம் எதிர்த்து தொழிலாளர் எழுந்தனர் சைனாவில்.
1921-ம் ஆண்டில்தான் சைனாவிலே கம்யூனிஸ்டு கட்சி உதயமாயிற்று. முதலிலே அவர்களுக்கு கோமிண்டாங் கட்சியுடன் ஒரு ஐக்கிய முன்னணி அமைப்பது தேவையாயிற்று. 1925-ல் இரண்டாயிரம் பேராக இருந்த விடுதலைக் கிளர்ச்சி வீரர்கள் 1927-ல் முப்பது லட்சம் பேர்கொண்ட அணியாக மாறினார்கள். 37 முதல் 45 வரையிலே சீனாவுக்கும் ஜப்பானுக்கும் போர் நடைபெற்றது. அந்தப் போரிலே ஜப்பானிடமிருந்து சீனா விடுதலை பெற்றது. வெற்றிமாலை சூடியது.
சியாங்கே ஷேக் தலைவராக இருந்தார். ஆம்; கோமிண்டாங் கட்சி ஆட்சி புரிந்தது. 1946-ல் மக்கள் விடுதலை சேனையைவிட கோமிண்டாங் சேனை இரண்டு மடங்கு அதிகமாயிருந்தது.
கோமிண்டாங் கட்சி சர்வாதிகாரக் கட்சியாக ஆட்சி செலுத்தியது. விடுதலை சேனைக்கும் கோமிண்டாங் சேனைக்கும் மோதுதல் ஏற்பட்டது. சர்வாதிகார மொழிந்த மக்களாட்சி தேவையென்று உரத்த குரலெழுப்பியது விடுதலைக் கிளர்ச்சி சேனை. அந்தக் குரல் கோமிண்டாங் கட்சியால் அலட்சியம் செய்யப்பட்டது.
'பெரிய கட்சி நாம்!' என்ற கர்வமும், 'ஆளும் கட்சி நாம்' என்ற அகந்தையும்.
'முதல் கட்சி நாம்தான்' என்ற முரட்டு பிடிவாதமும் கொண்டு மனம் போன போக்கில் முதலாளி வர்க்கத்தின் செல்லப்பிள்ளையாக ஆடினார் சியாங்கே ஷேக்.
அமெரிக்காவின் அன்பும் கடைக்கண் பார்வையும் அமோகமாக இருப்பது ஒன்றே போதுமென எண்ணினார் கோமிண்டாங் தலைவர். ஆகவே அவரையறியாமல் கொடியவரானார். கொந்தளித்தது மக்கள் கடல். சாதாரணமாக அல்ல! உயிரையும் பணயமாக வைத்து!
1949-ம் ஆண்டிலே அக்டோபரில் சீனாவிலே விடுதலைக் கிளர்ச்சி வெற்றி கண்டது. புது வாழ்வு தோன்றியது. புது நிலவு புறப்பட்டது. பூரிப்பு வழிந்தது! சியாங்கே ஷேக் பார்மோசாவுக்கு ஓட நேர்ந்தது. மக்கள் தலைவனாக மாசேதுங். ஆம்; மறுமலர்ச்சித் தூதுவனாக. இது அனைவருக்கும் தெரிந்த வரலாறுதான். ஆனால் இந்த வரலாறு தரும் போதனை என்ன?
கோமிண்டாங் கட்சி வீழ்ந்தது!
ஏன்?
கட்சியின் பெயர் பிடிக்காமலா?
அருமையான பெயர்; கோமிண்டாங் கட்சி என்றாலே புது வாழ்வுக் கட்சி என்று பொருள். பெயர் பிடிக்கவில்லை என்று சொல்வார்களா மக்கள்.
மகிழ்ச்சிகரமான பெயர்.
மனோரம்மியமான மறுமலர்ச்சிப் பெயர்.
எழுச்சிமிக்க வார்த்தை.
சுவையான சொல்.
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் எழுத்துக் கோர்வை.
புது வாழ்வு!
பிடிக்காமலா போய்விடும்! புன்னகை நெளியும் முகத்துடனே, பூரிப்பு பொங்கும் அகத்துடனே வரவேற்றிருப்பாரே மக்கள்.
ஆனால் அந்தக் கட்சியை அழித்தொழிக்க முயன்றிருக்கிறார்கள். ஏன்? கட்சியின் தலைவராக இருந்தவர் சாதாரணமானவரல்லவே!
சன்யாட்சன்!
சைனாவின் ஒளி விளக்கு. சீர்திருத்த ஓவியன். நல்வழி காட்டிய நட்சத்திரம். அவர்தான் தலைவர் புது வாழ்வுக் கட்சிக்கு அன்றொருநாள்! அவர் நடமாடிய கட்சி, நாசமானது. உத்தமர் உலவிய சோலை, பாலையானது. நல்லவர் அமர்ந்திருந்த பூங்காவிலே புயல் நுழைந்தது. கோமிண்டாங் கவிழ்ந்தது. விடுதலைப்போர் வென்றது.
சற்று சிந்தனைக்கு வேலை கொடுங்கள்! அயல் நாடுகளில் திரியவிட்ட விழிகளை இங்கே இழுத்து வாருங்கள். பக்கத்து நாட்டு ஏடுகளில் பாய்ந்திருந்த பார்வையை கொஞ்சம் இங்கே திருப்புங்கள்.
அண்டை நாடு சைனா—அருகே நம் பண்டை நாடு எனச் சொல்லப்படும் இந்துஸ்தான்!
சைனாவிலே ஆளும் கட்சியாக இருந்தது கோமிண்டாங் கட்சி.
இங்கே ஆளும் கட்சியாக இருப்பது காங்கிரஸ் கட்சி.
கோமிண்டாங் கட்சி அழகான பெயர்.
காங்கிரஸ் கட்சியும் அழகான பெயர்தான்!
கோமிண்டாங் தலைவராயிருந்தவர் சன்யாட்சன்.
காங்கிரசின் தலைவராயிருந்தவர் மகாத்மா காந்தி!
சன்யாட்சனின் 'வார்சு' என்று கூறிக்கொண்டவர் சியாங்கே ஷேக்.
காந்தியாரின் 'வார்சு' என்று கூறிக்கொள்பவர்..........??
சொல்ல விரும்பவில்லை, நான்!
சியாங்கே ஷேக் சென்ற இடம் பார்மோசா.
இங்கே! பாவம்; பார்மோசா ஏற்பட வேண்டாம்.
வெளிநாடுகளிலே விழியோட்டிய நேரத்திலே காலனி ஏகாதிபத்யத்தை எதிர்த்தும், முதலாளி வர்க்கத்தை எதிர்த்தும், சுரண்டல் சுகபோகிகளை எதிர்த்தும், பிற்போக்கு சக்திகளை எதிர்த்தும் விடுதலைக் கிளர்ச்சிகள் நடைபெற்றதைக் கண்டோம்.
அது போன்ற ஒருவகைக் கிளர்ச்சி தான் இந்தத் துணைக் கண்டத்திலே நடைபெறுகிறது. அந்தக் கிளர்ச்சி அலட்சியப்படுத்தப்படுகிறது அகம்பாவக்காரர்களால்.
பாகிஸ்தான் வேண்டுமென்ற பரணி பாடப்பட்டு—கேளாக் காதர்களால் கேலி பேசப்பட்டு—'கேடு கெட்டவர்களே! கெடுமதி வேண்டாம்' என்று பயமுறுத்தப்பட்டு, முடிவில் முஸ்லீம்கள் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து விடுபட்டு தனித் தரணி அமைத்துக் கொண்டார்கள்.
தணியாத ஆர்வம்—தளராத கிளர்ச்சி—தடைபடாப் போராட்டம்—இவைகள் தந்த இணையற்ற வெற்றியின் இன்பச் சிந்து இஸ்லாமிய பூமியிலே கேட்கத் துவங்கியது.
அதைத் தொடர்ந்து—இல்லை தோழர்களே; தொடங்கியதே நாம்தான்—துண்டிக்க வேண்டும் திராவிடத்தை வடநாட்டிடமிருந்து, என்று எக்காளமிடுகிறோம்.
இந்த விடுதலைக் கிளர்ச்சிக்கு தரப்பட்டது விளக்கங்கள் மட்டுமல்ல; வீரர் பலரின் வாழ்வையும் தந்திருக்கிறோம்.
தாலமுத்து நடராசன் கல்லறை. கல்லறையிலே சிந்திய கண்ணீர்.
மரத்திலே ஊசலாடவிடப்பட்ட மாவீரன் உடையார்பாளையம் வேலாயுதம்.
மதுரையிலே தூவிவிடப்பட்ட நெருப்பு.
மஜீதின் பிணம்.
தேனீ திருவிளையாடல்.
குன்றத்தூர் துப்பாக்கிப் பிரயோகம்.
குடந்தை வீதியிலே குருதி வெள்ளம்.
கர்பத்தோடு காட்டுக்கு விரட்டப்பட்ட வீரப் பெண்மணி
கொள்கை வீரர்மேல் ஏவிவிடப்பட்ட சென்னை குதிரைப் பட்டாளம் சிந்த வைத்த செந்நீர்.
மொட்டையடித்த குட்டைச் செயல்.
தடையுத்திரவால் தாக்கப்பட்டவர்.
தடியடியால் தழும்பு பெற்றவர்.
இத்தகைய கண்ணீரைப் பெய்ய வைக்கும் கர்ண கடூரச் செய்திகள், திராவிட விடுதலைக் கிளர்ச்சியிலே இடம் பெற்றிருக்கின்றன.
கிளர்ச்சி நடத்தவேண்டும் என்ற ஆசைத் துடிப்பல்ல இதற்குக் காரணம்.
வாழ்ந்திருந்தோம்; வீழ்ந்துபட்டோம் என்று சரித்திர வாக்கியங்களை வைத்துக் கொண்டுதான் நாடு கேட்கிறோம். பிரிவினை கோருகிறோம். ஆண்டவர்கள் மாண்டு விட்டார்கள். ஆளப் பிறந்தவர்கள் நாடு கேட்கிறார்கள். இது தவறு என்று கூறப்படுகிறது. விபரீத—விசித்திர—அதோடு வேதனையான—ஆனால் விளையாட்டுத்தனமாக ஒரு பெரிய பிரச்சினையிலே கண்ணோட்டம் செலுத்திடும் போக்கினர் பலர் இருக்கிறார்கள்.
“மத்ய சர்க்காருடன் தான் இணைந்து வாழ வேண்டும். அப்போது தான் பலம் பொருந்திய நாடாக இருக்க முடியும்.”
இது சிலரது வாதம்.
மத்ய சர்க்காருடன் இணைந்து வாழமுடியாது என்பதற்கு நாம் காட்டியிருக்கும் காரணங்கள் கணக்கிலடங்கா.
அவர்களையே பேசவைத்தோம். அவர்களில் சிலர் நாம் சொல்வதை வேறுபாணியிலே சொன்னார்கள். இப்போதும் சொல்கிறார்கள்.
ஒன்பது லட்சம் டன் உணவு வேண்டும் என்று கேட்டு ஆறு லட்சம்தான் தரமுடியும் என்று மத்ய சர்க்கார் உறுமிடும் வேளையிலே இங்கிருப்போர் நினைக்கமாட்டார்களா, நமது விடுதலைக் கிளர்ச்சியின் பொருளை!
“மாகாண சர்க்காரின்மீது அளவுக்கு மேற்பட்ட அதிகாரம் செலுத்துவதாக இந்திய அரசியலமைப்பின் பிரிவுகள் இருக்கின்றன” என்றும்,
“பலதரப்பட்ட மாற்று உள்ளங்களைக் கொண்ட நாடு முள்ளின் மேலிருப்பது போன்றதாகும்” என்றும்,
“இந்திய அரசியலமைப்புப்படி அதிகாரங்கள், வடக்கே உள்ள இந்துக்கள் வசமே ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன” என்றும்,
அல்லாடி அய்யரின் சஷ்டியப்தபூர்த்தி தர்ம ஸ்தாபன நிதிவிழாவிலே இலங்கைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ஐவார் ஜென்னிங்ஸ்—இந்து பத்திரிகையின் மதிப்புரையிலே, தெளிவான தீர்ப்பு வழங்கும் அறிஞர் என்று பாராட்டப் பெற்றவர்—பேசியிருக்கிறார் என்றால் அப்போது சிந்தித்திருக்கமாட்டார்களா, திராவிட விடுதலைக் கிளர்ச்சியின் உண்மை உருவம் என்னவென்று! சிறுமதி படைத்தவர்களும் உணர்வார்களே; சீற்றத்தைச் சிறிது வெளியே எடுத்து வைத்துவிட்டு அனுமதியை அணைத்தபடி ஆலோசிக்கத் தொடங்கினால்.
சென்னை கடற்கரையிலே எடுக்கப்படும் சங்குகள் வடநாட்டுக்குச் சென்று வளையல்களாக செய்யப்பட்டு திராவிடத்தின் கடைத் தெருவிலே விற்கப்படுகிறது என்பதைக் கேட்கும்போதும். ஆறு லட்சத்திற்கு மேற்பட்ட சங்குகள் ஆண்டுதோறும் இப்படி அனுப்பப்படுகின்றன என்பதை உணரும்போது திராவிடப் பிரிவினைக் கிளர்ச்சி அர்த்தமுள்ளதுதான் என்று புலப்படாமல் போய்விடுமா?
திருவாங்கூர் சமஸ்தானத்திலே ஆல்வாய் என்ற இடத்திலே உரம் தயாரிக்கும் ரசாயனத் தொழிற்சாலை இருக்கிறது. அது சிறியதாயிருக்கிறது என்று பீஹாரில் சிந்தரி என்னுமிடத்திலே புதிதாக பெரியதொரு ரசாயன எரு தொழிற்சாலையை தொடங்கியிருக்கிறார்கள். இங்கே தயாரிக்கப்படும் அல்மோனியம் சல்பேட்டுக்கான ஜிப்சம் என்னும் சுண்ணாம்புச் சத்து பெரும்பகுதி திருச்சியிலிருந்து கிடைக்கிறது.
ஆனால் சிறியதாயிருக்கிற ஆல்வாய் தொழிற்சாலையை விரிவுபடுத்தும் எண்ணமில்லாமல் சிந்தரியிலே புதிதாய் திறப்புவிழா செய்கிறார்கள். இது மட்டுந்தானா?
ஆலை அரசுகள் அங்கே—மக்கள் சாலைச் சருகுகளாய், இங்கே. டாட்டாவும், பாட்டாவும், பிர்லாவும் தென்னாட்டின் பிடரியிலே அமர்ந்து சவாரி செய்கிறார்கள். பணத்தால், பதவியால், திராவிடத்தைத் தேய்த்திடும் தீயபோக்கும், வஞ்சக நோக்கும் கொண்டு தங்கள் ஆதிபத்தியத்தின் வலுவை அதிகப்படுத்தி, டில்லியின் முத்திரை பெறாமல் சென்னை சிரம் தூக்கிடலாகாதெனச் செப்பிடும் செந்தேள் நாக்கினரின் திருவடிகளிலே சரணம் பாடிக்கிடக்கிறது, மரண வாயிலிலும் மாற்றானுக்கு வணங்காத மாசற்ற மரபு.
கோடிக்கணக்கிலே வரியைப் பெற்றும் வாடிக் கிடக்கும் திராவிடத்தை வாழவைக்க மனமில்லாத குள்ளநரிகளிடம் கூடிக் குலாவிடவேண்டுமாம்; குறைமதியினர் கூறுகிறார்கள்! குதர்க்க வாதிகள் அவர்களோடு சேருகிறார்கள்! கொடியவர்களும் துணை போகிறார்கள்! குதூகலம் நல்கும் செய்தியா இது, விடுதலைக் கிளர்ச்சிக்காரர்கட்கு! இல்லைதான். ஆனாலும் விடமுடியாதே; விஷமிகளுக்கு, விபீஷணர்களுக்கு பயந்துகொண்டு, எடுத்த கொள்கையை இந்தோசீனா கண் எதிரே தெரிகிறது; நம் கடமையை உணர்த்துகிறது, இந்தோனேஷ்யா முயற்சி திருவினையாக்கும் என்று முல்லைச் சிரிப்போடு மொழிந்திடுகிறது.
கோமிண்டாங்கை வீழ்த்தி கொடி நாட்டிய சைனா, “தளராதே நடவேகமாய்! புலியென! புயல்போல!” என்று தட்டிக்கொடுக்கிறது.
வெற்றிபெற்ற நாடுகளின் வழிகாட்டியாகக் கொண்டு, விடுதலைக் கிளர்ச்சியிலே வீழ்ந்துவிட்ட நாடானாலும் அதன் வீரத்தை நினைவூட்டி இங்கே விடுதலைக் கிளர்ச்சி நடந்துகொண்டுதானிருக்கிறது.
இன்று இந்தோசீனா! நாளை இந்தோனேஷியாவாக மாறலாம்!
குமுறிவரும் அலைப் பெருக்கை மணல் வீட்டுச் சுவர்களால் தடுக்க நினைப்பது மழலைகளின் வேலை. விளையாட்டுச் செய்கை!
பெரியவர்களே அதில் ஈடுபட்டால் அப்போது மழலை வேலை என்பதல்ல அதற்கு பெயர்; மண்டூகங்களின் வேலையாகிவிடும்.
மணல் சுவர் அமைத்திடும் செயலிலே தான் பலர் இறங்கியிருக்கிறார்கள்.
“திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அல்ல; ஆகையால் திராவிடநாடு கூடாது! திராவிடம் எந்த நூலிலும், எங்கேயும் இல்லாத வார்த்தை; ஆகையால் திராவிட நாடு கூடாது!”
இப்படி ஒரு மறுப்பு கிளம்புகிறது; மணல் வீடு போல!
மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் கவிதையிலே கம்பீரமாக நிற்கிறது, திராவிடம் என்ற தேன் சொல்.
மாமல்லபுரம் கடற்கரைச் சிற்பக் கோயில்களிலே “திராவிட பாணியில் செதுக்கப்பட்டது” என்ற வார்த்தைகள் சிறுநோக்கினரைப் பார்த்து சிரித்திடுகின்றன,
சென்னை கடற்கரை அரசினர் கல்லூரி வாயிலிலே நிற்கும் உ. வெ. சாமிநாத அய்யரின் சிலையிலே முழக்கமிடுகிறது; “திராவிட வித்யாபூஷணம்” என்ற வாக்கியம்.
தாகூரின் தேசிய கீதத்திலே “திராவிட உட்கல வங்க” என்ற அடிகள் நினைப்பூட்டுகின்றன திராவிடத்தை!
கண்டும் காணாதவராய், கேட்டும் கேளாதவராய் நடத்திடும் அரசியல் கூத்தினர் “ஏதப்பா திராவிடம்” எனக் கேட்டு குதி குதித்து முகம் கொப்பளித்துத் துள்ளுகின்றனர்.
பரிதாபந்தான் படவேண்டியிருக்கிறது, விடுதலைக் கிளர்ச்சியின் வழியிலே வீழ்த்திடும் இந்த வீடணர்களை எண்ணி!
“இந்திய யூனியனிலிருந்து பிரிந்தால் வாழ முடியுமா? சிறிய நாடாக ஆகிவிடாதா?”
இப்படி ஒரு மணல்-சுவர் அடுத்தபடியாக!
சிறிய நாடாம், வாழமுடியாதாம், செப்புகிறார்கள் சிந்தை தெளியாதவர்கள்!
முப்பது லட்சம் மக்களைக் கொண்ட அயர்லாந்து தனியாக வாழலாமாம். ஐந்து கோடி பேர் திராவிடர் தனியாக வாழக் கூடாதாம்.
இன்னும் தருகிறேன் பட்டியல். தனியாக வாழும் நாடு பார்த்திடுவீர்! திராவிடத்தரணி கேட்பது நியாயமில்லையா கூறிடுவீர்!!
| நாடு | மக்கள் தொகை | |---|---:| | அர்ஜன்டைனா | 141 லட்சம் | | அல்பேனியா | 10 ,, | | அல்ஸ்டார் | 13 ,, | | ஆஸ்ட்ரியா | 70 ,, | | இந்தோசீனா | 240 ,, | | இராக் | 45 ,, | | இரான் | 150 ,, | | இலங்கை | 62 ,, | | உருகுவே | 22 ,, | | பர்மா | 180 ,, | | செக்கோஸ்லேவேகியா | 120 ,, | | டாமினிகன் ரிபப்ளிக் | 20 ,, | | நிகரா குவா | 10 ,, | | பனமா | 6 ,, | | லிச்டென்ஸ்டீன் | 10 ஆயிரம் | லட்சக்கணக்கானவர் தனியரசில் வாழலாமாம்; பத்தாயிரம்பேர் தனியாக நாடுபெற்று வாழலாமாம். ஐந்து கோடி பேர் அனாதைகளாய் ஆகவேண்டுமாம்.
அதுமட்டுமல்ல; 999 சதுர மைல் பரப்புள்ளதும் இரண்டு லட்சம் மக்களைக்கொண்டதுமான லக்சம்பர்க் தனியாக வாழுகிறது.
இன்னுமொரு வேடிக்கை காணுகிறோம், நாலு சதுர மைல் பரப்புள்ள மொனாகோ, இருபதாயிரம்பேர் கொண்டநாடு தனியாகத்தான் இருக்கிறது, மத்ய தரைக் கடல் ஓரத்திலே!
வேடிக்கையினும் பெரிய வேடிக்கை; ஆயிரம் மக்களைக்கொண்ட (இத்தாலி) வாடிகன் சீட்டி போப்பின் ஆட்சியிலே தனித்து வாழ்கிறது. நாம் ஐந்து கோடிக்கு மேற்பட்டவர் வாழக்கூடாதாம். வடநாட்டின் கூலியாக இருக்கவேண்டுமாம்.
இரண்டாயிரம் ஆண்டுகள் உலகத்திலே தங்கிட இடமின்றி நாடோடிகளாய்த் திரிந்த யூதர்களுக்கு ஒரு தனி நாடு கிடைத்திருக்கிறது. 1914 முதல் 18 வரையிலே நடந்த யுத்தத்தின்போது பால்பர் பிரகடனத்தின் பேரில் பாலஸ்தீனத்தில் குடியேற ஆரம்பித்து, பிறகு ஹிட்லரால் விரட்டப்பட்டவர்களும் ஓடிவந்து கடைசியாக 1948-ல் பாலஸ்தீனிலேயே இஸ்ரேல் என்ற தனி நாட்டை பெற்று விட்டனர். நாடோடிகளாய்த் திரிந்தவர்களுக்கு ஒரு நாடு; நாடாண்டவர்களுக்கு நாடோடியினும் கீழான நிலை!
மீன் பிடிப்பதையும், ஆடு வளர்ப்பதையுமே தொழிலாகக் கொண்டுள்ள ஐஸ்லந்து தனிக் குடியரசு அமைத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் நெல் களஞ்சியமான திராவிடம், எகிப்துநாட்டு வீதிகளிலே முத்தின் ஒளி பரப்பிய திராவிடம், மிளகு உற்பத்தி செய்யும் திராவிடம், தங்கம் தரும் திராவிடம், ரப்பர் வழங்கும் திராவிடம், சந்தனக் காடுகளின் மணம் பரப்பும் திராவிடம், கடற்கரையில் சங்குகளை வாரியிறைக்கும் திராவிடம்,
ஐநூறு மைல் நீளமுள்ள காவேரியும், 1750 மைல் நீளமுள்ள கடற்கரையையும் பெற்றுள்ள திராவிடம், பம்பாய்க்கு அடுத்தபடியாக மின்சாரவசதி படைத்த திராவிடம், ஐம்பது கோடி டன் நிலக்கரியை கடலூர் விருத்தாசலம் பகுதியில் பூமிக்குள்ளே வைத்திருக்கிற திராவிடம், முப்பது கோடி டன் இரும்பை சேலம், திருச்சி மாவட்டங்களில் வைத்து பூட்டியிருக்கிற திராவிடம், இருப்பைப் பிரிக்கும் குரோமைட், சுண்ணாம்புக்கல், இவைகளை அங்கேயே பெற்றிருக்கிற திராவிடம், விசாகையிலே, மாங்கனீசம் உண்டென்று கூறும் திராவிடம், அப்ரகம் அளிக்கும் சேலம், நீலகிரி, கோவை, மலையாளம் ஆகியவைகளை அணைத்திருக்கும் திராவிடம், சேர்வராயன் மலையிலும், நீலகிரி, பழனிமலையிலும், ஆந்திராவிலும் அலுமினியத்தை அளித்திடும் திராவிடம், அணுகுண்டு தயாரிக்கும் தோரியத்தை மணலோடு கலந்து மகிழ்ந்தளிக்கும் திராவிடம்,
தனிக் குடியரசு அமைத்துக்கொள்வது தகாதாம்! தீவு வாழலாமாம். திராவிடம் கூடாதாம்!
லிபியாவின் விடுதலைக் கிளர்ச்சியை ஒத்துக் கொள்வார்கள். டூனிஸியா போரை தட்டிக்கொடுப்பார்கள். ஏன்; டாக்காவிலே நடைபெறும் மொழிக் கிளர்ச்சியைக் கூட ஆதரிப்பார்கள்.
ஆனால் நம்மைதான் நாக்கில் நரம்பின்றி ஏளனம் செய்வார்கள். புதுவிதப் பிறவிகள்!
பர்மாவிலே கரேனியர் தனியிடம் கோருகின்றனர். இதோ, வடகிழக்கு எல்லைப்புற மலைவாசிகள்—நாகர்கள்; நாகாஸ்தான் கேட்கிறார்கள். இரண்டு லட்சம் பேர் கொண்ட இவர்கள் நாகாஸ்தானுக்காக அறப்போர் புரிய ஆயத்தமாகி விட்டார்கள்.
நாமோ, நம்மவராலேயே அலட்சியம் செய்யப்படுகிறோம். ஆஞ்சநேயர்களின் அவதூறுக்கு ஆளாகிறோம். சுக்ரீவர்களின் சொல்லம்பால் தாக்கப்படுகிறோம்.
சியாங்கே ஷேக் நினைத்ததுபோல, பெரிய கட்சி—முதல் கட்சி—ஒரே கட்சி—ஒரே தலைமை—வேறு கட்சி கூடாது - என்ற அகம்பாவ நினைப்பால் திமிர் வெறியால், காங்கிரஸ் ஒன்று தான் கட்சி யென்ற கருத்தற்ற கொள்கை கொண்டவர்கள் காங்கிரசிலே பலர் இருக்கிறார்கள்.
அந்தப் பலரும் நிச்சயமாகத் தோற்றுவிட்டார்கள் தென்னாட்டிலே! ஆம்; தேர்தலிலே!
பொதுத் தேர்தல் கற்பிக்கும் பாடங்களிலே, தென்னாடு, வடநாட்டோடு இணைந்திருக்க விரும்பவில்லை யென்பதும் ஒன்று.
இந்திய யூனியனின் பொதுத் தேர்தலிலே, விந்தியத்திற்கு தெற்கு காங்கிரஸ் முறியடிக்கப்பட்டிருக்கிறது இதற்குப் பொருள் என்ன? டில்லியை தெற்கு விரும்பவில்லை யென்பதுதானே! காங்கிரஸ் ஆட்சிக்கு எதிர்ப்பாக நாடு முழுவதும் தான் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் வடநாட்டிலே காங்கிரஸ் தான் வெற்றி பெற்றிருக்கிறது.
காங்கிரசை எதிர்த்தோர் சிலர், வெற்றி பெற்றிருப்பினும் அவர்களில் பெரும்பாலோர் பிற்போக்கு சக்திகளேதான். இந்த முடிவு எதை விளக்குகிறது.
வடக்கே வளமான நாடு. தெற்கு வறுமைக் காடு. இந்தக் காட்டை அமைத்தோர் டில்லி வாசிகள். ஆகவே அவர்கள் தொடர்பு வேண்டாமெனத் தீர்ப்பு கூறிவிட்டது தென்னாடு. பிற்போக்கு முதலாளிக் கும்பலின் பிடியிலே இருக்க திராவிடம் விரும்பவில்லை. இதைத்தான் தேர்தல் தெளிவாக்குகிறது.
அமெரிக்காவின் விசுவாசப் பிள்ளையாக நடந்துகொள்ள ஆசைப்படுகிறது வடநாட்டு வட்டாரம். டில்லி ஆதிக்கம். அமெரிக்காவிலேயிருந்து இந்திய யூனியனில் பவனி வருகிறவர்கள் உதிர்க்கின்ற உபதேசங்களை கவனித்தால் இந்த உண்மை தெளிவாகிறது. அமெரிக்கா அம்பாசிட்டர் பௌல்ஸ் பேசுகிறார் அந்நியநாட்டு மூலதனம் இந்திய யூனியன் வளத்திற்கு மிக மிக அத்யாவசியமென்று! வந்து போன பிளாக்துரை தன்னை சந்தித்த நிரூபர்களிடத்தில் கொட்டியிருக்கிற வார்த்தைகளே விசித்திரமானவை; ஆபத்தானவை கூட!
அயல் நாட்டின் பணம் இங்கே வந்து சுழல்வது கம்யூனிஸ்ட் அபாயத்தை அதிகப்படுத்தாதா என்ற கருத்தமைந்த கேள்விக்கு அவர் பதில் சொல்லுகிறார், “கம்யூனிஸ்ட் அபாயத்தை ஒழிக்கத்தானே அந்தப் பணம் இங்கு வரவேண்டு மென்கிறேன்” என்ற விதத்திலே!
திருமதி ரூஸ்வெல்ட் இங்கு பேசிய இடமெல்லாம் கம்யூனிசத்தை எப்படி ஒழிப்பது என்பதைத்தான் கவலையோடு சுட்டிக் காட்டியிருக்கிறார்.
