உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

உணர்ச்சிமாலை

பகுதி 7 · 7 / 7

“அதிலும் தோஷமில்லை, யமன், வாயு, இந்திரன் மூவரையும் குந்தி தேவி கையால் தொடவில்லை. குளிகையை சாப்பிட்டாள். அவர்கள் பிரத்யக்ஷமானார்கள் அவள் கும்பிட்டாள். குழந்தைகள் தோன்றினார்கள். இதெல்லாம் தத்துவார்த்த மடா தருதலை !”

* * *

வயதில் பெரியவரை எதிர்த்துப் பேசுவானேன் என்று கேள்வி கேட்ட வாலிபன் திரும்பி விடுகிறான். அல்லது சாக்கடையில் சவ்வாது மணமா கிளம்பும் என்ற திருப்தியோடு பேச்சை முடித்து விடுகிறான்.

ஆனால் ஒன்று...தத்துவார்த்த முக்காடு போட்டு தகராறுப் புராணங்களைக் காப்பாற்றப் புறப்படும் பிரசங்க பூஷணங்கள் ஸ்ரீ ஜத் கோவிந்தராஜ அய்யங்காரால் எழுதப்பட்டு 1937-ல் வெளியிடப்பட்ட வில்லிபாரத வசனம் 43-ம் பக்கத்தைச் சற்றுப்புரட்டிப் பார்க்கட்டும்.

குழந்தை வேண்டி குந்தி குளிகை சாப்பிடுகிறாள். இந்திரன் தோன்றுகிறான். தோன்றியவன் குந்தியைத் தொடாமல். அவள் துவளாமல்... “வரந் தந்தேன்” என்று சொல்லி மறைந்து விட வில்லை. படியுங்கள், அய்யங்காரே கூறுகிறார் அழ்காக! சுவை கூட்டி!

“பீதாம்பரமும் பொன்னாபரணமும் தலையில்

முடியும், வில்லும் தோளும், வேலும் கையும், வீரகண்டையும் விளங்கத் தோன்றிய எழில் தன்னைக் கண்டு மனங்களி கூர்ந்து மங்கை குந்தியும் காமக்கனி யெனக் கட்டி அணைத்தனள். ஏந்தினன் இந்திரன். தாங்கிய கையுடன் தையலைத்தழுவி அமளியிற் கடத்தி அருங் கலையுடனே அணைந்தனன் பன் முறை (ஒரு முறை யல்ல).

இன்பக்கடலில் இறங்கிய மாது அன்பே உருவாய்த் தன் பெருந் தேவுடன் கூடிக் கூடி குலவிக் குலவி ஆடியாடி அகங்களி கூர அவனே தானாய் தானே அவனாய் ஓருருவாகிப் பெருங்களிப்புடனே பெற்றனள் போகம், கலவியிற் களைத்து மண்ணையும் மறந்து தன்னையும் மறந்தாள் !”

மன்னன் பாண்டுவின் மனைவி மாற்றான் மடியிலே இந்த மயக்கம் காணுகிறாள், இதை நமது வைதீகப் பித்தர்களிடம் காட்டினால்...“குடிகேடா ! குருடா ! பத்தினியைப்பழிக்காதேடா !” என்று குதிப்பார்கள், வரத்தால் பிறந்த குழந்தைகளப்பா பாண்டவர்கள் என்று பழைய கள்ளையே புதிய கலயத்தில் ஊற்றி காலக்ஷேபம் செய்வார்கள்.

இந்திரன்-குந்தி இவர்களின் இன்பலோக வர்ணனையை அய்யங்கார் ஒருவரே தீட்டியுள்ளதை நாம் எடுத்து நீட்டினால் “பாரா முகம் உன்னையே” என்று வெறுத்துப் பேசிவிட்டு பாஞ்சாலி, குந்தி சிலைகளுக்கு முன் நின்று “பத்தினியே உன் போல் இத்தரை மீதினில்” என்று பாட ஆரம்பித்து விடுவார்கள்.

என் செய்வது ? எதிர்காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.

பெரியார் ராமசாமி அவர்கள் இளைஞர் ராமசாமியாக இருந்த காலம் வரலாற்று ஆசிரியர்களுக்கு சுவையூட்டும் பகுதி.

பொதுநலவாழ்வில் அவருக்கு கிடைத்த பட்டம் பெரியார். இளமையில்—சுயநல வாழ்வில் ‘மைனர்-காலி’-என்ற மகுடங்கள் ராமசாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்தன. அவருடைய பத்தொன்பதாவது வயதில் நாகம்மையார் வாழ்க்கைத் துணைவியாக வந்து சேர்ந்தார்கள். பருவகால மாறுதல்கள் அவர்களைப் பிணைப்பதற்கு முன் விளையாட்டுப் பருவத்திலேயே அந்தக் கொழுந்து உள்ளங்கள் கூடிக் குலாவிக் கொண்டன,

“நான் உன்னையே மணப்பேன்; வேறு யாரையும் மணக்க மாட்டேன்” இந்த உறுதி தளும்பும் காதல் தொனி அந்த இளம் வீணைகளில் ஒரே சமயத்தில் அதிர்ந்து ஒலித்தது, இராமசாமிக்கு வயது 19! வாலிபம் அவருடைய உடற்கட்டில் நர்த்தனம் செய்த காலம்! ‘பிள்ளையாண்டானுக்கு சீக்கிரத்தில் ஒரு கட்டையைக் கட்டிவிட வேண்டும்’ என்று பெற்றோர்கள் தீர்மானிக்கிற அளவுக்கு வாலிப ராமசாமி “நல்ல பிள்ளை” என்று பெயர் எடுத்தார்.

நாகம்மையின் 13-வது வயதில் பெண் கேட்கப் பலர் வந்துவந்து போயினர். அம்மையாரின் அபிப்பிராயத்தை அசைக்க முடியவில்லை. ராமசாமியின் உருவம் அழியாத ஓவியமாக தன் உள்ளத்தில் தீட்டப்பட்டிருப்பதை அவர்கள் காட்டத் தவறவில்லை. அந்தப் புது மலரைப் பறித்துக்கொண்டுபோக ஒரு ஆசைக்காரத் தாத்தாவும் வந்தார். இரண்டு மனைவிகளை இழந்த அந்தக் கிழம், வாலிப ஒய்யாரங் கொட்டிக் கொண்டு சம்பந்தம் பேச வந்தது, நாகம்மா நெருப்பு மொழிகளை இறைத்தார்கள்.

அந்த அனல் வீச்சில் “மணந்தால் ராமசாமியை மணப்பேன்; இன்றேல் தற்கொலை செய்துகொண்டு இறப்பேன்,” என்ற தீப்பொறிச் சொற்கள் தெரித்துக் கிளம்பி பெற்றோர்களின் பிடிவாதத்தைத் தீய்த்தன, ‘லாயத்திலே தள்ளி அடைக்கப்படும் குதிரைக்கும் கனைத்திட உத்தரவுண்டு’ என்ற புரட்சிக் கவிதைக்கு எடுத்துக்காட்டாக சிறுமி நாகம்மா நின்றார்கள், கிழ மாப்பிள்ளை வந்த வழியே நடையைக் கட்டினார்; 13 வயது சிறுமி தன் வாழ்வைத் தானே பண்படுத்திக் கொண்டார்,

இங்கே ராமசாமியாருக்கு செல்வக் குடும்பங்களில் பெண் தேடினார்கள். “சீமான் வீட்டுச்சிங்காரி தேவை யில்லை. என் சிந்தையில் குடியேறியவள் தான் என் குடும்ப விளக்காக வேண்டும்” என்று கூறி விட்டார் ராமசாமி.

தாய் தந்தையர் முடிவுப்படிதான் மணம் செய்து கொள்ள வேண்டுமென்று, மணமக்களை மந்தை மாடுகள் சேர்ப்பதென எண்ணியிருந்த காலமது. ஆம் 1898! அப்பொழுதே காதல்புரட்சி செய்தவர்கள் ராமசாமி—நாகம்மா!

வெற்றியின் சின்னமாக அவர்கள் திருமணம் அமைந்தது.

வெள்ளத்தினோடொரு வெள்ளமாய்க் கலந்து விட்ட அவர்கள் இன்பவாழ்வு, முப்பத்திஐந்து ஆண்டுகள் நடைபெற்றது. 1933 வரையில்! ராமசாமி-நாகம்மா குடும்ப வாழ்க்கையில் சிந்தனையைக் கிளறும் நிகழ்ச்சிகள்—பகுத்தறிவைத் தூண்டும் பல குறும்புகள்—பெண் உயர்வுக்கான சம்பவங்கள் பல! பல! வாலிப ராமசாமி-வயதேறிய ராமசாமிப் பெரியாராக ஆனகாலத்திலும் அம்மையாரிடம் கொண்டிருந்த அன்பு வரண்டு விடவில்லை. வற்றாத உயிராறாகவே பெருக்கெடுத்தோடியது.

கிழவர் ராமசாமியைப் பார்த்து யாராவது “பெரியவர்; வயதேறியவர்; கிழவர்;” என்று சொன்னால், உடனே அவர் நாகம்மையாரைக் காட்டி “என்னை அப்படிச் சொல்லாதீர்கள் அந்தம்மாளுக்குக் கோபம்வரும்” என்பார். அப்பொழுது பார்க்க வேண்டுமே நாகம்மாவின் ஆனந்தத்தை! அன்பு தவழும் கண்களால் பெரியாரின் வார்த்தையை ஆமோதிப்பார் அம்மையார்! ஆமாம்! அவர்கள் உள்ளத்தால் இளங் காதலர்கள் தான்! இல்லற வாழ்விலும் பொது வாழ்விலும் நீங்காத துணையாக நின்ற நாகம்மையாரை 11-5-1933-ல் பெரியார் இழந்தார்.

ஆனால் அவர் துக்கத்தால் துவண்டு போய்ப் படுத்துவிடவில்லை. மறு நாளே 12-5-1933ல் பெரியார் திருச்சியில் ஒரு கிறிஸ்துவ திருமணத்தை 144 செக்ஷனை மீறி நடத்திவைத்து கைது செய்யப்பட்டார். காதலையும் மீறிய கடமை, பெரியாரின் வாழ்வுக்கே புது இலக்கியம் கோர்த்தது.

[செல்வத்தை நினைக்கையிலே சிந்திய கண்ணீர்த்துளிகள்.]

இருட்டறையில் இருகண்கள் மூடிக்கொண்டு, உருட்டுகின்றார் உலகத்தார் என்றுசொல்வோர் அழுந்தட்டும் அறியாமை ! அதையுணர்த்த முழங்கிற்று பெரியாரின் முரசு ஒலி அவ்வழி வந்தோன்...அன்பன்...தோழன் அருமைச்செல்வம்......அறிவியக்க வீரன் ஞாயிற்றின் நல்லொளியில் ஆயிற்று காலமென்று அகன்றுவிடக் கருக்கல், அங்கே... கிழக்கினில் கிளம்பிய காலைக்கதிரவன் வெடுக்கென வீழ்ந்தான்...கடலில் என்றால், வையம் கலங்காதோ? வாடி வதங்காதோ!

இருள் நீங்கி ஒளிபெறவே இந்நாடு முந்துங்காலை மருள் சூழ்ந்த சாவுமோகம் இளங்கதிரை மறைத்ததுவே!

* * *

குன்றெடுக்கும் நெடுந்தோளான் குலத்தினனே ! கொன்றொழிக்கும் கொடுவாளால்...குள்ளநரி ஆரியத்தை, குலைபிடுங்க குகைவிட்டு வெளிவந்த சிங்க ஏறே ! மலைத்தோளா ! மாணிக்கக் குன்றே ! ப்ழச்சளை. உன்பேச்சு ! பார்வையிலே பனிவீச்சு !

பார்ப்பனீயம் உனைப் பார்த்துவிட்டால் படைகண்ட கோழைபோல் நிலைகுலைந்து போகுமே. நீ போய்விட்டாய்...நின்னொடு நின் புகழ்போமோ ? தீ வைத்தாய் ஆரியக்காட்டில்! அது படபடென வெடிக்கையிலே பார்க்காமல் மறைந்து

பன்னீர்ச்செல்வமே ! உன் பால்வடியும் முகமெங்கே ? பாண்டியன் மீசையெங்கே ! பசியேறிய வெறிகடலின் பாழலைகள் ஓய்ந்தனவா உனைத்தின்று ! விட்டாய். “தின்னட்டும் தின்று மகிழட்டும்...என்னை எண்ணட்டும் திருவிடத்தா’ரென்றே எங்கொளிந்தாய் ? பணத்தினில் பிறந்து பணத்தினில் வளர்ந்தும் பாட்டாளிக் குணத்தினை எங்கனம் கற்றாய் ? கோமானே ! யாம் அழுதழுது உகுத்த கண்ணீர் ஓமான்கடல் ஆயிரத்தை வெற்றி கொள்ளும் ! பழுதற்ற திராவிடப் பொன்னாடு !

ஆரிய மதுவுண்ட மக்களெல்லாம் விழித்தெழுதல் இதுகாண்டல்...நின்பணிக்கு காணிக்கையாம். சுற்றி எதிர்ப்புகள் சூறாவளியாய்ச் சீறிடினும் வெற்றி எமக்கென்றே வெளிக்கிளம்பி விட்டோம் ! பஞ்சைகளல்ல நாங்கள் .......... தஞ்சைக் காவலன் சந்ததியார் ! வீழ்ந்திட நேரிடினும் நின் செயல்பாடி வீழ்ந்திடுவோம்.