திராவிட சம்பத்து
பகுதி 1 · 1 / 2
*
அரசியல் நோயாளிகள்
கண்னை மூடிக்கொண்டே படுத்திருப்பார்கள். திடுக்கென கத்துவார்கள் 'அய்யோ அப்பா' என்று! இப்படி சில அரசியல் நோயாளிகள் இருக்கிறார்கள். நான் நோயாளி என்கிறேன்; அதை அவர்கள் 'ஸ்டண்ட்' என்பார்கள், வாயை மூடி வாலைச்சுருட்டி உட்கார்ந்திருப்பது. எதிர்பாராத நேரத்தில் எழுந்து பாய்வது. அந்தப் பாய்ச்சலிலே பயன் இருந்தால் மேலும் மேலும் தாவுவது, இல்லாவிட்டால் பழைய படியே மரக்கிளையில் தொங்குவது. இது நமது அக்கிரஹாரத்தின் பிரதிநிதி—அம்மாமிகளின் அபிமானச் செல்வன் ஆனந்தவிகடனுக்குப் பழக்கமான சமாச்சாரம்.
வால் ஆடுகிறது
தென்னாட்டுச் செல்வங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தது, நம்மீது ஒரு
பாய்ச்சல் பாய்ந்திருக்கிறது. திராவிட சம்பத்து! என்று தலைப்பு—அதிலே விகடனின் வால் விநோதமாக—விசித்திரமாக—விபரீதமாக ஆடுகிறது,
"மகிஷாசுர மர்த்தனியின் கதை ஒரு பழைய திராவிடக் கதையாக இருந்து புராணம் புகுந்திருக்கும் என ஊகிப்பது தவறாகாது"
இப்படி எழுதியிருக்கிறது முதலில். எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. நாம் படிப்பது ஆனந்தவிகடன் தானே என்று திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டேன்.
'திராவிடக் கதைகளில் புராணம் புகுந்துவிட்டது' இதைச் சொல்வது சாதாரண விஷயமா? அதுவும் விகடன், வேத விற்பன்னர்களின் ஏகக்குரல்—அது எழுதுமா இப்படி? எழுதியிருக்கிறது, எனவே வியப்படைந்தேன்,
'திராவிடக் கதைகளில் புராணம் புகுந்துவிட்டது' எவ்வளவு அற்புதமான உண்மை இதைச் சொன்னதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம். நாம்.
புராணம் புகுந்து விட்டது
திராவிடக் கதைகளில் புராணம் புகுந்துவிட்டது. ஆமாம்; ராமாயணம் திராவிடக் கதை, ராமனுக்கும் ராவணனுக்கும் நடந்த போர் பற்றி எழுந்த திராவிடக் கதை, அதில் புராணம் புகுந்துவிட்டது என்று
கூறினோம். அதை எதிர்த்த கள்; இப்போது விகடன் கூறுகிறது... மகிஷாசுரமர்த்தனி என்ற திராவிடக் கதையில் புராணம் புகுந்துவிட்டது என்று!
நன்றி தெரிவித்துக்கொள்ளுகிறோம்; தாமதமாகவாவது புத்தி வந்ததே என்று! ஆனால் விகடன் அவ்வளவு பைத்தியக்காரனல்லவே......பழைய பழக்கத்தை அறவே விட்டுவிடவில்லை, கட்டுரையின் முடிவிலே கொஞ்சம் விஷத்தையல்லவா .கக்கியிருக்கிறான்.
விஷம வேலை
எங்கே திராவிடக் கதை என்று கூறுவதால் 'திராவிட நாடு!' பிரச்சினைக்கு இடங் கொடுத்துவிடுவோமோ என்று பயந்துகொண்டு "திராவிட சம்பத்து என்றால் அப்படி ஒரு இனம் இருந்ததாகவோ இருக்கிறதாகவோ நாம் ஒப்புக் கொள்ளவில்லை."
விகடனின் விஷமத்தைப் பாருங்கள். "இனவெறிக்கொள்கை, ஒரு மித் (Myth) அதாவது புராணக் கற்பனை என்கிறார்கள் இன்றைய விஞ்ஞான அறிஞர்களும் ஆராய்ச்சியாளரும்."
விஞ்ஞான அறிஞரை, ஆராய்ச்சியாளரை எதற்குப் பயன்படுத்துகிறார் கவனியுங்கள், விகடனார்! இனவெறிக்கொள்கை ஆகாதென்கிறார்களாம் அறிஞர்கள். இந்த வார்த்தைகளை வைத்துக்கொண்டு நம் இனமுழக்கத்தைப் பாழாக்கக் கனவு காண்கிறார் நகைச்சுவை குரங்கார்!
இனவெறி—இனப்பற்று
இனவெறி கூடாதுதான் அதைத்தான் ஆரிய இனத்துக்கு அடிக்கடி சுட்டிக்காட்டி வருகிறோம். மனிதனைத் தொடக்கூடாது என்ற மமதையை—மகேஸ்வரனை நீதான் பூஜை செய்யவேண்டும் என்ற மண்டைத் திமிரை—இனவெறியை—விட்டுவிடு என்று கூறுகிறோம், நமக்கு ஏற்பட்டிருப்பது இனவெறியல்ல இனப்பற்று. இனவெறி...இன்னொரு இனத்தை அழித்து, அடக்கி தன் இனத்தை வளர்ப்பது. இனப்பற்று..தன் இனத்தைப் பாதுகாத்து இன எழுச்சி ஏற்படுத்துவது.
முன்னது ஆரிய முறை. பின்னது திராவிடர் முறை. நம் முறை.
