சிந்தனையும் செயலும்
கட்டுரைகள் 8 · 8 / 50
பிரபுக்கள் சபையின் ஆட்சி,
மக்களாட்சி
எனப் பலவகை ஆட்சிகள் கூறப்படினும்; குறைந்த அளவு தவறுடையதும் - எல்லா மக்களும் ஆட்சியில் பங்கு கொள்வதால் அந்த ஆட்சியில் நியமிக்கப்படும் அதிகாரிகள் தவறிழைத்தால் அவர்களைத் தண்டிக்கவோ, நீக்கவோ வழியுண்டு என்பதுமான - மக்களாட்சி எனும் ஜனநாயக ஆட்சி முறையே சிறந்தது என்ற முடிவை ஏற்றுக்கொள்கிறார் அரிஸ்டாட்டில்.
எனவே இருக்கின்ற ஆட்சிமுறைகளில் சிறந்த முறையெனக் கருதப்பட்டு; கடைப்பிடிக்கப்பட்டு வருகிற ஜனநாயக முறை நமது இந்தியத் திருநாட்டில் செயலாக்கம் பெற்றுள்ள முறையாகும். இந்த முறையிலும் களையென முளைத்துள்ள சீர்கேடுகளை அகற்றிட வேண்டுமேயானால் அதற்கும் அடிப்படையாக அந்த மக்களின் வலிமை அல்லது சக்திதான் தேவைப்படுகிறது. ஏனெனில் அவர்களால் அமைக்கப்பட்ட ஆட்சியில் தோன்றும் அவலங்களை, அறவே போக்கிட அவர்களால்தான் முடியும்.
பெரும்பான்மையோர் எனப்படும் மக்களின் எண்ணிக்கை பலம், எந்தக் கருத்துக்கு அல்லது எவரைத் தேர்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறதோ; அந்தப் பெரும்பான்மை எண்ணிக்கையை ஏற்படுத்தக் கூடியவர்கள் மக்களாகத்தானே இருக்கிறார்கள்.
அவர்களின் எண்ணிக்கையை எடுத்துக்காட்டத்தான் வாக்குச் சாவடிகளில் வாக்குகளைப் பதிவு செய்து அவற்றைக் கணக்கிட வேண்டிய தேர்தல் முறை செயல்படுத்தப்படுகிறது.
அந்த வாக்குச்சாவடிகளில் நுழைவதற்கே; இந்தக் காலத்தில் வாக்காளர்களான மக்களுக்கு வரவேற்புத் தோரணங்கள் அமைத்திட வேண்டியிருக்கிறது.
இதில் கொடுமை என்னவென்றால்; இந்த ஜனநாயகப் பணி ஆற்றுவதை வாக்காளப் பெருமக்களுக்கு வாய்த்திடும் ஒரு நாள் ஊதிய வேலையாகச் சிலர் கருதுவதும், அதற்கும் சிலர் இணங்கி; அதனைப் பெற்றுக்கொண்டு அந்தப் பணியினை
நிறைவேற்றுவதும்தான்! இதில் மறந்து போவதும் - மறந்துவிடுவதும் மக்களாட்சித் தத்துவம் அல்லவா?
“நீ இந்த நாட்டுக்காரன் - இந்த நாட்டில் மத்தியிலோ - மாநிலங்களிலோ - மாநகர் மற்றும் நகரங்கள், பேரூர் சிற்றூர்களிலோ அமைகின்ற ஆட்சி மன்றங்கள் உன்னால்தான் அமைகின்றன - நாட்டின் வளர்ச்சிக்கோ அல்லது தளர்ச்சிக்கோ நீ அளித்திடும் வாக்குத்தான் காரணம் - ”
என்று கூறி எந்த மக்களைக் கொண்டு தேர்தல் நடத்தப்படுகிறதோ; அந்தத் தேர்தலில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் பொறுப்பைத் தட்டிக்கழிப்பவர்கள் அதே மக்கள்தான் என்கிறபோது; ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாகி விடுகிறதல்லவா?
ஓர் அமைப்பை உருவாக்கிட - அந்த அமைப்புக்கு ஒரு தலைமை - ஓர் உறுப்பினர் - தேர்ந்தெடுக்கப்பட நம் கையில் தரப்படும் வாக்குச் சீட்டுக்குள்ள வலிமையையும், மாண்பினையும், நாமே உணரவில்லை எனில் நம்மையும் உள்ளடக்கிய இந்த மக்கள் கூட்டத்திற்கு எள் முனையளவு மதிப்பாவது உண்டென்று கூற முடியுமா?
எனவே மக்கள், தங்களை வெறும் வாக்காளர்களாக மட்டும் கருதிக் கொள்ளாமல்; இந்த நாட்டின் சிற்பிகள், சமுதாயத்தின் காவலர்கள், எதிர்காலத்தை நிர்ணயிக்கும் எந்திரங்கள் - சுருக்கமாகச் சொன்னால் பாரதி மொழிப்படி, “எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்” என்பதை நிலைநாட்ட வேண்டும், நிலைநாட்டியே தீர வேண்டும்.
அப்போதுதான் புழுதுபட்டுக் கொண்டிருக்கும் ஜனநாயகம்;
ஆழ உழுது விளைந்த கதிர் குலுங்கும் கழனியாக மாறும்!
9-5-2005
★★★
“அகில இந்திய அளவில் சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாக்கிட; பிரதமருக்குத் தாங்கள் கடிதம் எழுதியதோடு; 1967ல் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றப்பட்ட அந்த சட்டத்தின் நகல் பிரதியையும் பிரதமருக்கும் பாராளுமன்ற சபாநாயகருக்கும் அனுப்பி வைத்துள்ளதைப் பற்றி “தினமலர்” ஏட்டில் ஒரு கண்டனக் கட்டுரை வெளிவந்துள்ளதே?”
“மிக்க மகிழ்ச்சி! எங்கே இந்த நண்பர்கள், இந்தப் பெரிய செய்தியை இருட்டடிப்பு செய்துவிடுவார்களோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தேன் - மறுப்பு அல்லது கண்டனம் என்ற பெயரிலாவது செய்தியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்களே; அதற்காக இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு! தந்தை பெரியார் அவர்களால் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயமரியாதைத் திருமணத்தை ஆயிரக்கணக்கானவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நானே எனது 60 ஆண்டுக்கால பொதுவாழ்வில் ஆயிரத்துக்குக் குறையாத திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறேன். பெரியாரும் அண்ணாவும் மற்றும் நமதியக்கத் தலைவர்களும் நடத்தி வைத்துள்ள திருமணங்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்குமென்று கணக்கிடவே இயலாது. பல்லாயிரக்கணக்கில் இருக்கும்.
ஆனாலும்; 1967 வரையில் அத்தனை சுயமரியாதைத் திருமணங்களும் சட்ட சம்மதம் பெற்றதாக அங்கீகரிக்கப்படவில்லை. சுமார் 40 ஆண்டுக்காலம் தமிழ்நாட்டில் நடந்த
சுயமரியாதைத் திருமணங்கள் சட்ட சம்மதம் பெறாமல் இருந்து; அதற்காக தி.மு. கழகம் சட்டமன்றத்தில் வாதாடியும் போராடியும்கூட நிறைவேற்றப்படாமல்போன அந்தக் கோரிக்கை; 1967ல் அண்ணா ஆட்சியிலேதான் நிறைவேறியது. அண்ணா அவர்கள், தந்தை பெரியார் அவர்களிடத்திலே கலந்து பேசித்தான் அந்தப் புரட்சிகரமான சட்டத்தைக் கொண்டுவந்து பேரவையிலே நிறைவேற்றினார்.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்து ‘நெஞ்சுக்கு நீதி’ முதல் பாகம் வரலாற்றுப் புத்தகத்தில் நான் எழுதியுள்ள ஒரு பகுதியை நினைவூட்டுகிறேன்.
அது வருமாறு:-
“தந்தை பெரியார் அவர்களே இந்தச் சுயமரியாதைத் திருமண முறையைத் தமிழகத்தில் முதன்முதல் தவழவிட்ட தாய் ஆவார். புரியாத மொழியில் பகுத்தறிவுக்குப் பொருந்தாத சாத்திரச் சடங்குகளுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த பழைய திருமண முறை ஒன்றை புறக்கணித்துவிட்டுப் புரிந்த தாய்மொழியில் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியைக் கூறிக் கொண்டு மந்திரம் ஏதும் ஓதுதல் இன்றி மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டாலே போதும் என்கிற புதிய சீர்திருத்தத் திருமண முறை ஒன்றைத் தோற்றுவித்தார் பெரியார்.
தொடக்கத்தில் இந்தப் புதிய மணமுறைக்கு எழுப்பப்பட்ட தடைச் சுவர்கள், சொல்லடிகள், கல்லடிகள் ஏராளம். அவற்றையெல்லாம் மீறிப் பல்லாயிரக்கணக்கான ஆடவரும் பெண்டிரும் சுயமரியாதைத் திருமண முறைப்படியே தங்கள் இல்லறத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
ஆனால், சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குச் சட்டப்படி சொத்துரிமை முதலான பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. ஒன்றிரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டபோது அத்தகைய திருமணமே செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதுமே சுயமரியாதைத் திருமண முறைக்குச் சட்ட வடிவம் தருவதைத் தனது முக்கியமான செயல் திட்டங்களில் ஒன்றாக மேற்கொண்டது. அதற்குரிய மசோதாவைச் சட்ட அமைச்சர் நண்பர் மாதவன் 1967 ஜூலைத் திங்களில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அவருடைய தலைமையிலேயே அமைந்த ஆய்வுக் குழுவுக்கு அது அனுப்பப்பட்டுப் பின்னர் சட்டமாக நிறைவேறியது.”
