உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

சிந்தனையும் செயலும்

கட்டுரைகள் 7 · 7 / 50

நன்கு கற்றுத் தேறினும் - நற்சான்றுகள் எண்ணற்றவை பெற்றிருப்பினும் - நண்பனையே சில நேரங்களில் குருவாக

பாவித்து ஐயப்பாடுகளை அகற்றிக் கொள்ளும்போதுகூட குருகுல அனுபவத்தைத்தான் அங்கே நாம் காண முடிகிறது.

பெரியார், அண்ணா என கொள்கை போதிக்கும் குருமார்களின் மாற்றத்தை என்னால் ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. இருவரும் ஒரே விதமான பகுத்தறிவு மற்றும் இனமான உணர்வு, பாடத்தைத்தான் போதித்தார்கள். ஆனால் அவற்றை நான் ஆசிரியனாக இருந்து கற்பிக்கும் வாய்ப்பு ஏற்படின் அப்போது கடைப்பிடிக்க வேண்டிய வழியை இருவரும் இருவிதமாகச் சொல்லிக் கொடுத்தார்கள். நோய் போக்கிட ஒரே மருந்து - தேனில் குழைத்துத் தந்திடும் முறையை அண்ணாவும் - எதிலும் குழைக்க வேண்டாம்; அப்படியே சூரணத்தை விழுங்கிடுக என்று பெரியாரும் சொல்லிக் கொடுத்தார்கள்.

இரண்டு முறைகளுமே குருகுலத்துடன் நெருங்கியிருந்து கற்றுக் கொண்டது; மருந்து செய்வது ஒரே முறைதான்! அதை அருந்தும் முறைகள்தான் இருவகை! எனவே, ‘குருகுலம்’ என்பது பழைய பாணி எனத் தோன்றினாலும்; நம்மை ‘அறிவாயுத பாணி’ களாக ஆக்கவல்ல சிறப்புப் பயிற்சி தரக் கூடியதாகும்; என் அனுபவத்தில் கண்ட உண்மை இது!

3-5-2005

★★★

வாக்காளர்கள், மின் இயந்திரங்களின் பொத்தானை அமுக்கி, தாங்கள் விரும்புகிற ஒரு கட்சியின் அல்லது தனிப்பட்ட ஒரு வேட்பாளரின் பெயருக்கு முன்னால் பொறிக்கப்பட்டுள்ள சின்னத்திற்கு வாக்களிப்பது இன்றைக்கு இந்திய நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிற பொதுத் தேர்தல் அல்லது இடைத் தேர்தலுக்கான முறையாகி விட்டிருக்கிறது. குறிப்பிட்ட வயதுடையோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற பொதுவான நிலையில் இந்நாளில் நடைபெறுகிற தேர்தல்கள்; சில பல ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் மட்டுமே கலந்து வாக்களிக்கிற நிலையிலும், பட்டதாரிகள் மட்டுமே வாக்களிக்கிற நிலையிலும், ஒரு வரையறைக்குட்பட்டதாக அமைந்திருந்தது என்பதை மறந்துவிட முடியாது.

உத்திரமேரூர் பட்டயம் என இன்றைக்கும் பேசப்படுகிற அந்தக் காலகட்டத்தில் ஊர்த் தலைவர்களையும், ஊராளும் குழுக்களுக்கான உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க அப்பதவிக்குரிய ஒழுக்கமும் தகுதியும் எத்தகையதாயிருத்தல் வேண்டுமென நிர்ணயித்து, பொது மண்டபத்தில் ஊர்மக்கள்; ஓலைகளில் பெயர்களை எழுதி, அவற்றைக் குடத்திற்குள்ளிட்டு; அதனை எடுத்து எண்ணிக் கணக்கிட்டு தேர்வு பெறுவோர் பெயரை அறிவித்திடும் “குடவோலை” முறை இருந்திருக்கிறது.

எந்த முறையாயினும் அதில் பெரும்பான்மையோர் கருத்து ஏற்கப்பட்ட தேர்தல் முறையானது; எந்த வகையானது என்பதில் மட்டுமே வேறுபாடுகள் கொண்டதாக விளங்கியதே தவிர; பெரும்பான்மையோர் கருத்து அறியும் அடிப்படை மாறிடவில்லை.

வாக்காளர்கள் பட்டியல்களில் வாக்களிப்போர்க்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவம், அதேபோல அந்த வாக்குகளைப் பெறத் தகுதியுடையோர் என்ற பிரதிநிதித்துவம் வாய்ந்த பட்டியல் - அதில் நிலமுடையோர், நிலமில்லாதார், படித்தோர், பாமரர், பட்டதாரிகள், பட்டம் பெறாதோர் என்றெல்லாம் பாகுபாடு செய்து வாக்குரிமை வழங்கப்பட்டோர் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.

அதாவது பெரும்பான்மையான குடி மக்களுக்குக் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் முறை 1952 வரையில் இந்தியத் திருநாட்டில் நீடித்தது எனலாம்.

1950 ஆம் ஆண்டு இந்திய நாடு குடியரசாக அறிவிக்கப்பட்ட பிறகுதான் எல்லா மக்களுமே, சம நிலையில் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்து கொள்ளவும் - அதிலும் குறிப்பாக அண்ணல் அம்பேத்கர் கொடுத்த குரலின் விளைவாக தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதி முறைத் தேர்வும் என விதிமுறையும் வகுக்கப் பெற்றது.

தொல் பழங்காலத்திலிருந்து இதுவரையில் தங்களை வழிநடத்த, தங்களுக்காகக் குரல் கொடுக்க, தங்களைப் பாதுகாக்க, ஒரு தலைவன் வேண்டும் என்ற நிலையும் - அவன் மன்னனாக இருப்பின் அவன் தலைமையில் முடியாட்சி முறையும்; அந்த வரலாறு முடிந்து வந்த நிலையில் மக்களே அரசைத் தேர்வு செய்கின்ற குடியாட்சி முறையும்; என நிலையானதொரு மாற்றம்; இறுதியாக இந்தியாவில் ஏற்பட்டது.

வள்ளுவர் காலத்தில் அல்லது சங்க காலத்தில் முடியாட்சி முறைக்குக் கூறப்பட்ட இலக்கணங்கள்; இன்றைக்குக் குடியாட்சி முறைக்கும் பெரும்பாலும் பொருந்துவனவாக இருப்பதை நோக்குமிடத்து; ஆளுவோர் - ஆளப்படுவோர் எனும் இரு சாராருக்குமிடையே அமைந்திட வேண்டிய அணுகு முறைகளும், அறநெறிகளும் பற்றிப் பெரிதும் பேசப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

எனவே எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஆள விரும்புவோர் - அதற்கு அவர்களை அனுமதிப்போர் என இரு வகையினராக; அதாவது இன்றைய நிலையில்

வேட்பாளர் - அவரது வேட்கையை ஆதரிப்பது அல்லது ஆதரிக்காதது என முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த வாக்காளர் என்ற இரு பிரிவினரின் கையில்தான் “ஜனநாயகம்” எனப்படும் மக்களாட்சித் தத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உணர முடியும்.

உணர்ந்து அதற்கேற்ப நமது வாக்காளப் பெருமக்கள் செயல்படுகிறார்களா அல்லது செயல்பட விடப்படுகிறார்களா என்பதை சிந்தித்துப் பார்த்தால்; மெல்ல மெல்ல ஜனநாயகத்தின் நாடி நரம்புகளில் ஏதோ ஒரு நச்சு மருந்து அதிகார பலம், ஐஸ்வரிய வலிமை, வன்முறை வெறியாட்டம், ஊழல் சக்தி இவைகளின் மூலம் - ஊசி கொண்டு ஏற்றப்படுவதைப்போல ஏற்றப்பட்டு மக்களாட்சித் தத்துவமும், அதை நம்பியிருக்கும் மக்களும் ஏமாற்றப்படுவதை அறிய முடிகிறது! அறிந்து அகம் நோக முடிகிறதேயல்லாமல் வேறெதுவும் செய்ய முடியவில்லை!

மக்களாட்சி யாருக்காக? மக்களுக்காக!

ஆனால் அதனை அமைக்கும் உரிமை, அந்த மக்களிடமிருந்து தந்திரமாக அல்லது தடித்தனமாக பறிக்கப்படுகிறதென்றால்; அப்படிப் பறிக்கப்படாமல் பாதுகாத்திட; அதைப் பறிப்போரை எதிர்த்து மாபெரும் புரட்சி நடத்த மக்கள் தயாராக வேண்டாமா?

மக்களாட்சித் தத்துவம்; மதபேத பித்துக் கொண்ட மதோன்மத்தர்களிடம்,

சர்வாதிகார வெறி பிடித்தோரிடம் தப்பித் தவறி சிக்கிக் கொண்டால்; அதை அந்தக் கொடியவர்களிடமிருந்து விடுவிக்கும் வரையில் “ஜனநாயகத்துக்கு சுதந்திரம் கிடையாது” என்ற உண்மையை ஒவ்வொரு குடிமகனும் உணர்ந்தால்தான்; ஜனநாயகம் உயிர் பெற்றே இருக்க முடியும்! இல்லையேல் அதன் உடலைத்தான் நாறிப்போக விடுத்து நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

7-5-2005

★★★

மக்களால் அந்த மக்களுக்காகவே அமைக்கப்படுகிற மக்களாட்சியை அமைத்திடுகிற பொறுப்பை ஏற்றிருக்கிற மக்கள்; அந்த ஆட்சியை உருவாக்கும் சக்தி, தங்களிடம்தான் இருக்கிறது என்ற உண்மையை; மேடைகளில் யாரோ பேசிடக் கேட்கிறார்கள். ஏடுகளில் அவ்வாறு எழுதியிருப்பதைப் படிக்கிறார்கள். அப்படிக் கேட்கும்போதோ அல்லது படிக்கும்போதோ ஒரு பெருமிதம் அவர்களுக்கு ஏற்படுவதாகத் தெரியவில்லை.

அதைவிட இன்னும் பெரிய வேதனை என்னவென்றால், அவர்களிடமுள்ள அந்த மகத்தான சக்தியை அவர்கள் வெளிப்படுத்தவோ, அல்லது பயன்படுத்தவோகூட அவர்களாக விரும்பி முன்வருவதில்லை என்பதை மிகுந்த வெட்கத்துடன் அந்த மக்கள் கூட்டத்தில் நானும் ஒரு துளி என்ற நிலையில் எண்ணிப் பார்க்கிறேன்.

மக்கள் சக்தியின் மாண்பு இவ்வாறு மங்கிப் போனதற்குக் காரணம் என்ன? மக்களாட்சி எனும் மண்டபம் கட்டுவதற்காக அவர்கள் தேர்வு செய்து நட்ட தூண்கள் சில ஆட்டம் கண்டு விடுவதும்; சில தரையில் பிடிப்பின்றித் தடுமாறுவதும்; சில தூண்கள் தம்மைத் தேர்வு செய்து பொருத்தியவர்களின் தலையிலேயே பலமாக இடித்து விடுவதும்தான் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.

மன்னராட்சி,

ஏகேச்சாதிகார ஆட்சி,