உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

சிந்தனையும் செயலும்

கட்டுரைகள் 3 · 3 / 50

அண்ணா அறிவாலயத்திலிருந்து வீடு வந்து சேரும் வரையில், காரில் என் கவனம் அந்தத் தாளின் மீதே இருந்தது. திரைப்படக் காட்சிகளில் தெரிவது போல அந்த இளைஞனின் முகமும் தாளில் நிழலாடியது.

வியப்பு! வியப்பு! அதுவும் விரிவடைந்த வண்ணம்! அடடே; குடியரசுத் தலைவர் அறிவுரைப்படி நடப்பதற்காக அவன் உறங்குவது மட்டுமல்ல; என்னையுமல்லவா உறங்கச் சொல்லி மறைமுகமாக உபதேசம் செய்கிறான்.

உறங்காமல் நான் உழைக்கிறேன் என்பது பெரும்பாலும் எழுதுகிற பணி - மக்களைச் சந்திக்கப் பயணம் செய்கிற பணி - இவைபோன்ற பணிகளையாற்றும்போதுதானே!

ஊரும் உலகமும் உறங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் அண்ணா உட்கார்ந்து எழுதிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். அப்படியே பழகிக் கொண்டுமிருக்கிறேன். வைகறை தலைகாட்டி; “வை பேனாவை கீழே” என்று வாங்கி வைக்கிற வரையில் எழுதுவதிலே இருக்கிற நிம்மதி - உற்சாகம் - வேறு எப்போதும் இருப்பதில்லை.

இளங்காற்று தவழ்ந்து வரும் அந்த மெல்லிய ஒலியைத் தவிர; வேறு எந்த ஓசையுமற்ற இயற்கையான அமைதி; எழுதுவதற்கு எவ்வளவு பெரிய ஊக்குவிப்பு தெரியுமா ?

அண்ணா வாயிலாக அதையும் பழகியிருக்கிறேன் - அமளி துமளி, சாலையில் வாகனங்கள் போகும் பேரொலி - அச்சகத்தில் அங்குமிங்கும் ஆள் நடமாட்டம் - பார்வையாளர்கள் கூட்டம் - அவற்றுக்கிடையே அய்யா பெரியார் அமர்ந்து அசைவின்றி எழுதிக் குவிப்பாரே; அப்படியும் பழகியிருக்கிறேன் - அதையும் அருகிலிருந்து பகலிலும், இரவிலும் ஈரோடு ‘குடியரசு’ அலுவலகத்தில் பார்த்துப் பார்த்து!

வேறுபாடான இந்த இரண்டும் தெளிவாக்குவது என்ன ? பூங்கா வழிப் பயணத்துக்கு மட்டுமல்ல; புதர் மண்டி புயல் வீசும் காட்டுப் பயணத்துக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான்!

மாண்புமிகு அப்துல் கலாம்; “இளைஞர்கள் கனவு காண வேண்டும்” என்று சொன்னதை இந்தச் சின்னத் தம்பி அப்படியே நேரடியாகப் பொருள் கொண்டு விட்டான்!

“திட்டினாயே, அதைத் திரும்பப் பெற்றுக் கொள்” என்றால்; அந்தச் சொற்களைக் கையால் எடுத்து, திட்டு வாங்கியவர் கையிலே கொடுத்து; திட்டியவர் அவர் கையால் அவற்றைப் பெற்றுக் கொள்வது என்று பொருள் அல்ல - திரும்பப் பெற்றுக் கொள்வதாக வாய்மொழியாகத் தெரிவித்தாலே இவ்வளவு காரியங்களும் நடைபெற்றதாகத்தான் கருதிட வேண்டும்.

‘விழி! எழு! உணர்வு கொள்!’ என்றால் தூங்கிக் கொண்டு இருப்பவரைத் தட்டி எழுப்பிச் சொல்லும் வார்த்தைகள் என்று யாரும் கருதுவதில்லை; சமுதாயத்தில் விழிப்புணர்வையும் வீரத்தையும் ஊட்டி, அடிமை விலங்கொடிக்க ஆர்த்தெழச் செய்திடும் ஆணையாகவே கருதப்படுகிறது.

அதேபோலத்தான், அப்துல் கலாம் அவர்கள்; “இளைஞர்களே! தாலாட்டுப் பாடுகிறேன்; உறங்குக! பின்னர் என் தாலாட்டு கேட்டு உறங்கும்போது எதிர் காலம் பற்றிக் கனவு காண்க!”

என்று சொல்லவில்லை.

“கனவு காண்க என்பதற்கு சிந்தனை செய்க - சிந்தித்துச் செயல்படுக!” என்பன போன்ற பொருள்களே பொருந்துவனவாகும்.

இளைஞர்கள் காணும் கனவுகள் வித்தியாசமாக இருக்கும் - அப்படித்தான் இருக்க வேண்டும் - அப்போதுதான் பலவிதத் தேவைகள் உள்ள இந்தத் தேசத்துக்கு அந்தக் கனவுகளின் பலன்கள் பரிபூரணமாகும்.

இளைஞர்கள் அறிவுலக மேதைகளாகக் கனவு காணலாம் - அற்புதமான பொறியாளராக - ஆரோக்கியமிக்க சமுதாயத்தை உருவாக்கும் மருத்துவராக - வரலாறு படைப்பவராக - வரம்பிலா வானத்தை, வற்றாத கடலை ஆராய்பவராக - சாதி மத பேதங்களற்ற சமத்துவ சீலராக -

கவிஞராக - ஓவியராக - கல்லில் சிலை வடிப்பவராக - ஆக்கப்பூர்வப் பணிகளில் அக்கறை கொண்ட அரசியல்வாதியாக - புலவராக - புரவலராக - ஒளிர வேண்டுமெனக் கனவு காணலாம்.

முதல் கனவு; இளமையில் நான் காண விரும்பாத கனவு - கல்லூரி வரையில் படிக்க வேண்டும் - அது கலைந்த கனவாகவே ஆகிவிட்டது - என் மொழி, இனம், நாடு, மக்கள் இவற்றின் ஏற்றமே எப்போதும் என் கலையாத கனவாகி விட்டது - இப்படிக் கனவு காண்போர் சமுதாயத்தில் விதி விலக்குகளாகத்தான் “ஏற்பு முத்திரை” குத்திக் கொள்ள முடியும்.

நன்கு கற்றுத் தெளிந்து தேர்ந்து நாம் ஈடுபாடு கொண்ட துறையில் நடு நின்ற நாயகமாய் நாடு போற்றத் திகழ்வோம்; என்பதே ஒவ்வொரு இளைஞனும் காண வேண்டிய கனவு - அந்தக் கனவு காண்பதற்காக உறங்க வேண்டிய அவசியமில்லை - மாறாக; அந்தக் கனவு கண்டிட விழித்தெழுக! விழித்தெழுந்தால் மட்டுமே; கனவுகள் நிறைவேறும் - எதைப் பற்றியும் கனவு காண்பது எளிது; அந்தக் கனவு, கடின உழைப்பின்றி நிறைவேறும் என்பது அரிது!

எனக்கு மிகவும் பிடித்த பொன்மொழிகளில் ஒன்று; “நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக உயரம் தாண்ட முடியும்” என்பதாகும்.

அன்புள்ள,

மு.க.

29-4-2005

★★★

‘புரட்சி’ - மேலுதடு, கீழ் உதடு இரண்டு உதடுகளாலும் அழுத்தப்பட்டு; அதை மீறிக் கொண்டு வெளிக் கிளம்பி; நாவினால் பல் வரிசையை முரசு அடிப்பது போல் தட்டிக் கொண்டு என் பெயர் உச்சரிக்கப்படும் பொழுதே அதிலே ஓர் உத்வேகம்!

சிகப்பு உடையை அணிந்துகொண்டு நான் வெளிக் கிளம்பினாலே; என்னைச் சுற்றிக் கிழிசல் உடைகளும், கந்தல் உடைகளும், கைகளையே கட்டாரிகளாக உயர்த்திக் கொண்டு வர; அவற்றையெல்லாம் காராக்கிரகத்தில் தள்ளுவாயா? கடும் தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்குவாயா? கணத்தில் முடிந்துபோகும் மரண தண்டனையை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்று வரலாற்றில் இடம் பெறுவேன் என்பதற்காக அந்தத் தண்டனையைத் தந்திடுவாயா? எப்படியோ; என் பெயர் புரட்சி என்பதற்குப் பொருத்தமான தண்டனையை எனக்கு அளித்திடு!

பிரான்சு நாட்டில் லூயி மன்னனுக்கு எதிராக நான் பொங்கியெழுந்தபோது முதலில் இரக்கம் எனும் ஒரு பொருளை; கல்லறையில் புதைத்துவிட்டு; அதன் பிறகே அன்றிருந்த ஆதிக்க வர்க்கத்தை “கில்லட்டின்” கருவியின் முன்னே நிறுத்தினேன்.

இல்லையேல்; அந்த அதிகார வெறியர்களை மடக்கிப் பிடித்து, மரணப் படுகுழியில் தள்ளுவதற்கு முன்பே; “அய்யோ பாவம்; பன்னீரில் குளித்தவனாயிற்றே; இன்று செந்நீரில் குளித்திட வேண்டியிருக்குமே! பாவையரைப் பதுமைகளாக்கிப் படுக்கையறையில் விளையாடுபவனாயிற்றே; இன்று அவனை சாவு மென்று தின்னும்போது, பழைய நினைவுகளால் பாவம்

துவண்டு போவானே! மதுவை அவன் குடிக்கிறானா; அல்லது மதுதான் அவனைக் குடிக்கிறதா என மலைத்திடும் அளவுக்கு, மங்கையர் மடியில், தோளில், தொடையில், தொட்டுக் கொண்டும், ஒட்டிக் கொண்டும் கிடப்பவனாயிற்றே; வெட்டுப் பாறையில் “கில்லட்டின்” அவனைத் துண்டாக்கப் போவதை நினைத்தாலே; துடித்துப் போவானே!”

இப்படியெல்லாம் உருகிடும் நிலைமை எனக்கு ஏற்பட்டால்; எனக்குப் புரட்சியெனும் பெயரே பொருந்தாது!